தொழில் நுட்பத்தின் பயன்பாடு பல்துறைகளிலும் அதீத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியின் முழுப்பலனையும் உள்வாங்கிக் கொள்ள முடியாமல், மிகக் குறைவான மாற்றத்தை அனுமதித்திருப்பது கல்வித்துறை மட்டுமே. உலகம் முழுவதும் கற்பித்தல் முறைகளில் நவீன முறைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மூன்றாம் உலக நாடுகளும் தங்களுடைய கற்றல்-கற்பித்தல் குறித்த பார்வையை வெகுவாக மாற்றிக் கொண்டுள்ளன. கற்றல் என்பது குழந்தையின் சுதந்திரச் செயல். கற்றலைத் தூண்டுபவராக மட்டுமே ஆசிரியர் செயல்பட முடியும். ஆசிரியரிடமிருந்து மட்டுமே குழந்தை கற்றுக் கொள்ள முடியும் என்ற பழமையான கண்ணோட்டமும் மாறி வருகிறது.
ஐந்து வயது முதல் பதினேழு வயது வரை அடிப்படைக் கல்வி பெறுவதற்காக குழந்தைகள் பள்ளிகளில் விடப்படுகிறார்கள். இக்கால கட்டத்தில் கல்விக் கூடங்கள் செய்ய வேண்டியவையாக சமூகம் எதிர்பார்ப்பது:
"குழந்தைக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, சமூகப் பற்று, தேசபக்தி, நல்ல குடிமகனுக்குரிய நடத்தை, தனிநபர் ஒழுக்கம், பிறர் நலனில் அக்கறை, கூடி வாழ்தல், தலைமைப் பண்புகள், தனிநபர் திறமைகள் மேலோங்குதல் போன்றவை மேற்குறிப்பிட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் கட்டாயம் குழந்தை பெற வேண்டியவையாகச் சமூகம் திட்டமிடுகிறது.
குழந்தையை சமூக மனிதனாக மாற்ற கல்விக்கூடங்கள் ஆசிரியர்களைச் சார்ந்திருக்கின்றன. எத்தகைய நவீன முறைகளைக் கொண்டுவந்தாலும், ஆசிரியர்கள் மனதளவில் ஏற்றுக் கொண்டு, வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்தும் பொழுதே மாற்றம் என்பது சாத்தியமாகும்.
எனவே தான் கற்பித்தலை சிறப்பாகச் செய்ய ஆசிரியர்களுக்கு முதலில் குழந்தைகளைப் புரிந்து கொள்ள குழந்தை உளவியலும், கற்றலைச் சிறப்பாகச் செய்ய கல்வி உளவியலும், குழந்தைகளைக் கையாள உடலியலும் பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வகுப்பில் திறமையாகச் செயல்பட அவர்களுக்கு வழங்கப்படும் கருவி பாடநூல்களே.
பாடத்திட்டம் வல்லுநர்களாலும் அரசாலும் தீர்மானிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே பாட நூல்கள் உருவாக்கப்படுகின்றன. அச்சிடப்பட்ட நூல்கள் ஏதுமற்று, குருவிடம் இருந்து காதால் கேட்டு, பலமுறை சொல்லிப் பார்த்து மனனம் செய்து கற்றுக் கொண்ட காலம் தொடங்கி, ஆங்கிலேயர்கள் புதிய கல்விமுறையை இந்தியாவில் புகுத்தத் தொடங்கிய காலம் வரை நம்முடைய கற்றல் என்பது எண்ணும் எழுத்தும்.
முறையாகக் கல்விப் பயிற்சி மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நம் இலக்கியங்கள் அத்தனையும் தெரிந்திருக்கும். இலக்கியத்தின் வழி மொழியின் மேன்மையும், நம் இரண்டாயிரம் ஆண்டுகால வாழ்வும் தொப்புள் கொடி உறவு போல் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆங்கில அதிகாரிகளுக்கு எடுபிடியாகவும், கணக்கெழுதுபவராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் இந்தியர்கள் தேவைப்பட்ட பொழுது, அதற்கேற்ற கல்விமுறையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். பாட நூல்களும் உருவாக்கப்பட்டன. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தருணத்தில் நம் மண்ணுக்கேற்ற கல்வியை நாம் அறிமுகம் செய்து விட்டோமா என்றால் இன்னும் முழுமையாக இல்லை எனக்கூறலாம்.
