பொது கழிப்பிடங்களில் சிறுநீரை சேகரித்து அதிலிருந்து உரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை டில்லியில் உள்ள ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் சிறுநீரை குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். சிறுநீர் சில நோய்களை குணப்படுத்துவதாக 'நேச்ரோபதி' டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், துர்நாற்றம் வீசும் சிறுநீரை மருந்தாக பயன்படுத்த யாரும் முன்வருவதில்லை. இதனால், சிறுநீர் கழிவு பொருளாக, சாக்கடையில் கலந்து வருகிறது.சிறுநீரில் பாஸ்பேட், நைட்ரேட் போன்ற உரம் தயாரிப்பதற்குரிய பொருட்கள் நிரம்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.ஜெர்மனி நாடு சிறுநீரை சேகரித்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதுகுறித்து, டில்லி ஐ.ஐ.டி.,யின் கிராம மேம்பாட்டு தொழில் நுட்பத்துறை பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது:சிறுநீரில் வீணான பொருட்கள் ஏதும் இல்லை. பயனுள்ள உப்புகள் இதில் அடங்கியுள்ளன. டில்லி புறநகரில் உள்ள அறக்கட்டளை ஒன்று இரண்டு பள்ளிக் கூடங்களின் கழிப்பறைகளில் சேரும் சிறுநீரை பூமிக்கடியில் கட்டப்பட்ட தொட்டியில் சேகரித்து அருகே உள்ள கிராமத்திற்கு பைப் மூலம் சப்ளை செய்து வருகிறது. சிறுநீரில் தண்ணீர் சேரும் போது தான் துர்நாற்றம் வீசுகிறது. சிறுநீரிலிருந்து தண்ணீரை பிரித்துவிட்டால் நறுமணமற்ற திரவமாக சிறுநீர் மாறி விடும். இந்த தொழில்நுட்பத்தை கண்டு பிடித்துள்ளோம்.டில்லி மாநகராட்சி, இந்த தொழில் நுட் பத்தை இரண்டு பூங்காக்களில் உள்ள கழிப்பறைகளில் செயல்படுத்தி வருகிறது. டில்லியில் நடைபெற உள்ள காமன் வெல்த் போட்டியையொட்டி துர்நாற்றம் வீசாத ஆயிரம் சிறுநீர் கழிப்பிடங்களை தலா மூன்று லட்ச ரூபாயில் கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.டில்லியில் உள்ள ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள பொது சிறுநீர் கழிப்பிடத்தில் சிறுநீரை சேகரித்து ஐந்து ஏக்கர் பரப்பளவில் பயிர்களுக்கு சப்ளை செய்து வருகிறோம்.எங்களது அடுத்த கட்ட திட்டம், சிறுநீரிலிருந்து பாஸ்பேட், நைட்ரேட்டை சிறு உலை அமைத்து பிரிக்க திட்டமிட்டுள்ளோம். பெண்கள் சிறுநீர் கழிப்பிடங்களிலிருந்தும் சிறுநீரை சேமிக்க முடிவு செய்துள்ளோம். சிறுநீரிலிருந்து பிரிக்கப்படும் பாஸ்பேட் மற்றும் நைட்ரேட், உரம் தயாரிக்க உதவும். வர்த்தக ரீதியாக இது நல்ல பலனை அளிக்கும். சிறுநீர் தொடர்பான இந்த இரண்டு திட்டங்களுக்கும் காப்புரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளோம்.இவ்வாறு விஜயராகவன் கூறினார்.
தமிழகத்தில் திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையத்திலும், பெங்களூரில் உள்ள விவசாய அறிவியல் மையத்திலும் இந்த முறையில் பயிர் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||