தமிழ் வழியில் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., தேர்வான முதல் சாதனையாளர் ஆர்.பாலகிருஷ்ணன், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். தினமலர் நாளிதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: இந்திய ஊர்ப்பெயர்களை, குறிப்பாக தமிழக ஊர்ப் பெயர்களை சிந்து சமவெளி உள்ளடக்கிய பாகிஸ்தான், ஈரான், ஈராக், அஜர்பைஜான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள ஊர்ப்பெயர்களுடன் ஒப்பிட்டுள்ளேன்.
திராவிட இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையானதாகக் கூறப்படும் சங்க இலக்கியங்களிலே பதிவு செய்யப்பட்டுள்ள இடப்பெயர்கள் மற்றும் மானுடப் பெயர்களை கணிப்பொறி துணைகொண்டு ஒப்பாய்வு செய்துள்ளேன். இதுவரை அறியப்படாத பல புதிய சான்றுகளை இது வெளிக் கொண்டு வந்திருக்கிறது. சிந்து சமவெளிப்பகுதியில் அதற்கு அப்பாலும் வழங்கும் இடப்பெயர்கள் தற்போது, தமிழகத்தில் வழக்கிலுள்ள இடப்பெயர்களை அச்சு மாறாமல் அப்படியே நினைவு படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, வடமேற்குப் புலத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகிற ஊர்களின், ஆறுகளின், மலைகளின், துறைமுகங்களின், தலைநகரங்களின் பல்வேறு அரசுக்குடிகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களிலும் ஒற்றுமை நிலவுகிறது.
இதுமட்டுமல்லாமல், மன்னர்களின் பெயர்களையும், குறுநிலக் குடிகளையும் நினைவுறுத்தும் சிந்து வெளி இடப்பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. சங்க இலக்கிய பழமை கொண்ட ஆமூர், ஆவூர், ஐயூர், மோகூர், கள்ளூர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்களும் இப்பட்டியலில் அடங்கும். தமிழ் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளான ஊர், நாடு, இல், ஆறு, வாயில், காடு, சேரி, துறை உள்ளிட்ட ஊர்ப்பெயர்கள் பொதுவாக இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியமும், பிற சங்க இலக்கியங்களும் சுட்டிக்காட்டும் நிலப்பிரிவுகளான, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலையை நினைவுறுத்தும் ஊர்ப்பெயர்கள் சிந்துவெளிப் பகுதியில் உள்ளன.
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கிய நகரங்கள், போர்க்களங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்களான வஞ்சி, தொண்டி, உறையூர், மதுரை, கூடல், கொற்கை, அட்டவாயில், கூடகாரம், தலையாலங்கானம், கழுமலம் ஆகியன நினைவுறுத்தும் பெயர்களாக இடம்பெற்றுள்ளன. குமரி என்ற இடப்பெயர் வழங்கிய பக்ரோலி ஹரப்பா நாகரீக பகுதியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. இதுவும் ஆச்சரியமே. ஒரு ஊரைவிட்டு இன்னொரு ஊருக்கு செல்வோர், தாங்கள் குடிபெயர்ந்து வந்த இடத்தின் பெயரை வைப்பது இயல்பு. மேலும், ஊர்ப்பெயர்கள் எப்போதும் மாறுவதில்லை. ஆகவே, சிந்து வெளிப்பகுதிக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஊர்ப்பெயர் தொடர்பு நன்கு விளங்குகிறது. சிந்து சமவெளியின் தமிழ்த் தொடர்புக்கு இது புதிய வெளிச்சம் தரும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||