பயோ டெக்னாலஜி தேர்ந்தெடுத்தால் படிக்கும் போதே சம்பாதிக்கலாம்: பரணி
''கடுமையான உழைப்பும், நம்மால் எது முடியும், எந்த துறையில் ஆர்வமுள்ளது என்று தேர்ந்தெடுத்து படித்தால், அது வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும்,'' என எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக, 'பயோ டெக்னாலஜி' துறையின் தலைவர் பரணி பேசினார்.
சென்னையில் நடந்த, 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், பயோ டெக்னாலஜி துறையில் பயில்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்து பரணி பேசியதாவது: பயோ டெக்னாலஜி படித்தால், குளிர் பிரதேசங்களில் வாழும் பிராணிகளின் செயல்பாடு, தாவரங்களின் ஜீவன வளர்ச்சி, மக்கும் பொருட்களிலிருந்து பெட்ரோல் தயாரிப்பது, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, உணவுப் பொருட்கள் ஆராய்ச்சி, உயிரினங்களின் பரிணாமம் குறித்த ஆராய்ச்சி, மரபணு மாற்றங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பாடங்களை படிக்க முடியும்.
இன்று பயோ டெக்னாலஜி துறை முன்னேறியுள்ளது. நாம் கொடுத்து வைத்தவர்கள். ஒருவருடைய தலைமுடியை வைத்து அவர் யார், எப்படிப்பட்டவர், நடை, உடை, பாவனை என அனைத்தையும் பயோ டெக்னாலஜி படித்து தெரிந்து கொள்ள முடியும். பயோ டெக்னாலஜியை பயன்படுத்தி உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.
'ஸ்டெம் செல் தெரபி' முறையை பயன்படுத்தி, புதிய உறுப்புகளை உருவாக்க முடியும். 'ஜீன் தெரபி'யை பயன்படுத்தி, நோய் தாக்காமல் இருக்குமாறு செய்யலாம். பயோ டெக்னாலஜி முடித்தவர்கள், படித்துக் கொண்டே சம்பாதிக்கும் வகையில் நிறைய படிப்பு பிரிவுகள் உள்ளன.
இந்தப் படிப்பை முடித்தவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பயோ முதலீடு உள்ள நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் ஆராய்ச்சி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றலாம். கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக எம்.டெக்., முடித்திருக்க வேண்டும். இவ்வாறு பரணி பேசினார்.
''பிளஸ் 2விற்கு பிறகு எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது
''பிளஸ் 2விற்கு பிறகு எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, மாணவர்களும் பெற்றோரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும்,'' என ரமேஷ் பிரபா தெரிவித்தார்.
'தினமலர்' நாளிதழ், புதிய தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து வழங்கும், 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், '60 சதவீதம் முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களுக்கு வழிகாட்டுதலை' வழங்கி ரமேஷ் பிரபா பேசியதாவது: தற்போது உங்களுக்கு முன் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை முன்கூட்டியே அறிய வாய்ப்புள்ளது. முன்பு இந்த வாய்ப்புகள் இல்லை. இளைய தலைமுறையினரை தூக்கி நிறுத்தினால் தான், இந்தியா முன்னேற்றமடையும் என்ற எண்ணத்தில், 'தினமலர்' நாளிதழ், தேர்வுக்கு முன் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியையும், தேர்வுக்குப் பின், 'வழிகாட்டி' நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது.
பிளஸ் 2விற்கு பிறகு எந்தப் படிப்பை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, மாணவர்களும் பெற்றோரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். பெற்றோர் தங்களது விருப்பத்தை பிள்ளைகளிடம் திணிக்கக்கூடாது. நண்பர்கள் ஒரு பாடப்பிரிவை எடுக்கின்றனர் என்பதற்காக, நாமும் குறிப்பிட்ட பாடப்பிரிவை எடுக்கக்கூடாது. உயர்கல்வியில் உள்ள எல்லா வாய்ப்புகள் பற்றியும் தெரிந்து கொண்டு, பிடித்த பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். படிப்பு தவிர, இதர திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஓவியம், இசைத் துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. மருத்துவத்தில் இந்திய மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், பார்மசி, பிசியோதெரபி, கண் மருத்துவம் என பல பிரிவுகள் உள்ளன. நர்ஸ் படிப்பு பெண்களுக்கு மட்டுமானது அல்ல; ஆண்களும் இப்படிப்பில் சேரலாம். கவனச் சிதறல்கள் வரும்போது, குடும்பத்தை நினைத்துக் கொண்டால், திசை திரும்ப மாட்டோம். தனியாக இருப்பதை தவிர்த்து, நல்ல நண்பர்களுடன் பழக வேண்டும். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.
ஐ.டி.,யை விட சிவில் சர்வீஸ் பணியில் அதிக சம்பளம்: மாணவர்களுக்கு கூடுதல் கமிஷனர் ரவி 'அட்வைஸ்'
''சிவில் சர்வீஸ் தேர்வெழுதி, அப்பணியில் சேர்ந்தால் ஐ.டி., துறையை விட அதிக சம்பளம் பெற முடிவதுடன், பொதுமக்களுக்கும் சேவை செய்ய முடியும்,'' என சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி தெரிவித்தார்.
