நூலகம்; இல்லையெனில் சிறை: நான் மட்டுமே வாழ வேண்டும் எனும் நிர்ப்பந்தத் தோடு தனித் தீவுக்கு அனுப்பினாலும், போவதற்கு நான் தயார்... புத்தகங்களோடு போக அனுமதித்தால். - நேரு
நேரம் வீணாகிறதே என்று பதட்டப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள், புத்தகங் களை வாசிப்பவர்கள் மட்டுமே. - அண்ணாதுரை.
உங்களிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தால் என்ன செய் வீர்கள்...? நான் ஒரு புத்தகம் வாங்குவேன் - அப்துல் கலாம்.
தொலைக்காட்சியால் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். யாராவது அதை 'ஆன்' செய் தாலே, நான் பக்கத்து அறைக் குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விடுவேன். - க்ரூசோ மார்க்ஸ்.
என் முப்பதாண்டுக் காலத் தில் ஒரே போக்கிடமாய் இருந் தவை புத்தகங்களே. - நெல்சன் மண்டேலா.
நூலகங்களைக் கட்டுங்கள்; இல்லையேல் சிறைச்சாலைகளைக் கட்ட வேண்டி வரும். - மாவீரன் நெப்போலியன்.
புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது: புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள். புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான்! ஆனால், இது இங்கல்ல... அமெரிக்காவில்! சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது. இந்தியா நிலை என்ன? நம் இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல; படிக்கின்றனர். இணையம், இ-புக், இ-ரீடர் என்று நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில், இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகளிடம், புத்தகத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்பது, சிலரின் கருத்தாக, ஆதங்கமாக, வேதனையாகக் கூட இருக்கிறது. உண்மை அதுதானா என்பது தீர ஆராயப்பட வேண்டியதுதான்.
இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினர் தான். இவர்களில் 20 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில், 33 சதவீதம் பேர் பட்டப்படிப்பு மற்றும் பிற படிப்புகள் படித்தவர்கள்; 59 சதவீத இளைஞர்கள், பணிபுரிபவர்கள். சமீபத்தில், டில்லியில் புத்தகச் சந்தை நடந்தது. உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சந்தை இது. இந்திய மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் 1,200 பேர், இதில் கலந்து கொண்டனர். மொத்தம் 2,400 கடைகள்; இவற்றில் 35 கடைகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவை.
இப்புத்தகச் சந்தையைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,'நவீன தொழில் நுட்பம், குழந்தைகளின் புத்தக வாசிப்பைக் குறைத்து விட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என, கூறினார். டில்லி புத்தகச் சந்தைக்கு, இரண்டு லட்சத்துக்கும் மேலான புத்தகப் பிரியர்கள் வந்துள்ளனர். இவர்களில் இளைஞர்கள் தன்னம் பிக்கை ஊட்டும் புத்தகங்கள், வெற்றி பெற வழிகாட்டும் நூல்கள், யோகா புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டும் நூல்களை விரும்பி வாங்கியதாக, நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் நேஷனல் புக் டிரஸ்ட், புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி, இந்திய இளைஞர்களிடையே ஓர் ஆய்வு நடத்தியது. அதில், செய்திகள் மற்றும் தகவல்கள் அறிவதற்காக, 63 சதவீத இளைஞர்கள், நாளிதழ்களையும், 17 சதவீதம் பேர், வார, மாத பத்திரிகைகளையும் நாடுகின்றனர் என்றும், செய்திகளுக்காக இணையத்தை நாடுவோர், வெறும் 7 சதவீதம் தான் என்பதும், தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு, இந்திய இளைஞர்களிடையே, படிக்கும் பழக்கம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை காட்டுகிறது.
தமிழகத்தில்? மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறியதாவது: புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது. புத்தக விற்பனை அதிகரித்துள் ளது உண்மை தான். ஆனால், இன்றைய இளைஞர்களின் கல்வியறிவுப் பெருக்கத்தோடும், மக்கள் தொகையோடும் ஒப்பிடும் போது, இது ஒன்றுமே இல்லை. இன்று எந்த அரசியல் அமைப்புக்கும், புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனது வகுப்பில் பாடம் எடுக்கும்போது, உணர்ச்சிபூர்வமான எந்த விஷயத்தைச் சொன்னாலும், மாணவர்களிடம் எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை. கிராமப்புற மாணவர்களிடம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது. இவ்வாறு, பேராசிரியர் ராஜாங்கம் கூறினார்.
