சாலைகள் மோசமாக இருந்தால்தான் விபத்துகள் நிகழும் என்பது மாறி, சாலைகள் தரமானதாக இருந்தாலும் கோரமான விபத்துகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. விபத்தில் 10 பேர், 15 பேர் என கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பலியாவது வேதனையை அளிக்கிறது.
தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இப்போது நான்குவழிச் சாலைப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பளபளக்கும் சாலையில் வாகன ஓட்டுநர்கள் விவேகத்தை இழந்து அசுர வேகத்தில் செல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன.
விபத்துகளால் சொந்தங்களை இழந்தவர்களின் சோகத்துக்கு எதுவுமே ஈடில்லை. பொருளாதாரத்துக்கே ஆதாரமாக இருப்பவர்களை விபத்தில் பலிகொடுத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்கள். வாழ வேண்டிய வயதில் விபத்தில் சிக்கித் தாங்களும் பலியாகி குடும்பத்தினரின் நிம்மதியையும் நிரந்தரமாகத் தொலைக்கும் இளைஞர்கள். இப்படியாக விபத்து எழுதும் சோகக் கதைகள் ஆயிரம் ஆயிரம். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மட்டும்தான் சோகம் என்றில்லை. பலத்த காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து பாதிக்கப்படுவோரின் குடும்பங்களுக்கும் பேரிழப்பு. உடல்ரீதியான பாதிப்பு மட்டுமன்றி, மருத்துவச் செலவு, வேலைக்குச் செல்ல முடியாததால் ஏற்படும் இழப்பு என அந்தக் குடும்பமே நிர்கதியாகிவிடும்.
விபத்துகள் எதிர்பாராமல் நிகழ்பவைதாம். ஆனால், பெரும்பாலான விபத்துகளின் காரணங்களை ஆராய்ந்தால் மனிதத் தவறுகளே காரணம் எனத் தெரியவரும். வேகமாக வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, சரியான தூக்கமின்றி தொடர்ச்சியாக வாகனங்களைச் செலுத்துவது... இவை போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
அண்மையில் தருமபுரி அருகே மினி லாரியும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 18 பேர் பலியாயினர். மினி லாரி ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் அந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்தது.
முதலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மினி லாரியில் ஆள்கள் ஏறியது தவறு; ஓட்டுநர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும் அவரை வாகனத்தை இயக்க அனுமதித்தது அடுத்த தவறு. இப்படி தவறுகளை எல்லாம் நம் பக்கம் வைத்துக்கொண்டு விபத்து விபத்து என்று அரற்றுவதில் அர்த்தமில்லை.
ஆளில்லா ரயில்வே கேட்டில் விபத்துகள் தொடர்வது அவலத்திலும் அவலம். அத்தனை பெரிய ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடந்துசெல்ல முயன்று விபத்தில் சிக்குவதைப் போன்ற அறிவீனம் எதுவும் இல்லை.
ஒரு விபத்தில் இருந்து ஓராயிரம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், யாருக்கோ வந்த விதியாகத்தான் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஒரு ஆட்டோவில் 10-க்கு மேற்பட்டோர் செல்வது, படிகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வது என்று அத்துமீறுவதில் மக்களுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை.
சாலைவிதிகளை மீறுவதுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம். சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வது, அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் செல்லுவது, மிக வேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்துக் காவலர்கள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அளவுக்கு அதிகமாக ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது எனும் உத்தரவை காவல்துறை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஆட்டோவில் 5 பேருக்குமேல் ஏற்றினால் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோரும் உறுதியாக இருக்க வேண்டும்.
விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரி வாகனங்களை 50 கி.மீ. வேகத்துக்குமேல் இயக்க முடியாதவாறு வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் விபத்துகளை நிச்சயம் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இந்தக் கட்டுப்பாட்டை பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்துக்குமே நிர்ணயிக்க வேண்டும்.
மொத்தத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் ஏராளமான விபத்துகளைத் தவிர்த்துவிடலாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லத் தனி வாகனம் ஏற்பாடு செய்தால், அந்த வாகன ஓட்டுநருக்குப் போதிய ஓய்வு அளித்து வாகனத்தை இயக்கச் செய்ய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.
நடந்து சென்றாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி போக்குவரத்து சிக்னல்களை மதித்துச் செல்ல வேண்டும். அவ்வாறே மதிக்க பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பேருந்தில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோமே... அந்தப் பேருந்து அதிவேகமாகச் சென்றால், அவ்வாறு செல்லக் கூடாது என தைரியமாக ஓட்டுநருக்கு அறிவுறுத்த வேண்டும்.
விபத்துகளைச் சட்டம் போட்டுத் தடுத்து நிறுத்திவிட முடியாது. சுயக் கட்டுப்பாடு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுகளால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||