உலகில் உள்ள 6 ஆயிரம் மொழிகளில் செம்மொழித் தகுதி பெற்ற 6 மொழிகளில் ஒன்றான தமிழுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமையில் செம்மொழி மாநாடு நடைபெறுவது பெருமைக்குரியது.
தமிழ் இலக்கியங்களும், தமிழ் இயல், இசை, நாடகம் ஆகியவையும் தொன்மைமிக்கவை. முத்தமிழை தலைநிமிரச் செய்த முதல்வர் கருணாநிதி, மொழியை தனது விழிபோல் போற்றி வருகிறார்.
இச் சிறப்புக்குரிய செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டபோது சில குரல்கள் தவறான பாதையில் ஒலித்தன. அதைமாற்றிக் காட்டும் விதத்தில் இம்மாநாட்டை திறம்பட நடத்தி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்மொழி செம்மொழித் தகுதி பெற்றுள்ளதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வழிநடத்தும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது.
தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் தமிழ் பெரும் வளர்ச்சி கண்டது. செம்மொழித் தகுதி தமிழுக்கு வழங்கப்பட்டதற்கான முயற்சிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கட்சிகள் செய்திருந்தாலும், குறிப்பாக கருணாநிதியும், அவரது கட்சியும் மேற்கொண்ட முயற்சி மிகவும் போற்றத்தக்கது என்று சோனியா காந்தி, கருணாநிதிக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.
தமிழ் உணர்வோடு வாழும் அவர், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பெருமைகொள்ளும் விதத்தில் இந்தக் கருத்தரங்கை நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் தமிழ் பயிற்று மொழியாக இருந்தாலும், இந்திய ஆட்சிமொழியாக உருவாகிட முதல்வர் கருணாநிதியுடன் தமிழக காங்கிரஸ் கட்சியும் கரம் கோர்த்துச் செயல்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் வளர்ச்சிக்கான 10 கோரிக்கைகளை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
அதன்படி, ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்துக் கல்வியும் தமிழே முதலாய், முதல் பாடமாய் முழுவதுமாய் இருக்க வேண்டும். கர்நாடகத்தில் அதுபோன்றுதான் உள்ளது. ஏன் தமிழகத்தில் இருக்கக் கூடாது?
அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தமிழாசிரியர் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆரம்ப வகுப்பு முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை தமிழ்ப் பாடமுறை சீர்திருத்தப்பட வேண்டும். தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைக்கப்பட வேண்டும். தமிழுக்கு என்றும், தமிழ்ப் பண்பாட்டுக்கு என்றும் தனி அமைச்சர் இருக்க வேண்டும். பிறமொழிச் சிறப்புகள் தமிழிலும், தமிழ் மொழிச் சிறப்புகள் பிறமொழிகளிலும் கொண்டுசெல்ல இத்துறைகள் செயல்பட வேண்டும்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள தமிழ் மக்கள் தமிழறிவும், மொழியாற்றலும் பெற்றிட ஆசிரியர்கள், புத்தகங்கள், கல்விக்கூடங்கள், கற்றல் உபகரணங்கள் வழங்கிட வேண்டும். வெளிநாட்டு வாழ் தமிழர்கள், அவர்களது குழந்தைகள் தமிழ் கற்றிட தேவையான வாய்ப்புகள் உருவாக்கித் தர வேண்டும். இயல், இசை, நாடகம் சங்கமிக்கும் முத்தமிழ்ச் சங்கம் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிறுவப்பட வேண்டும். அதன் தலைவராக முதல்வர் கருணாநிதி முதல் பொறுப்பை ஏற்க வேண்டும்.
எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், பிற மாநிலத் தலைநகரங்களிலும், தமிழ் பேசும் பிற உலக நாடுகளிலும் செம்மொழிச் சங்கத்தின் கிளைகள் ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழில் அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் வகையில் கணினித் தமிழ் ஏற்படுத்தப்பட வேண்டும்.
செம்மொழித் தகுதி பெற்ற தமிழுக்கான வளர்ச்சித் தொகையை மத்திய அரசு விரைந்து அளிக்க வேண்டும் என்றார் கே.வீ.தங்கபாலு.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||