நூலகத் துறையின் முன்னாள் இயக்குனர் தில்லைநாயகம் ஓர் இணையதளப் பேட்டியில் கூறியிருப்பதாவது: வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம், மாயையே. வாசிப்புத் திறன் கூடியிருந்தால், இந்த நாடு மேன்மையான சமூக மாற்றத்தைச் சந்தித்திருக்கும். கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களின் வாசிப்பு, தொழில்முறை வாசிப்பாக (புரொபஷனல் ரீடிங்) மட்டுமே இருக்கிறது. மன அழுத்த நோய் அதிகரிப்பதற்குக் காரணம், புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லாததுதான். முன்பு பள்ளிகளில் நூலகத்துக்கு என்று ஒரு வகுப்பு இருந்தது. இப்போது அது இல்லை. இவ்வாறு தில்லைநாயகம் கூறியிருக்கிறார்.
இதற்கு நேர்மாறாக, புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்பது, நெல்லை மனோன்மணியம் பல்கலை தமிழியல்துறைத் தலைவர் பேராசிரியர் அ.ராமசாமியின் கருத்து. 'கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது. இளைஞர்களில் குறிப்பாக ஐ.டி., துறையில் இருப்பவர்கள், புத்தகம் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்' என்பது, அவர் வாதம். காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணனும், இதே கருத்தை முன்வைக்கிறார். அவர் கூறியதாவது: புத்தகம், இ-புக், இ-ரீடர் என்ற பாகுபாடு அவசியமற்றது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கணிசமான அளவில் இளைஞர்கள் வந்திருந்தனர். ஆங்கில புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்றாலும், தமிழ்வழிக் கல்வி தடுமாறும் இக்காலத்தில், எப்படி இவ்வளவு இளைஞர்கள் தமிழ் புத்தகங்களை நாடி வருகின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆனால், தமிழில் வாசிப்பு குறைவதற்கு, தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவமின்மை, ஆங்கிலத்தில் உள்ளது போல், குழந்தை இலக்கியம், தரமான பதிப்பு, பரந்து விரிந்த சந்தை, உடனடி வெளியீடு ஆகியவை தமிழ் பதிப்புலகில் இல்லாதது என, பல காரணங்களைச் சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப் பதிப்புலகில் ஏற்பட்ட மாற்றம் தான், வாசிப்புப் பழக்கம் குறையவில்லை என்று காட்டுகிறது. ஆனால் நம் மக்கள் தொகைக்கு முன், இதெல்லாம் சாதாரணம் தான். இவ்வாறு கண்ணன் கூறுகிறார்.
கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது: இளைஞர்கள், கதைகளை விட, பிறதுறைப் புத்தகங்களை அதிகம் நாடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புத்தக வெளியீடு அதிகமாகியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது, இரண்டு, மூன்று மடங்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஆங்கில மோகத்தைக் கண்டு, நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆங்கில மோகம் என்பதும், ஆங்கிலத்தில் புலமை என்பதும் வேறு,வேறு. இன்று தினப்பத்திரிகைகள் அதிகம் விற்பனையாகின்றன. புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. தமிழிலும் படிக்கின்றனர்; ஆங்கிலத்திலும் படிக்கின்றனர். இணையம் மூலமாக அதிக நேரம் படிக்க இயலாது. இவ்வாறு பத்ரி சேஷாத்ரி கூறினார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து, இணையதளத்தில் கூறியுள்ளதாவது: இன்றைய இளைய தலைமுறையினர் மென்பொருள், ஊடகம், வங்கி, கல்லூரி, பன்னாட்டு நிறுவனங்கள் என்று பணிபுரிந்தபடியே, கூர்ந்து தமிழ் இலக்கியப் போக்குகளை கவனிக்கின்றனர். படிக்கின்றனர். இன்னொரு சந்தோஷம்... இத்தனைத் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும், அதை வாங்குவதற்காக அலைமோதுவதைக் காண்பதும் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியாவில் முதன்முதலாக, பொதுநூலகச் சட்டம் போடப்பட்டது தமிழகத்தில்தான். தமிழகத்தில் 4,600 உயர்நிலைப் பள்ளிகளில் 85 சதவீதப் பள்ளிகளிலும், 5,100 மேல்நிலைப் பள்ளிகளில் 98 சதவீதப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளதாக, 2002ல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. மொத்தமுள்ள 48,062 அரசு ஆரம்பப் பள்ளி நூலகங்களில், இரண்டு கோடி புத்தகங்கள் உள்ளன.
