இந்தியாவில் வறுமையை ஒழிப்பது ஒருபக்கம் இருக்கட்டும்; வறுமையைக் கணக்கிட சரியான அளவுகோல் என்ன? வறுமையாளர்கள் எத்தனை பேர்? இவற்றைக் கணக்கிடுவதிலேயே பல சிக்கல்கள் உள்ளன என்பதுதான் வேதனை.
இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு சார்ந்த புள்ளியியல் துறை, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரப் பிரிவு எனப் பல அமைப்புகள் வறுமை பற்றிய கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளன என்பதுதான். இந்த அமைப்புகளின் அளவுகோல்கள் வித்தியாசப்படுகின்றன. அதுமட்டுமல்ல, அந்த அமைப்புகளும் தமது அளவுகோல்களை அவ்வப்போது மாற்றி அமைக்கின்றன.
உதாரணமாக, மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான மதிப்பீட்டின்படி 2004-05-ம் ஆண்டில் மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது. விலைவாசி குறியீட்டின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப ஓரிரு சதவீதம் அதிகரிக்கக்கூடும். ஆக, சமீபகாலம்வரை, இந்தியாவில் கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் ஏழ்மையில் உழல்கிறார்கள் என்பது மக்கள் மனதில் பதிந்துள்ள விஷயம்.
உலக வங்கி, உலகெங்கும் வறுமையில் வாடும் மக்கள் குறித்த ஆய்வறிக்கையை அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த அறிக்கைப்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். இது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். இரண்டாவதாக, அந்த அறிக்கை தரும் புதிய செய்தி என்னவெனில், உலக வங்கி, மக்களின் வாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு, வறுமையின் அளவைக் கணக்கிடுகிறது என்பதுதான்.
உலக வங்கியின் ஆய்வு, நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு 1.25 டாலர் வருவாய் என்னும் அளவுகோலின்படி வறுமையாளர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2005-ம் ஆண்டு விலைவாசி அடிப்படையில், இது நகர்ப்புறங்களில் 21 ரூபாய் 60 பைசா வருவாய்க்குச் சமம். கிராமப்புறங்களில் 14 ரூபாய் 30 பைசா வருவாய்க்குச் சமம்.
இந்த அளவுகோலின்படி, 2005-ல் இந்தியாவில் 42 சதவீத மக்கள் - அதாவது 42 கோடி மக்களுக்கும் அதிகமாக வறுமையில் உள்ளார்கள் என்று ஆகிறது. இது அதிர்ச்சி தரும் செய்தி.
இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. அதேநேரம் சில அடிப்படை அம்சங்கள் பரிசீலிக்கத் தக்கவை. எனவே, உலக வங்கியின் ஆய்வு, உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது வியப்பளிக்கவில்லை.
முன்னதாக இருந்த அளவுகோல் என்னவெனில் நாள் ஒன்றுக்கு தலா ஒரு டாலருக்குக் குறைவான வருவாய் உள்ளவர்களே வறுமைக்கோட்டின்கீழ் வந்தார்கள். அதன்படி, 2005-ம் ஆண்டில், இந்தியாவில் 24 சதவீதம் பேர் பரம ஏழைகள் என்று கணிக்கப்பட்டது. இது இந்திய அரசின் கணக்கோடு ஒத்துப்போனது.
இது ஒருபுறம் இருக்க, பொருளாதார வல்லுநர்கள் பலர் உலக வங்கியின் ஆய்வுமுறையைக் குறை கூறியுள்ளனர். பொதுவாக ஆசியாவிலும், குறிப்பாக, இந்தியாவிலும் ஏழ்மை மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது அவர்களின் கருத்து. முக்கியமாக, வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் உலக வங்கியின் ஆய்வு அமைந்திருப்பது நம்பிக்கைக்கு உரியது அல்ல என்பது வல்லுநர்களின் வாதம். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் என்பதால், போதிய அளவு பரவலாக வாழ்க்கைச் செலவுகளைக் கணக்கிடுவது நடைமுறைச் சாத்தியம் அல்ல.
வருவாய் அளவை ஒரு டாலரிலிருந்து 1.25 டாலராக உயர்த்தியிருப்பதன் மூலம், அதிக மக்கள்தொகை உள்ள இந்தியாவில் 25 சதவீதமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சரி, இந்தியாவின் அளவுகோல் என்ன? பல்லாண்டுகளாக, இந்தியாவில் அரசு சார்ந்த புள்ளியியல் அமைப்பு பயன்படுத்தும் அளவுகோல், மக்கள் எத்தனை "கேலரி' சத்துள்ள உணவை உட்கொள்கிறார்கள் என்பதையே வறுமையைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் உணவு அல்லாத அத்தியாவசியச் செலவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்ற குறைபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த அணுகுமுறை ஏற்புடையதல்ல என ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பு தனது 2003-ம் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகும் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்காதது வருந்தத்தக்கது.
முக்கியமாக, ஆரம்பக் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டு செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஐ.நா. அமைப்பின் அறிவுரை ஆகும். இதற்கு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படும் விளக்கம், அரசே எளிய மக்களின் கல்விக்கும், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துக்கும் செலவிடும் என்பதாகும்.
