இந்திய குடிமைப்பணிக்கான தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று, தமிழ்நாடு தீயணைப்புத் துறை, இந்து அறநிலையத் துறை, கிராம நிர்வாகத்துறை, ஆகிய துறைகளில் முறையே தனக்கு கிடைத்த ஸ்டேஷன் பயர் ஆபிசர்,(குரூப்-2) நிர்வாக அதிகாரி, ரெவன்யூ இன்ஸ்பெக்டர் போன்ற வேலைகளில் சேரவில்லை.
மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த சன் குரூப் என்ஜீனியரிங் பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தில், செய்து வந்த சட்ட ஆலோசகர் வேலையை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்து விட்டார் சிவகுமார். அண்ணா நகரில் இயங்கி வரும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் இணை இயக்குராகப் பணியாற்றி வரும் சிவகுமாரிடம் இது குறித்து கேட்டோம். "ஐ.ஏஸ்.எஸ். படிக்க வருபவர்களுக்குப் பாடம் நடத்த ஆசை' என்றார்.
இனி அவருடனான உரையாடல்...
""தேவகோட்டை அருகேயுள்ள மாவிடுதிகோட்டைதான் எனது சொந்த ஊர். பெற்றோர் சிவப்பிரகாசம்- நளாயினி. திருச்சி கேம்பியன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த நான் சென்னை கிறித்துவ கல்லுரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படித்தேன். பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் 1997- லிருந்து 2000 வரை பி.எல். படித்தேன். அதன்பின்பு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் எம்.எல். முடித்தேன்.
÷எனக்கு என் அப்பா சிவப்பிரகாசம்தான் ரோல் மாடல். அவருக்குப் பிறவியிலேயே ஒரு கால் ஊனம். அந்த நிலையிலும் தேவகோட்டையில் உஜ்ஜினி விலாஸ் என்ற உணவு விடுதியை நடத்தி வந்தார். அவருடைய ஊக்குவிப்பால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுகளை எழுதி இந்த நிலைக்கு வந்தேன். ஆரம்பத்தில் வேலம்மாள் கல்வி குழுமம் நடத்திய ஃபோக்கஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் இயக்குநராக 2004-லிருந்து 2007 வரை பணியாற்றினேன். 2009-ஜூன் மாதம்தான் இந்த அகாதெமியில் இணை இயக்குராகச் சேர்ந்தேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குரிய பாடங்களை நடத்துவதற்குத் தகுந்த ஆசிரியர்கள் கிடைப்பது மிகவும் அரிது. இந்த தேர்வில் வெற்றி, தோல்வி என்பது ஆசிரியரைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படுகிறது. அந்த அளவிற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது. எனவேதான் இந்தப் பணியை ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற, விரும்புவோர்க்கு அடிப்படை புரிதல் முக்கியம். ஆய்வாளராக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதே வேளையில் ஆழ்ந்த அறிவைவிட, எல்லா துறைகளிலும் அடிப்படையான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் சிறந்த வழிகாட்டுதல் முக்கியம்.
தனிமனிதனின் ஆற்றலுக்கு ஏற்றவாறு விருப்பப்பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். விருப்ப பாடங்களை ஒருமுறை தேர்வு செய்தபிறகு அடிக்கடி மாற்ற கூடாது. பொருத்தமான விருப்ப பாடங்களைத் தேர்வு செய்து விட்டாலே பாதி வெற்றி.
இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு எழுத வருபவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலும், உழைப்பும் சரிசமமாக இருக்க வேன்டும். உழைப்பு என்றால் கடின உழைப்பு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. கடின உழைப்பைவிட, நேர்த்தியான உழைப்புதான் இந்த தேர்வுகளில் வெற்றி பெற அடிப்படையான தேவை. குறிப்பாக, எந்தவொரு சாமானியனும் எதிர்கொள்ள கூடிய தேர்வுதான் இந்தத் தேர்வு'' எனச் சொல்லி முடித்தார். ஆசிரியர் தொழிலைப் பெருமிதமாகக் கருதும் அந்த இளைஞர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||