'பிளஸ் 2 தேர்வில், மாநிலத்திலேயே சென்னையைச் சேர்ந்த மாணவி முதலாவதாக தேர்வு; தேர்வில் வெற்றி கிடைக்காது என்று நினைத்து விஷமருந்தி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட மாணவன் தேர்ச்சி பெற்றான். தமிழில் 100க்கு 98 பெற்ற மாணவிக்கு, செம்மொழி சங்கத்தினர் பாராட்டு. 'தேர்ச்சி பெறாத மாணவர் மூவர், பெற்றோருக்கு பயந்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு ஓட்டம்; குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவி, தாவணியில் மரணத்தைத் தேடிக் கொள்ள, பெற்றோர் மட்டுமல்ல, பள்ளிக்கூடமே சோகத்தில் மூழ்கியது...' - இது போன்ற செய்திகள், ஒவ்வொரு வருடமும், பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வரும்போது வருவது வழக்கமாய் போனாலும், அது பெற்றோரை சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளாக்குகிறது. 'இளம் வயதினர் ஏன் இந்த முடிவுக்கு வருகின்றனர்? இதை தடுக்க வேண் டாமா?' என்ற கேள்விக்கு சமூக ஆர்வலர்களை பதில் தேட வைக்கின்றன. இருந்தாலும், ஆண்டுக்காண்டு இந்த எண்ணிக்கை பெருகி வருவது தான் மிகவும் வேதனைக்குரியது.
ஒவ்வொரு பெற்றோரும், பிள்ளைகள் பற்றி காண்கிற கனவு மட்டுமல்ல, 2020ல் இந்தியா எப்படி இருக்கும் என்பது பற்றி, 'கனவு மெய்ப்படட்டும்' என்று, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், குழந்தைகளை உற்சாகப்படுத்தி வரும் சூழ்நிலையில், இந்த நிலைமை தொடரலாமா? இச்செயலை பிள்ளைகளுக்கு யார் கற்றுக் கொடுத்தது? யாரும் கற்றுக் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கையில், இந்நிகழ்வு தொடர்வது, பள்ளி பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், தன்னம்பிக்கை குறைவதையும், இருக்கிற நம்பிக்கை தளர்வதையும் அல்லவா காட்டுகிறது? இது, சமுதாயத்திற்கு நல்லதா? இதை முறியடிக்க வேண்டாமா? பிஞ்சு மனங்களை நஞ்சாக மாற்றும் தற்கொலை என்ற பயங்கரவாதத்தை, விதையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா? ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் நினைத்து நினைத்து, சுவைத்து சுவைத்து, அசை போடுகிற மாணவ பருவத்தை துளிர விடாது தூபம் போடும் செயலை எதிர்க்க வேண்டாமா? படிப்பில் சிரமப்படும் பிள்ளைகள் மட்டுமல்ல, நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கூட, சில நேரங்களில் இந்த முடிவை தேடிக்கொள்வதும் உண்டு. காரணம், படிக்க முடியவில்லை; முயற்சி எடுத்தும் முடியால் போய் விடுகிறது; பெற்றோரின் எதிர்பார்ப்பின் மிகுதி அல்லது அவர்களின் அதிகப்படியான கண்டிப்பு; அவமானத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற எண்ணம். காரணம் எதுவாக இருந்தாலும், நிகழ்வுகள் தொடராமல் இருப்பதற்கு வழிதான் என்ன?
'அன்றாட வேலைகளை ஆசையோடு செய்; அதுதான் வெற்றியின் ஒருவரி ரகசியம்' என்ற வரியை நினைவு படுத்துங்கள். 'தோல்வி என்பது விலகி நிற்கும் வெற்றி' என்பதை பிள்ளைகளுக்கு, புரிய வைக்க வேண்டும். தேர்வில் தோற்றால் வாழ்வே முடிந்து விடாது. ஆபிரகாம் லிங்கனுக்கு, 15 வயதில் தான் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பே கிடைத்தது. அவர் பள்ளியில் படித்த மொத்த நாட்கள் 365 தான். படிப்பதற்கு வாய்ப்பும், வசதியும் இருக்கும் போது, மனம் தளர்ந்து விடலாமா? அதைவிட சிறந்து காட்ட வேண்டாமா? ஒரு கனம் சிந்தித்து பாருங்கள்... தற்கொலை என்பது நொடியில் எடுக்கும் முடிவு தான். மனித வாழ்வு என்பது, கிடைத்ததற்கரிய பெரும் பாக்கியம். சவால்களை சமாளிக்காது, வெற்றிப் பாதையிலிருந்து விலகி கோழைகளாய் சாவதை, எந்த வகையில் எடுத்துக் கொள்வது? வாழ்வதோ ஒரு முறை, அதில் வாழ்ந்து, சிறந்து காட்ட வேண்டும். வாழ்வில் வெற்றியை ஏற்றுக் கொள்வது போன்று, ஏற்படுகிற சிறு சறுக்கலையும் சிறு சிறு தோல்விகளையும், ஏற்று கொள்கிற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
'திறமையற்றவர்கள் என்று யாரும் இல்லை. என்றாலும், சிலர் தோல்வி அடைவதின் காரணம் அத்திறமையை பயன்படுத்தாததே' என்கிறார் கால்வின் கூலிட்ஜ் என்ற அறிஞர். பிளஸ் 2 தேர்விலோ அல்லது 10ம் வகுப்பு தேர்விலோ வெற்றி பெறவில்லை என்றால், வாழ்வு முடிந்து விட்டதாய் பொருள் அல்ல. ஒவ்வொரு மாணவனுக்கும், பிளஸ் 2 என்பது வாழ்வில் அடித்தளம் தான். அந்த அடித்தளத்தில் ஆரம்ப வாழ்க்கை ஓரளவு நிர்ணயிக்கப்படுவது உண்மை தான். அதற்காக அடித்தளத்தில் கொடுக்கிற நெருக்கம், அடித்தளமே ஆட்டம் கண்டு விடக்கூடாது. முதலுக்கே மோசம் வந்து விடக்கூடாது. 'நான் அப்பவே சொன்னேன்... நீ நன்றாய் படித்திருந்தால் இது போல் நடக்குமா?' என்று சொல்வதை காட்டிலும், 'பரவாயில்லை... மனம் தளராதே; நம்பிக்கையை கைவிடாதே. வருகிற தேர்வில் ஒரு கை பார்த்து விடலாம்' என்ற வார்த்தைகள், நிச்சயம் ஏமாற்றத்தை நீக்கி, மாற்றத்தை கொடுக்கும்.
