மூங்கிலைப் போன்றது என்மொழி...
காற்றின் உரசலுக்கு
வெடித்துக் கிளம்பும் பேரோசையையும்
சுவரங்களின் எண்ணிக்கையில்
சுடப்பட்ட ஓட்டைகள் வழியாக
புல்லாங்குழலில் வழிந்தோடும்
மெல்லிசையையும் கொண்டது.
வளையும் என்பதற்காக
ஒடியும் அளவிற்கா
சேதப்படுத்துவது என்மொழியை?
மாவட்டங்களுக்குத் தகுந்தவாறு
மனநலம் படைத்த மனிதர்களிடம்
சொற்சிலம்பம் விளையாடும்
எம்மொழி
தொலைக்காட்சிக்குள் வந்தவுடன்
தூண்டிலில் சிக்கிய மீனாகிறது.
மாரிச மானாகிறது!
யாமறிந்த மொழிகளிலே
இனிமை தமிழ்மொழி
தொலைக்காட்சிகளில் காணோம்...
நெல்லில் சொல்லெடுத்து
பழக்கப்பட்ட குழந்தைகளிடம்
முதல் எழுத்து
அகரத்தில் தான் ஆரம்பமாகிறது.
வீட்டில் இருந்து துவங்கும்
குழந்தைகளின் பயணம்
பள்ளி வந்தவுடன்
தாயிடம் கைகாட்டி விடைபெறும் போது
தமிழுக்கும் சேர்த்து
விடை கொடுக்கப்படுகிறது.
கான்வென்ட் வாயில்களில்
பாவமாய்
காத்துக் கிடக்கிறாள் தமிழ்த்தாய்.
தாலாட்டுகளை மறந்த
தாய்களைப் போல
தமிழை மறந்த
குழந்தைச் சமுதாயம்
திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது
நர்சரிகளில்.
பசும்பாலில் இருந்து
பாக்கெட் பாலுக்கு மாறினோம்
முழம் போட்டு வாங்கும் பூக்களை மறந்து
பிளாஸ்டிக் பூவிற்குத் தாவினோம்
வாசலில் இருந்த வேப்பமரங்களை வெட்டிவிட்டு
சோப்புகளில் அவற்றைக் தேடுகிறோம்.
இருந்தவைகளை இழந்து விட்டு
இருப்பவைகள்
இவை தான் எனக் கலங்குகிறோம்.
ஆரம்பப் பள்ளி வாயில்களில்
குழந்தைகளைப் பார்க்கும் போது
இந்தக் கலக்கம் கூடுதலாகிறது.
அம்புலியைப் பார்த்து
ஆசையாய் உணவு கொடுத்த அம்மா
பொய்யைப் பிசைந்து ஊட்டிய போதும்
ரசித்து கதை கேட்டு வளர்ந்த
நேற்றைய குழந்தைகள்
கொடுத்து வைத்தவைகள்.
தமிழ்ப்புனைவின் அதிசயங்களை
உருவாக்கிய அம்மாக்கள்
"இடியட் பாக்சு'க்குள் சிக்கிக் கொண்டபின்
இன்றைய குழந்தைகள்
குழந்தைமைகளைத் தொலைத்து விட்டன.
குழந்தைகளைப் போல
அம்புலியும் காத்துக்கிடக்கிறது
அம்மாக்களின் கதைகளைக் கேட்க.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||