முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மொழிக்கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2004, ஜூன் 7-ம் தேதி குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க பரிசீலனைக் குழு அமைக்கப்படும் என்றார்.
தமிழை செம்மொழி என்று பிரகடனப் படுத்தவும் செய்தார்.
அன்றைக்கு கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் முழுமையாக இதை வரவேற்றனர். தமிழகத்தில் ஆட்சிமொழியாக இருந்தாலும், இந்திய அளவில் தமிழின் நிலை என்ன என்றுதான் பார்க்க வேண்டும். நாம் சங்ககால, மத்தியகால பெருமைகளை மட்டும் பேசுவதில் பயனில்லை. தற்போது ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.
இலங்கையில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதை மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்று ஐக்கிய நாடுகள் சபை சொன்னது. ஆனால், அந்த மக்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இந்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, கட்சி வேறுபாடின்றி நாம் யோசித்தாக வேண்டும்.
தமிழ், சீனம், லத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரூ, கிரேக்க மொழிகளை யுனெஸ்கோ நிறுவனம் செம்மொழியாக கருதுகிறது. இதில் தனித்துவம் மிக்க மொழியாக தமிழ் உள்ளது. செம்மொழிக்கான 11 இலக்கண விதிகளையும் கொண்டுள்ளது. ஆனால், இன்றைக்கு தமிழின் நிலை என்னவாக உள்ளது என்பதை யோசிக்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்டப்படி 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளும் ஆட்சிமொழியாக வரவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மத்திய அரசும் தனது பொறுப்பை இதில் உணர்ந்து செயல்பட வேண்டும்.
18 மொழிகளுக்கும் அரசியல் சாசனப் பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத்திலும் தமிழில் பேசும் நிலை உருவாகும். தமிழகத்தில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதிடலாம் என்றபோதிலும், நீதிபதியிடம் ஆங்கிலத்தில்தான் முறையிட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆகவே, நீதிமன்ற வழக்கு மொழி, பயிற்றுமொழியை ஏற்படுத்திட மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாகி வரும் இக்காலத்தில் தமிழ் உள்பட எல்லா மொழிகளையும் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. தமிழ்மொழியை தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்த வேண்டும்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பிற செம்மொழிகளைப் பயில்வதற்கான இருக்கைகளையும், பிற நாட்டுப் பல்கலைகளில் தமிழ்மொழி இருக்கைகளையும் ஏற்படுத்திட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க பல அறிஞர்கள் போராடி வருகின்றனர். இதற்கான அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது. செம்மொழி பலம் தமிழுக்கு உள்ளதால், அதை அறிவியல் ஆதார மொழியாக வளர்க்க வேண்டும். அப்போதுதான் உலகம் முழுதும் பரவும் நிலை ஏற்படும் என்றார் டி.ராஜா.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||