பெற்றோர் இக்காரியத்தில், அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 மாதம் சுமந்து வளர்த்து, 16 வயதில் முழுமையாக இழக்கிற இழப்பை, எந்த பெற்றோரால் தான் தாங்கி கொள்ள முடியும். உங்கள் கவலையை கோபமாக்கி, திட்ட வேண்டாம். அதிலும், பக்கத்து வீட்டு பிள்ளைகளோடு, ஒருபோதும் ஒப்பிட்டு சொல்ல வேண்டாம். 'நான் திட்டியதால் தானே, இதுபோல் செய்து விட்டாய்; இனி திட்டவே மாட்டேண்டா...' என்று, கதறி அழுத பெற்றோர் பலரை பார்க்க நேர்ந்துள்ளது. பிள்ளைகளுக்கு, வருத்தம் ஏற்பட்டுள்ள நேரத்தில், உங்களின் ஆதரவும், அன்பும், பரிவும் தேவைப்படுகிறது என்பதை, நீங்கள் உணர வேண்டும். உங்களை விட்டால் வேறு யார் அவர்களுக்கு, தைரியம் கொடுக்க முடியும், தோல்வி, வாழ்க்கையின் இயல்பு என்பதை உணருங்கள். 'எனது நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும். போன வாரத்து துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். திங்கட்கிழமை இருந்த பயமும், வேதனையும், புதன் கிழமை வரை கூட இருப்பதில்லை. இந்த புரிதல் மனிதனுக்கு வந்துவிட்டால், சோர்ந்து போகாமல் தன் கடமையை தொடர்ந்து கொண்டிருப்பான்' என்கிறார் பிரபல எழுத்தாளர் ஒருவர். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகளுக்கு, ஆசிரியர்களும், பெற்றோரும் ஆதரவாக இருந்து, அவசரப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், நீங்களே அவர்களின் அவசரத்திற்கு, ஆதாரமாகி விடக் கூடாது.
உடலில் மிகப்பெரிய குறைகளை கொண்டவர்கள், அதை தங்களின் நிறைகளாக மாற்றி, ஜொலித்தவர்களை சற்றே பாருங்கள். அதன்பின், ஒரு முடிவுக்கு வாருங்கள். பின், வாழ்ந்து காட்டுங்கள். போலியோ பாதித்த ரூஸ்வெல்ட், அமெரிக்க அதிபராக ஆகவில்லையா? சிறுவயதில் சரியாக ஆகாரம் இல்லாததால், உடல் உறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சி அடையாது, பார்த்தவர்கள் எல்லாம் பரிகாசம் செய்யும் தோற்றத்தில் அமைந்துவிட்ட சார்லி சாப்ளின், தன்னை பார்த்து சிரித்தவர்கள் எல்லாரும் காசு கொடுத்து, தன் சிரிப்பை பார்க்க வைக்கவில்லையா? தன்னைப் போல் கண் பார்வையில்லாதவர்கள் குறையைப் போக்க, அவர்கள் படிப்பதற்கு எழுத்துக்களை கண்டுபிடித்து கொடுத்தார் பிரெய்லி. காது கேட்காத தாமஸ் ஆல்வா எடிசன், பிறர் கேட்டு மகிழ கிராமபோனை கண்டுபிடித்தார். 'தடைகள், சறுக்கல்கள் மற்றும் தோல்விகளை ஒழிக்கும் மருந்து, இரண்டு ரசாயன கலவையால் ஆனது. அவை, 'பயிற்சி, முயற்சி' என்பவை. தோல்வியை கண்டு துவண்டு விட வேண்டாம். 'கடின உழைப்பு உன் கைவசமானால், பின், கவலைப்பட அவகாசம் ஏது?' முயற்சி செய்யுங்கள்; வெற்றி பெறுங்கள்.
-பெ.மாடசாமி, காவல் துறை உதவி ஆணையாளர்
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||