'கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி' சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, ஆறிலிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு 'கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி' சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும், ஆறு வயதிலிருந்து 14 வயது வரை 22 கோடி குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் 92 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை அல்லது பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டிருக்கின்றனர்.இந்நிலையில், ஆறிலிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அடிப்படை உரிமையாக கல்வி அமையும் என்று வலியுறுத்துகிறது. இச்சட்டம், இவர்களுக்கு கல்வி கிடைப்பதையும், மாநில அரசு இவர்களுக்கு கல்வி வழங்குவதையும் உறுதி செய்கிறது.கடந்த 2002ல் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 86வது திருத்தத்தின் படி, கல்வி அடிப்படை உரிமை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின், 2009ல் இச்சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள பல்வேறு பிரச்னைகளையும் கலந்து ஆலோசித்த பின், மத்திய அரசும், மாநில அரசுகளும் 55:45 என்ற வீதத்தில் இதற்காகும் செலவை ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்தபின், மாநில அரசுகள் இச்சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.
தனியார் கல்வி நிறுவனங்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்க இச்சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை நிறைவேற்ற, 25 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு நிதிக் கமிஷன் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் இச்சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமானால், ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக அரசின் திட்ட மதிப்பீடு கூறுகிறது.இச்சட்டத்தை எதிர்த்து சில பள்ளிகள், 'இது அரசு நிதியுதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்' என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனால், இச்சட்ட அமலாக்கத்தில் எவ்வித தொய்வும் ஏற்படாது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||