இதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த சமச்சீர் கல்வியை, ஒருவழியாக, களத்தில் இறக்கியுள்ளது தமிழக அரசு; பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.ஆனால், சமச்சீர் கல்வி என்ற பெயரில் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வளர்ந்து விட முடியுமா?
ஆசிரியர் தரம், பள்ளியின் தரத்தை மேம்படுத்தாமல், பாடத்திட்டத்தில் மட்டும் மாற்றத்தை கொண்டு வருவது, மரத்தின் ஆணிவேர் அழுகிக் கிடக்கும் போது, அதன் கிளைகளுக்கு மட்டும் மருந்தடிக்கும் வெளிப்பூச்சு வேலையல்லவா!தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பிற்கு கூட, டிகிரி படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில்... எட்டாம் வகுப்பு நடத்துவதற்கான தகுதியே, பிளஸ் 2 முடித்து, செகண்டரி கிரேடு ஆசிரியர் பயிற்சி பெறுவது தான்!உதாரணத்திற்கு, பட்டப் படிப்பில் வேதியியலை முக்கியப் பாடமாக எடுத்து படித்த ஆசிரியர், தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவனுக்கு, வேதியியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பார். அதே பாடத்திட்டத்தை, அரசு பள்ளி ஆசிரியர் நடத்தும் போது, அதன் தரத்தைப் பற்றி சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலை இருப்பின், சமச்சீர் கல்வி என்பது கண்துடைப்பாகவே இருக்கும்.
ஆக, அரசு பள்ளி மாணவன் வழக்கம் போல, அரசு பள்ளி மாணவனாகவே இருப்பான்; தனியார் பள்ளி மாணவனும் அப்படியே! ஆனால், அதற்கு பெயர் மட்டும் சமச்சீர் கல்வி.ஆசிரியர் பணிக்கு, வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அப்படி வருபவர்கள், 40 வயதை கடந்தவர்கள் என்பதோடு, அவர்களில் பெரும்பாலானோர், வேறு வேறு பணிகளிலும், சுயதொழில் செய்து கொண்டும், வீட்டிலும் இருந்துவிட்டு, இப்பணிக்கு வருகின்றனர். இதனால், தற்போதுள்ள சூழலுக்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வதில், பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க, இவர்களிடம் கற்கும் மாணவர்கள் நிலை?அடுத்து, ஓராசிரியர், ஈராசியர் மட்டும் கொண்டு செயல்படும் பள்ளிகள்! இப்படிப்பட்ட பள்ளிகளில், அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடத்தையும் ஒரே ஆசிரியர் தான் நடத்துகிறார். அனைத்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் எடுக்கும் போது, அங்கு படிக்கும் மாணவர்களின் நிலையை சொல்லிப் புரிய வைக்கத் தேவையில்லை. ஆக, அடிப்படைக் கல்வியிலேயே அவனுக்கு அடி!
இவ்வளவு ஏன்... வகுப்பறைகளே சரியாக இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தும் கொடுமையும் நடக்கிறது. வகுப்பறையே கேள்விக்குறி என்றால், வேறு எந்த வசதியை அப்பள்ளியில் எதிர்பார்க்க முடியும். இதுபோன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பாடத்திட்டத்தை மாற்றுவதால் மட்டும், எப்படி தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இணையாக முடியும்?நடப்பாண்டில், முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, அனைத்து வகுப்புகளுக்குமே சமச்சீர் கல்வி முறை பாடத்திட்டமாக அமையப் போகிறது. இது, மேலோட்டமாக பார்த்தால் எளிதாகவே தோன்றும்.ஆனால், 9ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவனுக்கு, பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, திடீரென, 10ம் வகுப்பில், சமச்சீர் கல்வியை கொண்டு வந்தால், அவனால், அதை எப்படி உள்வாங்க முடியும்? மனனம் செய்து மதிப்பெண் பெறலாம்; ஆனால், அதன் தரம் உண்மையாகவே அவனைப் போய் சேருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே!
