நோபல் வென்ற எளிமை மனிதர்
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
இந்த ஆண்டின் பத்ம விருது பெற்றவர்களில் மிக உயர்ந்த சிறப்புடையவராக நோபல் பரிசை வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் திகழ்ந்தபோதும், ஜனாதிபதி மாளிகையில் கடந்த புதன் கிழமை மாலை நடந்த விழாவில் அவர் எளிமையாக காட்சியளித்தார்.
நீண்ட பிங் கலர் குர்தாவும், கரிய நிற கீழங்கியும் அணிந்த 58 வயதான அவரை, அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வெங்கி என்று அன்பாக அழைப்பதுண்டு.அசோகா மண்டபத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் நாட்டின் இரண்டாவது உயரிய பத்மவிபூஷண் விருதை அவர் பெற்றபோது, கைத்தட்டல்கள் விண்ணை எட்டின.
அங்கிருந்து நேராக டில்லி தமிழ்ச் சங்கம் ராமகிருஷ்ணாபுரத்தில் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்ற அவர், தமிழகத்திலிருந்து பத்ம விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், புலனாய்வுக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுடன் கவுரவிக்கப்பட்டார். அன்று காலை விழாவில் அவர் கலந்து கொள்வதை உறுதி செய்ய அழைத்த டில்லி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரிடம், எனது குடும்பத்தினர் மூன்று பேரை விழாவுக்கு அழைத்து வரலாமா என கேட்டிருக்கிறார். அதற்கு, தாராளமாக என பதிலளித்திருக்கிறார் திகைத்துப் போன அந்த உறுப்பினர். டில்லியில் அவர் கால்பதித்த சில மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் இவை.
அடுத்த நாள், தாஜ்மகால் ஓட்டலில் தன்னை சந்திக்க வந்த நிருபரிடம், தனது ஆடையை தைக்க வரும் தையல்காரருக்காக அமர்ந்திருப்பதாகவும், அவர் வந்து போன பிறகு பேட்டியை வைத்துக் கொள்ளலாமா என்று பவ்யமாக கேட்டார்.டில்லி தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டபோது அந்த நிருபரிடம் பேட்டியளிக்க ஒப்புக்கொண்டிருந்தார். நிறைய பேர் அவரை ஓட்டல் லாபியில் அங்கு இனம் கண்டுகொள்ளவில்லை. தையல்காரர் வர காலதாமதமாக பேட்டி துவங்கியது.வெளிச்சத்தில் இருப்பதை ரசிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, எல்லாம் விரைவில் மறைந்து போகும்; விஞ்ஞானிகள் வெளிச்ச மழையில் நனைவதை விட, ஆய்வகத்தில் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள் என்றார்.
டில்லி சங்க விழாவில் கூட, காலதாமதமாக வந்த இசைப்புயல் ரஹ்மானை பார்த்த மாத்திரத்தில் கூட்டத்தினர் விசில் அடித்தனர்.தனக்கு, தமிழ்ச் சங்க விழாவில் பாராட்டு பெறுவது மகிழ்ச்சிதான். இருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தேன் என்பதை அறிந்து கொள்வதையே தனது மகனும், மருமகளும் விரும்புவார்கள் என்றார்.
தாய்மொழி தமிழில் கொஞ்சமாய் ஆரம்பித்து பின்னர் ஆங்கிலத்திற்கு மாறிய அவர் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது.தனக்கு மூன்று வயதிருக்கும்போதே தமிழகத்தை விட்டு பரோடா சென்று கல்வி பயிலவேண்டிய சூழல்; அதனால், தமிழிலும், குஜராத்திலும் பேச நேரமின்றி போனதாக சொன்னார். பேட்டியின் நடுவே வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு அவர் இந்தியில் சரளமாக பதிலளித்தது அவரது இந்தி மொழி ஆளுமை புரிந்தது.
கர்நாடக மற்றும் மேற்கத்திய இசையோடு கொஞ்சமாக இந்துஸ்தானியும் அவருக்கு பிடிக்கிறது. விளையாட்டு: 'பிரிட்டனில் கிரிக்கெட் விளையாட்டை தொலைக்காட்சியில் ரசிக்க, கட்டணம் செலுத்த வேண்டும். பெரிய அளவில் நடக்கும் கிரிக்கெட் அல்லது டென்னிஸ் விளையாட்டை பார்க்க நீண்ட தொலைவு செல்ல வேண்டும். எனக்கு சொந்தமாக கார் இல்லை; மனைவியோடு டிரக்கில் செல்வதும், கேம்பிரிட்ஜ் வளாகத்தில் சைக்கிள் ஓட்டுவதும் பிடித்தமானவை' என்கிறார்.நோபல் பரிசு அவருடைய மற்றும் அவரது மனைவியின் வாழ்க்கையை மாற்றவில்லை.
வெங்கியின் மனைவி வெரா ரோசன்பெர்ரி, ஒஹையோவில் வசிக்கும் அமெரிக்கர் என்பதோடு குழந்தைகளுக்கான 30 புத்தகங்களின் ஆசிரியர்.அவரது வளர்ப்பு மகள் டானியா கப்கா ஆரிகானில் மருத்துவராகவும், மகன் ராமன் ராமகிருஷ்ணன் நியூயார்க்கில் வயலின் போன்ற செல்லோ என்ற இசைக்கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர்.அமெரிக்க குடிமகனான ராமகிருஷ்ணன், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் எம்.ஆர்.சி., மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் மூத்த விஞ்ஞானி.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||