தமிழுக்கு மத்திய அரசு செம்மொழி அங்கீகாரம் வழங்கிய பிறகு நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி பெறுமா? உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்விகள் மாநாடு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து துளைத்தெடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், உலகத்தமிழச் செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் குவிந்த தமிழர் ஆர்வலர்களின் கூட்டம் சர்ச்சைகளை தகர்த்தெரிந்து மாநாட்டை மகத்தான வெற்றி பெற வைத்துள்ளது.
கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியானது. அக். 23ம் தேதி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, ஆய்வரங்க அமைப்பு குழுக்களை அமைக்கவும் உத்தரவிட்டார். ஜனவரி- 2010ல் மாநாடு நடக்கும் என்று அறிவிப்பு வெளியானதும், மாநாடு வேலைகளை வேகப்படுத்தி நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது. உலகத் தமிழச் செம்மொழி மாநாட்டுக்கான அடிப்படை வேலைகளை செய்யக்கூட காலஅவகாசம் இல்லாததால், மாநாடு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. கோவையில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பிறகு, அவிநாசி ரோட்டிலுள்ள கொடிசியா அரங்கில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு நவ. 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், இணைய மாநாட்டையும் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்துடன் இணைந்து நடத்த நவ. 12ம் தேதி அறிவிப்பு வெளியானது.
மாநாட்டை ஒட்டி மொத்தம் 21 குழுக்கள் அமைக்கப்பட்டது. மாநாட்டு தலைமைக்குழு, ஆலோசனைக்குழு, சிறப்பு மலர்க்குழு, ஆய்வரங்க அமைப்பு, தமிழ் இணைய மாநாடு, ஒருங்கிணைப்பு, வரவேற்பு, ஊர்வலம், பொது அரங்க நிகழ்ச்சி அமைப்பு, விருந்தோம்பல், கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் சுற்றுலா, தங்கும் இடவசதி, மாநாட்டு அரங்கம் அமைப்பு, மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரம், கோவை நகர மேம்பாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வை, போக்குவரத்து ஏற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் மீட்பு பணி, ஆய்வரங்க அமைப்பு உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சியினர், அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மாநாட்டுக்காக 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கோவை மாவட்டம் மேம்படுத்தப்பட்டது. அந்த நிதியில், கோவை நகரில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்படுத்தப்பட்டது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு மாநாடு வேலைகளில் கவனம் செலுத்தினர். மாநாடு தேதி நெருக்கிக்கொண்டிருந்த நிலையில், மாநாட்டை ஒட்டி துவங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும், அடிப்படை வசதிகளும் நிறைவு செய்ய முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி பணிகளை நிறைவு செய்தனர்.
பல தடைகளையும் தாண்டி உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. வாகனங்கள் நிறுத்துவதற்கு பொதுமக்கள், விஐபி, ஊடகம், விருந்தினர்களுக்கு தனித்தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர், சுகாதார வசதிகளையும் கவனித்தனர். இதனால், மாநாட்டிற்கு ஐந்து நாட்களும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக இருந்தது. கோவையில் மாநாடு துவக்க நாளில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். முதல் நாளில் கட்சியினர் அழைத்து வந்த "கரைவேஷ்டி' கூட்டமாக இருக்கும்; அடுத்தடுத்த நாட்களில் தான், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக வருவோரை கணக்கிட முடியும் என்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் காத்திருந்தனர். எல்லோர் கருத்தையும் தகர்த்தெரியும் வகையில் கட்டுக்கடங்காத கூட்டம் மாநாட்டை ஆக்கிரமித்தது.