அடுத்து, அரசு பள்ளி மாணவர்களையே எடுத்துக் கொண்டாலும், சென்னையில் பயிலும் ஒரு அரசு பள்ளி மாணவனுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள மலை கிராமத்தில் பயிலும் மலைவாழ் கிராம மாணவனுக்கும் இடையிலேயே பெரும் வேறுபாடு காணப்படுகிறதே! வறுமை, குடும்பப் பின்னணி போன்ற இன்ன பிறவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டாமா?உதாரணமாக, சென்னையில் ஆறாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவனிடம் ஒபாமாவை பற்றிக் கூறினால், அவனுக்கு தெரிந்திருக்கவாவது வாய்ப்புண்டு. ஆனால், மலைவாழ் கிராமப்புற மாணவர்கள் எத்தனை பேருக்கு ஒபாமாவைத் தெரியும் என்பது அரசுக்கே வெளிச்சம். அவர்களுக்குத் தேவையான, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ள, இன்டர்நெட் போன்ற குறைந்த பட்ச வசதிகளை, இடைநிலைப் பள்ளிகளிலாவது செய்து கொடுக்க வேண்டாமா?சமச்சீர் கல்வி என்பது ஆசிரியர்களுக்கும் புதிது; மாணவர்களுக்கும் புதிது. இதற்கு முதலில் தயார்படுத்த வேண்டியது ஆசிரியர்களைத்தான்!
அரசு பள்ளிகளில் அறிவியல் இளநிலை ஆசிரியராக நியமிக்கப்படுபவருக்கான தகுதி பி.எஸ்சி., பி.எட்., அதன்படி பார்த்தால், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் என ஏதாவது ஒன்றை எடுத்து படித்திருப்பார். ஆனால், அவர் நியமிக்கப்படுவதோ அறிவியல் ஆசிரியராக! அதனால், மேற்குறிப்பிட்ட நான்கு பாடத்தையுமே அவர் கையாள வேண்டுமென்றால், அவருக்குத் தகுந்த பயிற்சி வேண்டாமா! ஒரு நாள், இரண்டு நாள் பயிற்சிகள் போதுமானதா?இனி வரும் காலத்திலாவது, அந்தந்த பாடத்திற்கு என, தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் தான் சமச்சீர் கல்வி என்பது ஓரளவிற்காவது சாத்தியப்படும்!
தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகப்புழுவாக மட்டும் இல்லாமல், பொது அறிவு, ஆளுமைத்திறன், தனித்திறமை, மற்றவர்களுடன் பழகும் தன்மை என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றனர்; அதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு பெரும்பாலான பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு சமமாக அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற அரசு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை என்ன...?ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்களுக்கான பயிற்சி முறை, பள்ளியின் கட்டமைப்பு, உபகரணங்கள் போன்றவையும் சிறப்பாக இருந்தால் மட்டுமே சமச்சீர் கல்வி வெற்றி பெறும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுவும் ஊழலின்றி நடைபெற வேண்டும். இல்லாவிட்டால், பெயர் மாற்றமோ, பாடத்திட்டமோ எந்த விதத்திலும் பயன் தராது.
அரசு கல்வித் திட்டத்தையும், கற்பிக்கும் முறையையும் புதுப்பித்து அர்த்தமுள்ளதாக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவை வெற்றி பெற வேண்டுமானால், இதுபோன்ற, இன்னும் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.அரசு நினைத்தால், நிச்சயமாக, சமச்சீர் கல்வி என்பது சாத்தியம்தான்; அதில், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. என்றாலும், இதுகுறை, அதுகுறை என்று இனியும் கூறிக் கொண்டிருக்காமல், வளர்ந்த நாடுகளில், சமச்சீர் கல்வி எப்படி சாத்தியமாயிற்று என்பதை அறிந்து, குறைகளை களைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தமிழக பள்ளிக்கல்வித் துறையும், தமிழக அரசும் இவற்றை பரிசீலிக்குமா?
இரா. ஆஞ்சலா ராஜம்
yes i Agree
ReplyDeleteJ@i
please say the remeady also.if u say the remeady , that is the good article.otherwise ,this article is a ?
ReplyDelete