கோவை : "தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்; மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
கோவையில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுஇன்று நிறைவடைந்து. நிறைவு நாள் விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். "நிறைவு நாள் விழாவில், தமிழுக்காக சில அறிவிப்புகள் வெளியிடப்படும்; அவை இன்னொரு பட்ஜெட் போல் இருக்கும்' என, ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதைப்போலவே, சில அறிவிப்புகளை வெளியிட்டதுடன், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இம்மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். நான் பக்கத்திலே நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முன்கூட்டிய நான் அவைகளை பேச்சோடு பேச்சாக இரண்டுநாளைக்கு முன் அறிவித்தது போன்று நிதிநிலை அறிக்கை போல் தயாரித்துள்ளேன். நிதிநிலை அறிக்கை போல என்றுதான் சொன்னேன் பயந்து விட வேண்டியது இல்லை. அதற்கான நிதி உதவியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். வலதுபுறத்தில் பிரணாப்பும், இடதுபுறத்தில் சிதம்பரமும் இருக்கும் போது நிதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐந்து நாட்களாக கோவையில் எழுச்சியுடன் நடந்த மாநாடு நிறைவு விழா காண்கிறது. ஐந்து நாட்களும் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ் என்றே இருந்தது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி. உலகமொழியாகத் திகழும் ஆங்கில மொழியில் முதல் எழுத்து வடிவம் கி.பி.,7ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஜெர்மன் முதல் வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டு; பிரெஞ்சு 9ம் நூற்றாண்டு; ரஷ்யாவின் பழமையான எழுத்து வடிவம் கி.பி.,10 நூற்றாண்டு; லத்தீனில் இருந்து பிறந்த இத்தாலி மொழி 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழின் முதல் எழுத்து வடிவ தொல்காப்பியம் கிடைத்துள்ளது. அதுமுதல் இன்று வரை சாமானியர் முதல் ஆன்றோர் சான்றோர் வரை வாழும் மொழியாகவும்,வரலாற்று மொழியாகவும் உள்ளது. காதல், வீரம் இரண்டும் தமிழர்களின் இரு முக்கிய உணர்வுகள்.அதனை சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. "குழந்தைப் பருவத்தில் தனது தாயாருடன் மணலில் அழுத்திய விதை முளைத்து புன்னை மரமாக எனக்கு முன் தோன்றியதால்,இம்மரம் என் அக்கா ஆகும் என் அன்னை சொன்னார். அக்காள் முன் உன்னோடு காதல் மொழி பேச கூசுகிறது வேறிடம் சொல்வோம் காதலனே என்றாள், மங்கை ஒருத்தி சங்க இலக்கியத்தில். இதனை "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி' என்ற நற்றிணைப்பாடல் கூறுகிறது.
ஒரு குழந்தை இறந்தால் கூட விழுப்புண் படாமல் இறந்து விட்டதே என வருந்தி வளாõல் பிளந்து புதைத்த வீரத்தை "குழவி இறப்பினும் ஊண்தடி பிறப்பினும்' என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது. "பிறப்பொக்கும்' என வள்ளுவ மொழிப்படி சமதர்ம சமுதாயத்தை தமிழர்கள் பின்பற்றினர்.
கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் தமிழர்களோடு வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட கொங்கின் பல்வேறு பகுதிகளிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தே ரோமர்கள் கொங்குநாட்டுடன் வாணிபத்த் தொடர்புகொண்டிருந்தனர். ஜாவா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ளனர். தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளைக் கொண்டுள்ளது செம்மொழியான தமிழ் மொழி. தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை இந்த நேரத்தில் நினைவுர வேண்டும். ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், போப், செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளை அச்சுவடிவம் பெறச்செய்த உ.வேச.சா., சி.வை., தாமோதரம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், இலங்கை தனிநாயகம் அடகள், வ.ஐ.., சுப்பிரமணியம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்ற அனைத்து சான்றோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். செம்மொழித் தமிழை எதிர்காலத்தில் அறிவியல் தமிழாக கட்டிக் காப்போம் என உறுதி ஏற்போம்.
செம்மொழி மாநாடு தொடர்பான கலந்தாய்வில் சிவத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நான் கூறியது போன்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
அறிவிப்புகள்:
* தமிழகத்தில் ஐந்து இடங்களில் மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.
* இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.
* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.
* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.
* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு "கணியன் பூங்குன்றனார்' விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.
* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.
* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.
* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.
* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.
* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.
* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது
* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.
* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.
* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.
* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி பேசினார்.
பரவாயில்லீங்க, முதல்வர் பேச்ச அப்படியே போட்டுட்டீங்க. இந்த மாதிரி தீர்மானங்கள் எத்தனையோ பாத்தாச்சு?
ReplyDeleteதிரு.கே.கே.தேவதாஸ் அவர்களே,
ReplyDeleteவலைத்தளம் அமைத்து 6 மாதத்திற்குள் ஏறக்குறைய 300 பதிவுகள் போட்டுள்ள உங்கள் ஆர்வத்தையும், உழைப்பையும் எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அதே சமயம் என்னுடைய சோம்பேறித்தனத்தை நினைத்து வெட்கப்படுகிறேன்.
வாழ்க உங்கள் தொண்டு, வளர்க உங்கள் புகழ்.