காலை 9.00 மணி முதல் குடும்பமாக வந்த பொதுமக்கள் பொது அரங்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்தனர். மொழி ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களுக்கு கொடிசியா உள்ளரங்கத்தில் தனியாக அரங்குகள் அமைத்து ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்தனர். இணைய மாநாடு, தொல்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் நாள் முழுவதும் பார்த்து ரசித்தனர். தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செவிக்கு உணவு கிடைத்ததை போன்று, மக்கள் பசியாறுவதற்கு மானிய விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டது. கண்காட்சியை காண பொதுமக்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளதால், வரும் 4ம் தேதி வரையிலும் கண்காட்சியை நீட்டிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். செம்மொழி மாநாடு முடிந்ததும், இனியவை நாற்பது அலங்கார ஊர்வலத்தில் அணிவகுத்து ஊர்திகளை கொடிசியா வளாகத்தில் மக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதார். மாநாடு முடிந்ததும் போலீஸ் கெடுபிடிகள் இல்லாமல் பொதுமக்கள் சிற்பங்களையும், கைவினைப்பொருட்களையும், இனியவை நாற்பது அலங்கார ஊர்திகளையும் பார்த்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் பொது அரங்கத்தில் 50 ஆயிரம் பேர் அமர்வதற்கு இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. இருக்கை கிடைக்காமல் பொதுமக்கள் மாநாட்டு நிகழ்வுகளை நகர்ந்தவாறு பார்த்து ரசித்தனர். தினமும் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்றனர். கடந்த ஐந்து நாட்களில் 10 லட்சம் பேர் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் உணர்வுகளை பெற்றுச் சென்றுள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.
மாநாட்டில் நடந்தது என்ன: முதல் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் "திராவிட மொழிகளில் தொன்மையான தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழின் பழமை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உலக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் எளிமையாக்கப்பட்டு, கணினி தமிழ் வளர வேண்டும்' என்பதை வலியுறுத்தினார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "என்னால் முடிந்ததை தமிழுக்கு செய்து கொண்டுள்ளேன். தமிழுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் உத்தரவிடுங்கள். அந்த உத்தரவை நிறைவேற்ற காத்திருக்கிறேன்' என்று அறிவித்தார். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து கூறி வருகின்றனர். மாநாட்டு நிறைவு நாளில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். அது இன்னொரு "பட்ஜெட்' ஆக இருக்கும்' என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கருத்தரங்குகளில் பேசிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், "தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் சென்றடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும். இணைய தளத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் அறிஞர்கள் மாநாட்டை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்' என்று வலியுத்தினர். ஆய்வரங்கத்தில் 198 அமர்வுகளில் 787 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், மொழி பெயர்ப்புகள், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சிகள், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். செம்மொழி மாநாட்டில் தமிழனின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் புராணங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறின. செம்மொழி மாநாட்டிற்கு ஏராளமான தடைகள் வந்த போதும், தமிழக முதல்வர் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார். ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வரங்கம் மூலம் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டு, கண்காட்சி மூலம் மக்களிடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்துள்ள நிலையில் இந்த மாநாட்டால் தமிழின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
தினமலரின் பங்கு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தினமலர் நாளிதழ் பங்கு இன்றியமையாததாக இருந்தது. மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் "தினமலர் இணையதளத்தில்' வெளியிட்டு உலகத்தமிழர்கள் மாநாட்டை நேரில் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அறிஞர்கள் பேட்டி, கருத்துக்கள், கட்டுரைகள், கவியரங்கம், கருத்தரங்கம், விவாதங்களை உடனுக்குடன் தினமலர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், தினமலர் நாளிதழில் தினமும் சிறப்பு மலர் வெளியிட்டது. இணைய மாநாட்டில் தினமலர் இணைதள அரங்கில், மாநாட்டு நிகழ்வுகளை இலவச பிரதியாக அச்சிட்டு கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. தானியங்கி இயந்திரத்தின் மூலம் தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டது. போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்களுக்காக வலைதள வசதியுடன் கணினிகள் அமைக்கப்பட்டு, இலவச பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.
தினமலர் இணைய தள அரங்குக்கு வந்த முதல்வர், துணை முதல்வர், மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், வெளிநாட்டு தமிழர்கள், தமிழ் அறிஞர்களுக்கு தினமலர் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய கடல்தாமரை புத்தகம் இலவமாக வழங்கப்பட்டது. அரங்கை பார்வையிட்ட துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தினமலரின் தமிழ்ச் சேவையை பாராட்டினர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||