'தினமலர்' நாளிதழ், புதிய தலைமுறை மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் இணைந்து வழங்கும், 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், 'எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிகள்' குறித்து சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் பேசியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வெழுத ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதும். தொலைதூரக் கல்வி மூலமாகக் கூட பட்டம் பெற்றிருக்கலாம். இத்தேர்வு மூலம் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., என பல துறைகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எம்.எஸ்சி., அக்ரி முடித்த நான், ஐந்தாண்டுகள் சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்தேன். டில்லியில் பணிபுரிந்த போது, இத்தேர்வு குறித்து தெரிய வந்ததால், பணிபுரிந்து கொண்டே இத்தேர்வுக்காக படித்தேன். அப்போது, இத்தேர்வு குறித்து வழிகாட்ட யாரும் இல்லை. இத்தகைய, 'வழிகாட்டி' நிகழ்ச்சிகள் இருந்திருந்தால், படித்து முடித்ததுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியிருப்பேன்.
கடந்த 1992ம் ஆண்டு தேர்வு எழுதி, 12 ஆண்டுகளாக போலீசில் பணிபுரிந்து வருகிறேன். கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உத்திகள். சிவில் சர்வீஸ் தேர்வை எழுதிப் பார்த்தால் தான், அது எவ்வளவு எளிமையான தேர்வு என்பது தெரியும். எல்லா துறையினரும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுத வேண்டும். டாக்டர், இன்ஜினியர், சி.ஏ., முடித்தவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுகின்றனர். தொழில்நுட்ப அறிவு படைத்தவர்கள், சிவில் சர்வீஸ் பணிக்கு தேவைப்படுகின்றனர். சைபர் கிரைம் குற்றங்களை கண்டுபிடிக்க, தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவை.
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக ஐ.டி., துறையை விட, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஆகிய சிவில் சர்வீஸ் பணிகளில் சம்பளம் அதிகம். மேலும், இத்துறையில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புகள் அதிகம். மனிதனாக பிறந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; மற்றவர்களுக்கு உதவ வேண்டும். இந்த இரண்டும் சிவில் சர்வீஸ் பணியில் முடியும். சினிமா, 'டிவி'யில் காட்டப்படுவதை வைத்து, போலீசாரை தவறாக நினைக்கின்றனர்; அது தவறு. போலீசார் எவ்வளவு சிரமப்படுகின்றனர்; சமுதாயத்திற்காக பாடுபடுகின்றனர் என்பது தெரிவதில்லை. எந்த விஷயத்திலும் யோசனை செய்து செயல்பட்டால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நம் நாட்டிலேயே சிறந்தது, சிவில் சர்வீஸ் துறை தான். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் அதிகாரிகள் தான் நாட்டையே நடத்துகின்றனர். மாணவர்கள் இத்தேர்வு எழுத, தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சி விழிப்புணர்வு தரும். சிவில் சர்வீஸ் தேர்வை தமிழிலும் எழுதலாம். வாழ்க்கையில் வெற்றி பெறுவது உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு ரவி பேசினார்.
மாணவிக்கு பாராட்டு: 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், மாணவர்களிடையே பேசிய சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி, ''கறிக்கடைக்கு செல்லும் ஒருவன், கடைக்காரருக்கு தெரியாமல் 50 ரூபாய் பணத்தை எடுத்து விடுகிறான். கடைக்காரரிடம் ஒரு கிலோ கறி எவ்வளவு எனக் கேட்ட போது, கடைக்காரர் 32 ரூபாய் என்கிறார். உடனே ஒரு கிலோ கறி வாங்கி, 50 ரூபாய் கொடுக்கிறான். கடைக்காரர் ஒரு கிலோ கறியையும், மீதிப் பணம் 18 ரூபாயையும் திருப்பிக் கொடுக்கிறார். சிறிது தூரம் சென்ற நபர், பணத்தை திருடியது தவறு என நினைக்கிறான். பணத்தை திருப்பித் தர கடைக்கு வந்தான் அவன்,'' என்று கூறிய ரவி, 'எவ்வளவு பணத்தை அவன் திருப்பித் தர வேண்டும்' என்று மாணவர்களை பார்த்து கேட்டார். அப்போது பல மாணவர்கள், 100, 82, 68 என பல பதில்களை தெரிவித்தனர். ஜானகிபிரியா என்ற மாணவி, 50 ரூபாய் என்றார். சரியான பதிலைக் கூறிய அம்மாணவிக்கு, போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவி பணப்பரிசு வழங்கி, 'சிவில் சர்வீஸ் தேர்வில், நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்' எனப் பாராட்டினார்.
வங்கி, காப்பீட்டுத் துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்பு: ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் முதல்வர் தகவல்
வல்லரசாக வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை மெய்பிக்க, அனைத்து துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்,'' என ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் முதல்வர் சீனிவாசன் கூறினார்.
சென்னையில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் சீனிவாசன் பேசியதாவது: மாணவர்கள் எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். மாணவர்கள் வேலைவாய்ப்பை எளிதாகப் பெறும் படிப்புகளில் கவனம் செலுத்துவது அவசியம். பன்னாட்டு வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் நம் நாட்டில் கிளைகளை திறந்து வருகின்றன. வரும் 2011-12ம் வருடத்தில் மட்டும், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. பிளஸ் 2 படிப்பில் பொருளாதாரம், கணக்கு பதிவியல் துறை பிரிவுகளைப் படித்தவர்கள், பி.காம்., படிப்பில், 'வங்கி மற்றும் காப்பீட்டு' பிரிவைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
இந்தத் துறைகளில் மேலும் சிறப்பாகச் செயலாற்ற, ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் மற்றும் மற்றவர்களிடம் சமமாக பேசும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் துறையானாலும் தொழில் நுட்ப அறிவு பெற்றிருந்தால், எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்றைய 'இன்டர்நெட்' யுகத்தில் கம்ப்யூட்டர் படிப்பை பயிற்றுவிக்கும் ஆசிரியரை விட, கற்கும் மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். இவ்வாறு சீனிவாசன் பேசினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||