சில மாநிலங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவு பொருந்தும். பல மாநிலங்களில், ஏழ்மையில் வாழ்பவர்களுக்கு அரசுத் தரப்பு, கல்வி மற்றும் மருத்துவத்துக்கான ஏற்பாடுகள் தரத்திலோ, அளவிலோ திருப்திகரமாக இல்லை என்பது வெளிப்படை.
மேலும், 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி அளிப்பதற்கான சட்டம் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட பின் அரசின் ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
எனவே, உட்கொள்ளும் உணவின் "கேலரி'யை மட்டும் கணக்கிடுவது போதுமானதல்ல. மருத்துவச் செலவு உள்ளிட்ட வறுமையின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, உண்மை நிலையை அறியும் வகையில் புதிய அளவுகோலை விஞ்ஞானரீதியில் உருவாக்குவது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.
இப்படி மாறுபட்ட கணக்கெடுப்பு முறைகள் அமலில் உள்ள இந்தச் சூழலில், இருண்ட வானில் ஒளிக்கீற்றுபோல், ஐக்கிய நாடுகள் சபையின் 2010-ம் ஆண்டுக்கான பொருளாதார மேம்பாட்டு இலக்குக்கான அறிக்கை அண்மையில் வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 1990-ம் ஆண்டில் 51 சதவீதமாக இருந்த வறுமையாளர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 24 சதவீதமாக - அதாவது பாதியாகக் குறையும் என எதிர்பார்க்கலாம்.
ஐ.நா. சபை அறிக்கையின்படி இந்தியாவில் 2015-ம் ஆண்டில் பரம ஏழைகளின் எண்ணிக்கை 18 கோடியே 80 லட்சம் பேராக இருப்பார்கள்.
அதேநேரம், இந்தியாவைத் தவிர இதர தெற்காசிய நாடுகளில் வறுமை குறையும் என்றாலும், இந்தியா அளவுக்குக் குறைவதற்கான சாத்தியம் இல்லை என்கிறது ஐ.நா. அறிக்கை. இந்தியாவைத்தவிர, பிற நாடுகளில் வறுமை ஒழிப்பு குறைவாக இருக்கும் என்பதற்கான காரணம், 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடியே.
இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக 7 சதவீத சராசரி வளர்ச்சியைத் தக்க வைத்துள்ளது. 2011-12-ம் ஆண்டில் 9 சதவீத வளர்ச்சியையும், 2015-ல் 10 சதவீத வளர்ச்சியையும் இந்தியா எட்டும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இது நம்பிக்கையூட்டும் அம்சம்.
அதேநேரம், வளர்ச்சியின் பலன் கிராமங்களையும் ஏழைகளையும் சென்றடைய வேண்டும் என்பது முக்கியம். இதற்கு கீழ்க்காணும் செயல்திட்டங்களை முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
முதலாவதாக, மின் உற்பத்தி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பிரம்மாண்டமான பணியை அரசு மட்டும் தனித்துச் செயல்படுத்த முடியாது என்பதால் அரசுத்துறை மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, புதிய வேலை வாய்ப்புகளுக்குப் பொருத்தமான வகையில் இளைஞர்களுக்கு முன் பயிற்சி அளிக்க வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள அதேநேரத்தில், புதிய வேலைகளுக்குத் திறன் படைத்த நபர்கள் கிடைப்பதில்லை என்பது தொழில்துறையினரின் குறையாக உள்ளது. இந்தக் குறைபாட்டை போக்கும்வகையில் போதிய அளவில் பயிற்சிக் கூடங்களையும் உருவாக்க வேண்டும். நான்காவதாக, வறுமை ஒழிப்புக்கு முக்கியத் தேவை எளிய மக்களின் வாங்கும் சக்தியைப் பெருக்க வேண்டும்.
இதற்கு ஏற்ப பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அண்மைக்காலமாக, உணவுப் பணவீக்கம் 17 சதவீதத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஒட்டுமொத்தப் பணவீக்கமும் இரட்டை இலக்கை எட்டிவிட்டது.
இந்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான், வாங்கும் சக்தியை மேம்படுத்த முடியும்.
ஐந்தாவதாக, மிக முக்கியமாக பொருளாதார வளர்ச்சி நாட்டின் அனைத்துப் பாகங்களையும், குறிப்பாக ஏழை, எளிய மக்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
மேற்கூறிய திட்டங்கள் வெற்றி அடைந்தால்தான் வறுமை ஒழிப்பு வசப்படும். அது இல்லாமல், 9 சதவீத வளர்ச்சியையோ, 10 சதவீத வளர்ச்சியையோ எட்டினால்கூட, வேலை இல்லாத ஓர் ஏழை இளைஞருக்கு வளர்ச்சியால் என்ன பலன்?
அதேபோல், குறுந்தொழில் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் வங்கிக் கடனுதவி கிடைக்காவிட்டால், வளர்ச்சியால் அவர்களுக்கு என்ன பலன்?
இந்தக் கேள்விகளுக்கு ஆத்மார்த்தமாகப் பதில் கண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டுமே, வறுமை ஒழிப்பு என்னும் புனித வேள்வி நிறைவு பெறும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||