இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம். போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள், நன்மைகள் குறித்து மதுரை மனநல டாக்டர் சி. ராமசுப்பிரமணியன், டாக்டர் ரத்தினவேல், உளவியல் நிபுணர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணன் கூறியதாவது :புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும். எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் இருக்கும்.
புகையை கைவிடுவது எளிது : புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும். எப்போது, ஏன், யாருடன், எந்த சூழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட்டை, காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். வீட்டை நறுமண பினாயில் போட்டு சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். நெருக்கமான உறவினர்கள், நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என தெரிவிக்க வேண்டும். பின் சொன்னதை செய்ய வேண்டும்.
புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள் : ரத்தஅழுத்தம், நாடித்துடிப்பும் சாதாரண நிலைக்கு வரும். கை, காலில் அபரிமிதமான சூடு உஷ்ணம் குறையும். உடலில் தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு குறையும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். நாக்கில் சரியான ருசி தெரியவரும். மாரடைப்பு வாய்ப்பு குறையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இருவாரங்களுக்கு பின், ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். நடக்கவே சிரமப்பட்டவர்கள், நுரையீரல் விரிவடைந்து பிராண வாய்வு அதிகமாக சென்றுவிடுவதினால் மிக வேகமாக நடக்கவும், ஓடவும் முடியும்.
ஒன்பது மாதங்களுக்கு பின், இருமல், மூக்கடைப்பு குறைந்து சளி வருவது நிற்கும். ஓராண்டிற்கு பின், மாரடைப்பு வருவது பாதியாக குறையும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், பக்கவாதம், மாரடைப்பு, ரத்தஅழுத்தத்தினால் மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிலிருந்து விடுதலை ஏற்படும்.பத்தாண்டுகளுக்கு பின், புற்றுநோயால் இறப்பது பாதியாக குறையும். பதினைந்து ஆண்டுகளுக்கு பின், புகைப்பதை நிச்சயம் விட்டுவிட முடியும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களையும் இதைப்போல நடந்துகொள்ளும் வகையில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||