மண்எண்ணை விளக்கு வெளிச்சத்தில்
படித்தேன்
பிரதமர் மன்மோகன்சிங் உருக்கம்
படித்தேன்
பிரதமர் மன்மோகன்சிங் உருக்கம்
அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஆண், பெண் என்ற வேறுபாடியின்றி கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்காதபடி பார்த்துக் கொள்வோம். மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் இந்த சட்டம் நிறை வேற்றப்படும்.
கல்வி அறிவை அனைவரும் பெற வேண்டும். கல்விக்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். நீண்ட தொலைவுக்கு நடந்து சென்று நான் படித்தேன்.
நான் படித்த காலத்தில் எங்கள் வீட்டில் மின் விளக்கு வசதி கிடையாது. மண்எண்ணை விளக்கு வெளிச்சத்தில் தான் படித்தேன். நான் இன்று இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு கல்வி தான் காரணம்.
எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் நல்ல கல்வியறிவு பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நல்ல எதிர் கால வாழ்வுக்காக இந்தியர்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும், அந்த கனவோடு வாழ வேண்டும்.
எல்லோரும் அடிப்படை கல்வியை கண்டிப்பாக பெற வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு கோபாலகிருஷ்ணகோகலே ஆசைப்பட்டார். அவரது ஆசை இன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் அனைவரும் உரிய முறையில் கட்டாயமாக கல்வியறிவு பெற்றால் எதிர்கால இந்தியா வலிமையாகவும், செழுமை நிறைந்ததாகவும் இருக்கும். இந்த லட்சியத்தை எட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
கட்டாய, இலவச கல்வித் திட்டம் வெற்றி பெற ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் ஆசிரியர்கள் கொடுக்கும் உற்சாகம், திறமை காரணமாகத் தான் ஒவ்வொருவரும் வெற்றியாளராக முடிகிறது. எனவே ஆசிரியர்கள், இந்த கல்வி உரிமைச் சட்டத்தில் தங்களையும் ஒரு பங்குதாரர் போல இணைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கும் கல்வியில் மிக முக்கியமானது. அவர்கள் இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த சட்ட அமலில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும், நமது நாட்டின் வளர்ச்சி கல்வி மேம்பாட்டில் தான் உள்ளது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||