ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர், முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் 30 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், முதலிடம் பெற்ற 25 பேரில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர். சைதை துரைசாமி மனித நேய ஐ.ஏ.எஸ்., அகடமியில் படித்த 43 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தம் தேர்வாகிய 875 பேரில், 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்கள். தேர்வின் முக்கிய அம்சங்கள்: இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் நான்கு லட்சத்து 9,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 91 பேர் முதல் கட்ட தேர்வு எழுதினர். இதில், 12 ஆயிரத்து 26 பேர் முக்கிய எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இதில் 2,432 பேர் கடந்த மார்ச் - ஏப்ரலில் நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 195 பெண்கள் உட்பட 875 பேர் தேர்வு பெற்றுள்ளனர். ஸ்ரீநகரில் மருத்துவ பட்டம் பெற்ற டாக்டர் ஷாபேசல் முதலிடம் பிடித்தார். இவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். டில்லியைச் சேர்ந்த பொறியாளர் பிரகாஷ் ராஜ் புரோகித் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இது இவரது இரண்டாவது முயற்சி.
பெண்களில், டில்லியைச் சேர்ந்த எம்.ஏ., பட்டதாரி இவா சகாய் முதலிடம் பெற்றுள்ளார். இது இவரின் முதல் முயற்சி. முதலிடம் பெற்ற 25 பேரில், 10 பேர் பெண்கள். முதல் 25 இடம் பெற்றவர்களில் 15 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள். சென்னை, மும்பை, திருவனந்தபுரத்தில் இருந்து தலா இரண்டு பேரும், அலகாபாத், சண்டிகர், கட்டாக், ஐதராபாத்தில் இருந்து தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட சிவில் பணிகளுக்கான நியமனத்திற்கு தேர்வு பெற்றுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்தவர்கள்; இதில் ஐந்து பேர் பார்வையற்றவர்கள்.
மனித நேய ஐ.ஏ.எஸ்., கல்வியக மாணவர்கள் சாதனை: சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் இயங்கி வருகிறது. 2006ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த கல்வியகத்தில் இதுவரை ஏராளமானோர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கு பயிற்சி பெற்ற 42 பேர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2009 -10ம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வில் இங்கு பயிற்சி பெற்ற 83 பேர் பங்கு பெற்றனர். இதில் 32 மாணவர்களும், 11 மாணவியர் என 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் இந்திய அளவில் லலிதா 12வது இடமும், முதன் முறையாக தேர்வெழுதிய சண்முகப் பிரியா 36வது இடமும், சிவகுமார் 38வது இடமும், நிவாஸ் 45 வது இடமும், வினோத்பிரியா 62வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிவகுமார் ரயில்வேயிலும், நிவாஸ் டி.எஸ்.பி.,யாகவும், வினோத்பிரியா வங்கியிலும் பணிபுரிகின்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமித் குல்வானி போலே என்பவரும், கேரளாவைச் சேர்ந்த சரண் ஜோஸ் என்பவரும் மனித நேய கல்வியகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை மனித நேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி இயக்குனர் வாவூசி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் பாராட்டினர். இதே போல் சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ்., அகடமியில் பயிற்சி பெற்ற 52 பேர் நேர்முகத் தேர்விற்கு சென்று 31 பேர் அதில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த செவலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் திருப்பூரில் சாதாரண நிலையில் பணி புரிந்து தன் சுய முயற்சியால் தற்போது ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரசு மையத்தில் 49 பேர் தேர்வு: சென்னை அண்ணாநகரில் இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அரசு சார்பாக நடத்தப்படும் இப்பயிற்சி மையத்தில் விண்ணப்பம் செய்த ஆயிரக்கணக்கான மாணவர்களில், தேர்வு எழுதி அதில் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 300 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களில் 200 பேருக்கு, பயிற்சி மையத்திலேயே தங்கும் இடம் மற்றும் உணவு அரசின் சார்பில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்திலிருந்து, இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் 49 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கனகவள்ளி(இந்திய அளவில் 15வது ரேங்க்) நிவாஸ்(45வது ரேங்க்) வினோத் பிரியா(62வது இடம்) விக்ரமன்(இந்திய அளவில் 84வது ரேங்க்) பெற்றனர்.
தேர்வான கனகவள்ளி கூறியதாவது: எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி. அப்பா முத்துக்குமார் ஓய்வு தலைமை ஆசிரியர். அம்மா விமலா குடும்பத்தலைவி. வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். குரூப்-1 பிரிவில் தேர்வாகி, திருச்சியில் உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறேன். சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மைத் துறையில் உதவியாளராகவும், வணிகவரித்துறையில் உதவி வணிகவரி அலுவலராக சென்னையில் பணி புரிந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக மூன்று முறை நேர்முகத் தேர்வு வரை சென்று திரும்பினேன். நான்காவது முறையாக பங்கேற்ற கடைசி வாய்ப்பில் வெற்றி பெற்றேன். எனக்கு வரும் 23ம் தேதி நாகர்கோவில் திருமணம் நடக்கிறது. எனது கணவர் தனேஷ், பொறியியல் பட்டதாரி. எனது வெற்றிக்கு காரணம், எனது அக்கா மற்றும் குடும்பத்தினர் தான். அண்ணாநகர் பயிற்சி மையத்தில் நேர்முகத்தேர்வுக்கான ஒத்திகையில் சீனியர் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர். அது தான் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற உதவியாக இருந்தது. இவ்வாறு கனகவள்ளி கூறினார்.
நிவாஸ் கூறியதாவது: எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவன் நகர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளேன். மூன்று ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, சென்னை வண்டலூரில் டி.எஸ்.பி., யாக கடந்த ஆறு மாதமாக பயிற்சி பெற்று வருகிறேன். அப்பா ஜனார்த்தனன், அம்மா ஜெயலட்சுமி அரசு பணியில் ஓய்வு பெற்றவர்கள். மனைவி பபிதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவ்வாறு நிவாஸ் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||