இந்தியாவில் சமூக மாற்றத்திற்கேற்பவோ, மாறிவரும் குழந்தைகளுக்கேற்பவோ பாடநூல்கள் உருவாக்கப்படுவதில்லை. பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடநூல்கள் என்ன நோக்கத்தை நிறைவு செய்கின்றன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
குழந்தையின் மன வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் பொருத்தமில்லாத பாடங்கள் பாட நூல்களில் உள்ளன. இப்பாடங்கள் ஒரு போதும் குழந்தையின் கற்றல் ஆர்வத்தைக் கவர்வதில்லை. ஆர்வமுடன் படிக்கும் குழந்தைகள் கூட, பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெறுகின்றனரே தவிர, அக்குழந்தையின் தனிப்பட்ட ஆளுமையை அப்பாடங்கள் சிறிதும் தொட்டெழுப்புவதில்லை.
பள்ளிக் கூடங்களில் வாழ்க்கை முரண்களைப் பற்றிப் பேச இடமில்லை. சேரியிலிருந்து வரும் குழந்தையும் பள்ளியில் உட்கார்ந்து "சாதி இரண்டொழிய வேறில்லை' என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் வரும் குழந்தை "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்' என்று பொய்யாகக் கூற வேண்டும்.
இவை குறித்து விவாதிப்பதற்கு வகுப்பறைகளில் இடமிருப்பதில்லை. காரணம் பாடநூல்கள் நெகிழ்வுத் தன்மையற்றவை. ஆசிரியரையும், மாணவரையும் பாடவேளைகள் என்னும் கயிறு கொண்டு இறுக்கிப் பிணைத்திருப்பவை. கயிற்றைத் தளர்த்திக் கொண்டு வெளிவருவது இருவரின் போராட்டமாக இருக்கிறது. உரையாடல்களற்ற, விவாதங்களற்ற பாடநூல்களால், பாடநூல்களுக்குக் கூட பயன் இல்லை.
பாடநூல்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு வகுப்பறைகளைக் கையாள்வது இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டுக்கு உடனடி சாத்தியமில்லை. இன்னும் நம் நாட்டில் ஆசிரியர் - மாணவர் விகிதம் முறைப்படுத்தப்படவில்லை.
பொதுக்கூட்டம் போல் 150-200 மாணவர்களை வைத்துப் பாடம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இருபது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை வரும்பொழுது பாடநூலை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியப்படலாம்.
தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் பாடநூல் தயாரிப்பில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையோர் குறித்த அறிமுகம்,மலைவாழ் மக்களின் வாழ்க்கை, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு போன்றவை முதன்முறையாக பாட நூல்களில் இடம் பெறத் துவங்கியுள்ளன. இம்மாற்றத்தை மாநில அரசுகள் ஏற்றுச் செயல்படுத்த முன்வர வேண்டும். வாழ்வியலுடன் பொருந்திப் போகும் கல்வியே மாணவர்களுக்குள் உண்மையான மாற்றத்தை உண்டுபண்ணும். தமிழகத்தில் செயல்வழிக் கற்றலின் மூலம் பாடநூல் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகப் பெரிய மாற்றம். ஆசிரியர் கொடுப்பவர்; மாணவர் பெற்றுக் கொள்பவர் என்ற நிலை மெல்ல மாறி வருகிறது.
பாடநூல்களை உயிர்ப்புடையதாக மாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். மன்னர்களின் வாழ்வையே காலங்காலமாகப் படித்து வந்த நம் குழந்தைகள், மக்களின் வாழ்வைக் கற்றுக் கொள்ள வேண்டும். வசிக்கும் ஊரின் திசை தெரியாமல், உலக வரைபடத்தில் நாடுகளை எப்படிக் கண்டறியச் சொல்வது? பாடப் பொருள் குழந்தையை சமூக வாழ்வுடன் இணைக்க வேண்டும். சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் பார்வையை உருவாக்க வேண்டும். பண்பாட்டு - கலாசார வாழ்வியல் கூறுகள் பாட நூல்களில் கட்டாயம் இடம் பெற வேண்டும். மொழியின் வழியே தான் குழந்தை பாடநூலைப் புரிந்து கொள்ள முயலும். பாடநூலின் மொழி குழந்தை புரிந்து கொள்ளக் கூடியதாக, மன அறிவுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். ஈர்ப்பற்ற மொழி குழந்தையைப் பாடநூலில் இருந்தும், வகுப்பறையிலிருந்தும் அன்னியப்படுத்தும்.
