கிராமத்து பள்ளியில் வசப்பட்ட
ஆங்கிலம் : 'நுனி நாக்கில்'
அசத்தும் மாணவர்கள்
காளையார்கோவில் : ஆங்கிலம் என்றால் 'ஆளை விட்டால் போதும்' என மாணவர்கள் எண்ணும் நிலையில், சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர். மரக்காத்தூர் அரசு பள்ளியில் மாணவர்கள் கட்டுப்பாடாக உள்ளனர். சீருடை அணிய தவறுவதில்லை. அனைத்து மாணவர்களும் சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, சேமித்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் விட, ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆங்கிலத்தில் பேசி அசத்துவது தான் முத்தாய்ப்பு. காலை 8.30 முதல் 9.15 மணி வரை, ஆங்கிலத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் சொந்தமாக, ஐந்து வரிகளை எழுத வேண்டும். வாசிப்பு, இலக்கண பயிற்சி என, இவர்களது ஆங்கில வேள்வி, நாள்தோறும் நடக்கிறது.அவ்வப்போது பட்டிமன்றம், நாடகம், பேச்சு போட்டிகளும் உண்டு. பள்ளி வளாகம், வெளியிடங்களில் மாணவர்கள் சந்தித்தால், ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர்.
எட்டாம் வகுப்பு மாணவி திவ்யா கூறுகையில், ''ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்க கடினமாக இருந்தது. ஆசிரியரின் அரவணைப்பு, ஊக்கத்தால், ஆங்கிலம் எங்களுக்கு வசப்பட்டது,'' என்றார்.
ஆங்கில ஆசிரியர் இ.பெஞ்சமின் கூறியதாவது:அன்றாட வாழ்கையில் பயன்படுத்தும் வார்த்தைகள், சின்ன வாக்கியங்களை, மாணவர்களுக்கு அறிமுகம் செய்தேன்.மூன்று ஆண்டு கடின உழைப்பிற்கு, தற்போது பலன் கிடைத்துள்ளது. மாணவர்கள் தினமும் சொந்தமாக எழுதும் வாக்கியங்களை, அடையாள அட்டை போல கழுத்தில் தொங்கவிட அறிவுறுத்துவேன். அதை மற்ற மாணவர்கள் படிக்கும் போது, ஆங்கிலம் அன்னிய மொழி என்ற எண்ணம் மறைந்துவிடும். ஆங்கிலத்தில் பேச பயப்பட கூடாது. தவறாக பேசுகிறோம் என்ற கூச்சமும் கூடாது. எனது மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்கும் போது, 'மகனை சான்றோன் என கேட்ட தாய்' போன்ற மனநிறைவு ஏற்படுகிறது. சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், இந்தமுயற்சிக்கு வெற்றி கிட்டியது,'' என்றார்.
hello sir ur blog spot address is not easy to type browser so pleas simplify ur blog address
ReplyDelete