நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி
நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் தொலைநோக்குத் திட்டமும் கலந்த பசுமைப் புரட்சி மீண்டும் ஏற்பட்டால்தான், தமிழகத்தில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லாமல் தடுக்க முடியும்.
விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ள நாடுகள், இதன் வளர்ச்சிக்கு சரியான திட்டங்களைச் செயல்படுத்தி, அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து வளமிக்க நாடாக மாற்ற முயற்சிக்கும். ஆனால், 75 சதவீத மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தைக் காப்பதற்கு இப்போது உள்ள அரசுக்கும், இதற்கு முன்னர் இருந்த அரசுகளிடமும் தொலைநோக்குச் சிந்தனைகள் இல்லாமல் போனதால், இப்போது மீண்டும் ஒரு பசுமைப்புரட்சியைத் தமிழக விவசாயம் எதிர்நோக்கியுள்ளது.
1960-க்குப் பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பசுமைப் புரட்சி தமிழக விவசாயத்தில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்தது. இதன்பிறகு கிணற்றுப் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1951-ல் 14,751 பம்ப்செட்டுகள் இருந்தன. இது 1974-ல் 6,81,205 பம்ப்செட்டுகளாக உயர்ந்தன. இப்போது சுமார் 25 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளதாக விவசாய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பசுமைப் புரட்சிக்குப் பின்னர் நிலத்தடி நீரின் பயன்பாடு பிரதானமாக்கப்பட்டது. ஏரி, கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. ÷அந்தச் சமயத்தில்தான் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர், சந்தைப் பொருளாகியது. அப்போது இருந்த தமிழக அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளவில்லை.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு, விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்தது. விவசாயத் தேவைக்கான இயற்கையான நீர் ஆதாரங்களை அதிகரித்துக் கொள்ளவோ, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்துக் கொள்ளும் சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவோ தமிழக ஆட்சியாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ளவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளில் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள், இந்தப் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது. அரசியல் மாற்றங்களால், ஓர் அரசு மேற்கொள்ளும் கொள்கைக்கு நேர்எதிரான கொள்கையை மற்றோர் அரசு எடுக்கிறது. விவசாயிகளின் நலன்களை மனதில் கொள்ளாமல், சுய லாபத்துக்காக அரசியல் கட்சிகளும் கருத்துகளில் முரண்பட்டு நிற்கின்றன.
அரசு மணல் குவாரிகள் என்ற பெயரில் முக்கிய ஆறுகள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது. அரசு மணல் குவாரிகள் இல்லாத ஆறுகளில் அரசியல்வாதிகள், உள்ளூர் மக்கள் துணையுடன் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் அந்தந்த ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதால் விவசாயக் கிணறுகள் பெரும்பாலானவை வறண்டுவிட்டன. ஆற்றின் மூலம் நீரைப் பெறுகின்ற ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில், மணல் கொள்ளை மூலம் ஆற்றின் ஆழம் அதிகரிப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே ஏரிகளுக்குத் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால், வைகை மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலுள்ள சுமார் 25,000 ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனம் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும், காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் அதிக ஆழம் ஏற்படுவதால், ஆற்றின் நீரோட்ட வேகம் வெகுவாகத் தடைபட்டுள்ளதாகவும், இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துக்குப் போதுமான அளவில் நீர் ஆதாரம் இல்லை என்ற நிலை ஒருபுறமிருக்க, இருக்கும் நீர் வளத்தையும் பாதுகாக்காமல் விட்டுவிட்டதால் ஆறுகள் அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. காவிரி, அமராவதி, நொய்யல், பவானி, பாலாறு போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேற்றும் ஆலைக்கழிவுகள், சுற்றுச்சூழல் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நதிநீரும், நிலத்தடி நீரும் இந்த தலைமுறையே பயன்படுத்த முடியாத நிலைக்கு மாசுபடுத்திவிட்டன.
இதனால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை. சாகுபடி செய்யும் நிலங்களிலும் விளைச்சல் பெருமளவில் குறைந்து வருகிறது. இந்த ஆற்றுப்படுகைகளில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள், ஆலைக் கழிவுகளால் விவசாயம் செய்ய முடியாத அளவுக்குப் பாழடைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற விவசாயிகளின் குரல் மட்டும், பல ஆண்டுகளாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலின்போதும், பட்ஜெட்டின் போதும் சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கோடிகளில் நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்புகள் அரசிடமிருந்து பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
விவசாயத்துக்கு மிக முக்கியத் தேவையாக உள்ள நீர் ஆதாரம் பாதுகாக்கப்படாததால், விவசாயம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட பாதுகாப்பதற்கு ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான், இன்று அத்தியாவாசியப் பொருள்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இனிமேலாவது, ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு, எஞ்சியுள்ள விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு, நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||