இந்தியாவில் முதன்முதலாக, பொதுநூலகச் சட்டம் போடப்பட்டது தமிழகத்தில்தான். தமிழகத்தில் 4,600 உயர்நிலைப் பள்ளிகளில் 85 சதவீதப் பள்ளிகளிலும், 5,100 மேல்நிலைப் பள்ளிகளில் 98 சதவீதப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளதாக, 2002ல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. மொத்தமுள்ள 48,062 அரசு ஆரம்பப் பள்ளி நூலகங்களில், இரண்டு கோடி புத்தகங்கள் உள்ளன.
தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. கோவில்களில் நூலகங்கள் படிப்படியாகத் துவக்கப் பட்டு வருகின்றன. பள்ளிகளில் சில புத்தகங்களை ஒன்றாகக் கட்டி, வகுப்புகளில் தொங்கவிடும், 'புத்தகப் பூங்கொத்து' திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் புத்தகங்களை அந்தந்த வகுப்பு மாணவர்கள் படித்த பின், இவை அடுத்த வகுப்புக்கு மாற்றப்படும். கடந்த 2009, செப்டம்பர் 17ல் சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்த விழாவில் பேசிய, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, 'தமிழக மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், வாரம் ஒருமுறை மாணவர்கள், நூலகங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவர்' என்று அறிவித்தார். இதற்காக, 'நமது உலகம் நூலகம்' என்ற திட்டம் உருவாக்கப் பட்டது. 2009 அக்டோபர் 16ம் தேதி முதல் 2010 அக்டோபர் 15ம் தேதி வரை, 'நூலக எழுச்சி' ஆண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறந்துவிடவில்லை, ஒட்டுமொத்தமாக நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி விடவில்லை என்பதையே இவர்களின் கருத்துக்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
பார்வையற்றோரும் புத்தகச் சந்தையும்: பார்வையற்றோரும் புத்தகம் வாசிப்பதற்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, டில்லி புத்தகச் சந்தையின் முன், 300 பார்வையற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றில் 700 மட்டுமே பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காகத் தயாராகின்றன. உலக பார்வையற்றோர் யூனியன், ஒவ்வொரு நாட்டிலும் வெளியாகும் புத்தகங்களில் 5 சதவீதமாவது இவர்களுக்காகத் தயாராக வேண்டும் என்று கூறியிருந்தாலும், இந்தியாவில் 0.5 சதவீதப் புத்தகங்களே இவர்களுக்காகத் தயாராகின்றன. புத்தகங்கள் இல்லாவிட்டாலும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இ-புக், இ-ஆடியோ போன்ற வசதிகளையாவது அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை. இந்தியாவில் புத்தகச் சந்தை நடக்கும் டில்லி, மும்பை, கோல்கட்டாவில் இவர்கள் ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் அமைப்புக்கு நாடு முழுவதும் 600 எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
32 பக்கங்கள்தான்: ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 2,000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந் துரை செய்கிறது. ஆனால் நம்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, 32 பக்கங்கள் மட்டுமே படிக்கின்றனர் என, யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
இது புத்தகக் காலம்: ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை புத்தகச் சந்தைகளின் காலமாகக் கருதப்படுகிறது. சென்னை, டில்லி, கோல்கட்டா ஆகிய இந்திய நகரங்களில் புத்தகச் சந்தை முடிந்துவிட்டது. சர்வதேச அளவில் பொலோக்னா, பீனஸ் ஏர்ஸ், கெய்ரோ, ஜெருசலம், லண்டன், பாரீஸ், செயின்ட் பீட்டர் ஸ்பர்க், தாய்பே ஆகிய நகரங்களில் முன்பின்னாக புத்தகச் சந்தைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அவை முடிவடைய இருக்கின்றன. பல இணையதள நூலகங்கள் இணைந்து உலக இணையதளப் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. இதில் 25 லட்சம் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி :
சர்வதேச புத்தக தினம்: இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம். பல ஆண்டுகளாக மார்ச் 5 அன்று உலகப் புத்தக நாள் அந்நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 23 புனித ஜார்ஜ் தினம். அன்று காதலன் காதலிக்கு ரோஜா கொடுத்து, அன்பைப் பரிமாறுவது மேலை நாட்டுப் பழக்கம். 1923ல் ஸ்பெயின் நாட்டில், 'கேடலோனியா' நகர புத்தக விற்பனையாளர்கள் 'மிகையில் டே செர்வாண்டிஸ்' என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதி புத்தக தினமாகப் பரிந்துரைத்தனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் என்பதற்காக ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினமாக 1995ல் யுனெஸ்கோ அறிவித்தது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||