சமூக பாதுகாப்புத் துறை சார்பில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து சமுதாயத்தில் இருக்க முடியாது. சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அதனால்தான் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கருத்தரங்கில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும். நம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லாததால் வேலை வாய்ப்பற்ற நிலை உள்ளது.
இதனால் கடத்தல் சம்பவங்கள் கூடுதலாக நடக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து முழுமையாக கடத்தலை தடுக்க கருத்தரங்கம் மூலம் ஆக்கபூர்வமாக ஆலோ சனை வழங்க வேண்டும். வருவாய் இல்லாத குடும்பங்களில் இருந்து கடத்தல் நடக்கிறது. ஒரு குடும்பத்தில் நெருங்கிப் பழகி அவர்களிடம் மாயை தோற்றத்தை உருவாக்கி அவர்களிடம் இருந்து, கூடுதல் ஆதாயம் பெற திட்டமிட்டு சமுதாயத்தில் இழிவான செயல்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது.
கேரள மாநிலத்துக்கு குழந்தைகள் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்திட ஆலோசனை வழங்க வேண்டும். குழந்தைகள், இளம்பெண்கள் கடத்தல் என்பது தனிப்பட்ட நபருக்கு மட்டும் பாதிப்பு இல்லை. சமுதாயத்திற்கே ஏற்படும் பாதிப்பு. அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதனை விட்டுக்கொடுக்க அரசு தயாராக இல்லை. சமூக நீதி மறுக்கப்படும்போது அது ஒரு சமூக குற்றமாகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, சமூக பாதுகாப்பு துறை நன்னடத்தை அலுவலர் நடராசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் அமுதமொழி, வழக்கறிஞர்கள் ஷெரிப், நடராஜன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||