நாடு முழுவதும் உள்ள 60 லட்சம் ஆசிரியர்களுக்கு, இன்சூரன்ஸ் மற்றும் வீட்டு வசதி சலுகையை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.டில்லியில் மாநில கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆசிரியர் நல தேசிய அறக்கட்டளையை உருவாக்குவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள 60 லட்சம் ஆசிரியர்களுக்கு, இன்சூரன்ஸ் மற்றும் வீட்டு வசதி திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டத்தை, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர்.ஆசிரியர்களுக்கான ஆயுள் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு அவசியம் என வற்புறுத்தப்பட்டது. இதில், ஆசிரியர்களின் நிதி பங்களிப்பும் இருக்கும். வீட்டு வசதி திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி தேவையில்லை. கூட்டுறவு அமைப்பு மூலம் இந்த திட்டத்தைச் செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தையும் அமல்படுத்தி, அதில் ஆசிரியர்களின் வாழ்க்கை துணைவர், குழந்தைகளையும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 1.25 லட்சம் ரூபாய் அளவுக்கு மருத்துவ சிகிச்சை பலன் பெறும் திட்டமும், மூன்று லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பலனடையும் திட்டத்தையும் சிறிய மற்றும் பெரிய தொகை கொண்ட பிரிமியம் கட்டுவதன் மூலம் ஆசிரியர்கள் பயன் பெற வழி வகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.ஆயுள் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம், ஓய்வு பெறும் போது ஐந்து லட்ச ரூபாயும், பணியின் போது இறக்க நேர்ந்தால் இரண்டு லட்ச ரூபாயும் அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் குறித்த தகவலை முறைப்படி நிதியமைச்சகத்திடம் அளித்து ஒப்புதல் பெறவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கிரேடு முறை அமோக வெற்றி: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நீக்கப்பட்டு, "கிரேடு' முறை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை திட்டம் நல்ல பலனை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||