பாடநூல்களின் சுமையை உடலளவில் தொடர்ந்து சுமப்பதை முறைப்படுத்த பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரலாம். ஐந்து பாடநூல்கள், ஐந்து நோட்டுப் புத்தகங்கள் (பல பள்ளிகளில் வீட்டுப்பாட நோட்டுப் புத்தகங்கள் தனி) துணைக் கையேடுகள், கையெழுத்துப் பயிற்சி நோட்டுப் புத்தகங்கள் அத்தனையும் குழந்தைகள் தினம் சுமக்க வேண்டியுள்ளது. அத்துடன் தண்ணீர் பாட்டில்கள், உணவு டப்பாக்கள் வேறு. ÷ ÷தற்பொழுது பள்ளிகளில் காலையில் 45 நிமிடங்கள் வீதம் நான்கு பாடவேளைகளும், பிற்பகல் 40 நிமிடங்கள் வீதம் நான்கு பாடவேளைகளும் வழக்கத்தில் உள்ளன. ஐந்து பாடங்களும் தினந்தோறும் பாடவேளைகளில் இடம் பெறுவதைத் தவிர்த்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முக்கிய பாடங்களை மட்டும் வைக்கலாம். பாடவேளையின் நேரம் அதிகரிக்கும் பொழுது ஆசிரியருக்கு வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களின் கற்றலையும் உறுதி செய்ய முடியும்.
ஆசிரியர் விரிவாகக் கற்றுக் கொடுக்க, புரியாத மாணவர்களை அடையாளங் கண்டு மீண்டும் விளக்க, பாடத்தை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி விவாதிக்க என ஆசிரியர் தன்னை வகுப்பறைக்குள் முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள பாடவேளைகள் நெகிழ்வுத் தன்மையுள்ளதாக அமைத்துக் கொள்ள ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். (தமிழகத்தில் படைப்பாக்கக் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ள 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பாடவேளை 90 நிமிடங்கள் என்பது சரியான நடைமுறை) இதன் மூலம் ஆசிரியர்-மாணவர் உறவு மேம்படுவதுடன் எல்லா நாள்களும் மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் கட்டாயம் சுமந்து செல்ல வேண்டியதில்லை.
கடினப் பாடங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கலாம். தினந்தோறும் மூன்று பாடங்களுடன் உடற்பயிற்சி, விளையாட்டு, ஓவியம், நீதி வகுப்புகள் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட முடியும்.
பாடநூல்களைக் கடந்த எல்லையற்ற அறிவு வெளியில் உள்ளது என்பதற்கான குறிப்பு பாடநூலில் அவசியம் இருக்க வேண்டும். பாடநூலில் இடம் பெறும் பாடம் தொடர்பான மேலதிகமான தகவல்களைத் தேடும் ஆர்வத்தை மாணவர் பெற வேண்டும்.
அதற்கான குறிப்புகள் நிச்சயம் பாட நூலில் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் ஒரு பாடநூலை எழுதி முடிக்க ஒன்றிரண்டு ஆண்டுகள் தேவைப்படுவதாகக் கூறுகிறார்கள். பாடநூலின் ஆழத்தை அவர்கள் சரியாக உணர்ந்திருப்பதையே இச்செய்தி சுட்டிக் காட்டுகிறது.
மாணவரின் உலகமே இக்காலத்தில் வண்ணமயமானது. கருப்பு - வெள்ளையில் மாணவர் பார்ப்பது பாடநூல்கள் மட்டுமே. வண்ணமயமான பக்கங்களும், புரிதலை மேம்படுத்தும் படங்களும், நல்ல தாளும் கொண்ட பாடநூல்கள் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டக் கூடும். பள்ளி தொடங்கிய முதல் நாளில் ஆர்வமாய் வாங்கி முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை ஆர்வமாகப் புரட்டிப் பார்க்கும் மாணவர்கள் பாடநூலை தூக்கி உள்ளே போட்டு விடுகிறார்கள். அப்படியில்லாமல் ஒவ்வொரு மாணவரும் பாடநூலை பலவிதமான தேடுதலுக்காக எப்பொழுதும் தன் உடன் வைத்து மகிழும் விதமாக ஒவ்வொரு பாடநூலும் தயாரிக்கப்பட வேண்டும். ஓவியத்துக்காக ஒருமுறை, புகைப்படத்துக்காக ஒருமுறை, படிப்பதற்காக ஒருமுறை என மாணவரின் தேடல் பாடநூல் முழுதும் பரவியிருக்க வேண்டும்.
போரிட எடுக்கும் ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் வீரன் முடமாகிப் போவான். பாடநூலும் ஆயுதமே!
அ. வெண்ணிலா
fine article
ReplyDeletetnteu results
pallikalvi results
tamilnadu results
india employment results
useful informative site
ReplyDeleteindia results
tnteu.in results
pallikalvi.in results
share prices live
pallikalvi results
tn velai vaaippu