''காடுகள் அழிந்து நகர்மயமாவதால், இனி வனத்தை அதிகப்படுத்த முடியாது. இருக்கும் வனத்தை பாதுகாக்க வேண்டும்,'' என, தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பேசினார்.தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம் பகுதியில் யானைகளால் பயிர் சேதம் மற்றும் உயிர் சேதமடைந்த குடும்பத்தினருக்கு தமிழக வனத்துறை சார்பில் நிவாரண உதவி வழங்கும் விழா, ஓசூர் அடுத்த தின்னூரில் நடந்தது.
வனத்துறை அமைச்சர் செல்வராஜ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கி பேசியதாவது:மனித வாழ்வில் வனம் மற்றும் வனம் சார்ந்த காடுகள் முக்கியமானது. எதிர்கால சந்ததியினருக்கு வனங்கள் ஒரு பாதுகாப்பு அரணாகவும், இயற்கை ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்தியாவில் 25.17 சதவீதம் வனப்பகுதி உள்ளன.தமிழகத்தில் 17.5 சதவீதம் வனப்பகுதி உள்ளன. தற்போது காடுகள் அழிந்து வருகின்றன. மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்து விட்டது.காடுகள் அழிக்கப்பட்டு விரைவாக நகர்மயமாகி வருகிறது. இதனால், இனி வனத்தை அதிகப்படுத்த முடியாது. மிஞ்சியிருக்கும் வனப்பகுதிகளை பாதுகாக்கவும், மரம், செடிகள் வளர்த்து அடர்த்தியாக்கவும் தமிழக அரசு காடு வளர்ப்பு திட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனியார் காடுகளில் மரம் வளர்ப்பு திட்டம் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு யூக்கலிப்டஸ் , சவுக்கு, வேப்பமரம், தேக்கு உள்ளிட்ட 80 லட்சம் முதல் ஒரு கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.மரங்கள் வளர்ந்து பெரியமரமாகி வருமானம் கிடைக்கும் வரை, தனியாருக்கு அரசு மானிய நிதியுதவியும் வழங்குகிறது. இது போல பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் கருணாநிதி நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்.தமிழக வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன. யானைகள் குடிநீர், உணவுக்காக வனப்பகுதியை விட்டுவெளியேறி வருகின்றன. அவைகள் வனத்தை விட்டு வராமல் இருக்க, அவற்றுக்கு தேவையான குடிநீர், உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் ஆதாரம் இல்லாத வனப்பகுதியில் அகழிகள், கசிவு நீர் குட்டை, தடுப்பு அணைகள் மற்றும் சூரிய மின்வேலிகள் அமைக்கப்படும்.மலை கிராமங்களில் 1980ம் ஆண்டு வனச்சட்டத்துக்குட்பட்டு சாலை வசதி அமைத்து கொடுக்கப்படும். வனத்துறையினர் நினைத்தால் மட்டும் யானைகளை கட்டுப்படுத்த முடியாது; மலைகிராம மக்களும், யானைகள் விரும்பு உண்ணும் உணவுகளை தவிர்த்து பிற பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு செல்வராஜ் பேசினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||