மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் கருக்கலைப்பு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனாலும், கருத்தடை வசதிகள் ஆயிரம் இருக்கும்போது, கருக்கலைப்பு அவசியம் தானா என்ற கேள்வி எழுகிறது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஆண்டுக்கு 1.10 கோடி பெண்கள் கருக்கலைப்பு செய்வதாக சொல்கிறது தேசிய புள்ளிவிவரம். அப்படியென்றால், ஆண்டுக்கு ஏறக்குறைய ஒரு கோடி பிறப்புகள் தடுக்கப்படுகின்றன. மக்கள் தொகை பிரச்னைக்கு இது ஆறுதலாக அமையலாம்.
அதேநேரத்தில் முறையற்ற கருக்கலைப்புகளால் ஆண்டுக்கு 20 ஆயிரம் பெண்கள் பலியாகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியை தருகிறது. இதுவே உலக அளவில் பார்த்தால் ஆண்டுக்கு 68 ஆயிரம் பெண்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். பெரும்பங்கு பலியாவது இந்தியப் பெண்கள். இதெப்படி ஆறுதலாக அமைய முடியும்? இந்த பிரச்னைக்கு ‘வரும் முன் தடுப்பது’ என்ற முறையே நிரந்தர ஆறுதலாக அமைய முடியும் என்பதே உலக நாடுகள் கூறும் கருத்து.
உலக நாடுகளில் காணப்படும் பிரச்னைகளில் ஒன்று பாதுகாப்பற்ற உறவுகள். அதனால் ஏற்படும் கருவை கலைக்க பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளே அதிகளவில் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் இந்தியா உள்ளிட்ட 35 வளரும் நாடுகளில் அதிகம். இதற்கு பெண்களின் கல்வியறிவின்மை, விழிப்புணர்வு இல்லாமையே காரணம்.
உலகெங்கும் சுமார் 5 கோடி பெண்கள், சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காமல் கருத்தரிக்கின்றனர். கூடவே இரண்டரை கோடி பெண்கள், கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர். இது உலக சுகாதார நிறுவனம் சொல்லும் கணக்கு. இது, கருத்தடை சாதனங்களின் தரம் பற்றிய சந்தேத்தை கிளப்புகிறது.
கருக்கலைப்பு என்பது ஒருவரின் தப்பை மறைக்கும் கருவி மட்டுமல்ல. தாயின் உடல்நலத்தை கெடுக்கும் செயல். கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 35% பேருக்கு மறுபடியும் கருத்தரிக்க முடியாமல் போய் விடுகிறது. 30% பெண்கள் மன நோய்க்கு ஆளாகின்றனர். இந்த கணக்கை எல்லாம் கவனத்தில் கொண்டு, கருக்கலைப்பு என்ற கொடுமைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் நல்லது.
அலைய வைக்கும் மருததுவமனைகள!
இது பெங்களூரில் நடந்த சம்பவம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவர் தட்சிணாமூர்த்திக்கு ஒரு பெண் குழந்தை. மனைவி இரண்டாவதாக கர்ப்பமானார். இரட்டைக் குழந்தை என்ற தகவலை சொன்ன அந்த பெண் டாக்டர், ‘ஏற்கனவே சிசேரியன் என்பதால், ஒன்பதாவது மாதம் முடிந்ததும் ஆபரேஷன் செய்துவிடலாம் என்றார். ஒன்பதாவது மாதம் முடிந்த முதல் வாரம் டாக்டரிடம் சென்றனர். அடுத்த வாரம், என்றுச் சொல்லியே மூன்று வாரங்களை தள்ளி விட்டார் டாக்டர். நான்காவது வாரம் போனதும், பணத்தை கட்டச் சொன்னார்கள். காலையில் அட்மிட் ஆன தட்சிணாமூர்த்தி மனைவிக்கு மீண்டும் மாலையில் ஸ்கேன் செய்தனர். சாவகாசமாக எல்லாரையும் கூப்பிட்டு, வயிற்றில் ஒரு குழந்தை இறந்து விட்டது. நீங்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று கைவிரித்து விட்டார் அந்த பெண் டாக்டர். விஷயத்தை மனைவியிடம் சொல்லாமல், அதே பகுதியில் உள்ள நர்சிங்ஹோம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். பலனில்லை. இப்படியே சில மருத்துவமனைகள் அலைந்து முடித்து இரவு 8 மணிக்கு கே.ஆர்.சர்க்கிளில் இருக்கும் மருத்துவமனைக்கு போனார்கள். ஒரு வாரத்திற்கு முன்பே ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்திருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. தேவையில்லாமல் தாமதப்படுத்தி விட்டனர். பரவாயில்லை. பணம் கட்டுங்கள் பார்த்துக் கொள்ளலாம்Õ என்று சொல்லியுள்ளனர். அங்கு ஆபரேஷன் செய்து இறந்திருந்த ஆண் குழந்தையையும், உயிரோடு இருந்த பெண் குழந்தையையும் எடுத்தனர். தாயும் நலம்.
கலைக்கப் போராடிய பெண்கள்
சென்னையை சேர்ந்தவர் ரேகா. 28 வயது பெண்ணான இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ரத்தப் பரிசோதனை செய்தபோது, எச்ஐவியால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. கருவுக்கும் எச்ஐவி தொற்று இருந்தது. எனவே கருவை கலைக்க முடிவு செய்தனர். தனியார் டாக்டர்கள் மறுத்து விட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற ரேகா, தனது நிலையை தெரிவித்தார். கலைக்க சட்டத்தில் இடம் உள்ளது எனக்கூறி, கருக்கலைப்பு செய்தனர்.
இதேபோன்று கருவில் உள்ள குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதை அறிந்து கருவை கலைக்கச் சென்றார் மும்பையை சேர்ந்த நிகேதா மேத்தா என்ற பெண்மணி. 6 மாதமாகி விட்டதால் கலைக்க மறுத்து விட்டனர். உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதய நோயாளியாக குழந்தை பிறப்பதை விட கருவிலேயே அழிப்பதே மேல் என்று வாதிட்டார். சட்டத்தை மாற்ற முடியாது என்று அதை ஏற்க மறுத்து விட்டது கோர்ட். கடைசியில் அந்த பெண்ணுக்கு இயற்கையாகவே அபார்ஷன் ஆகி விட்டதாக செய்தி வெளியானது.
சட்டமும் கருக்கலைப்புகளும்
கருக்கலைப்பு செய்வது 1971ம் ஆண்டு வரை குற்றம். பெருகும் ஜனத்தொகை, தவறான ஆட்களிடம் போய் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இதே ஆண்டில் மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டம்(எம்டிபி ஆக்ட்) அறிமுகமானது. இது 1972 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்யத் துவங்கினர். அதற்கு பிறகே கருக்கலைப்பு குறித்த பதிவுகளும், புள்ளிவிவரங்களும் கிடைக்கத் தொடங்கின. முதலில் 1972ம் ஆண்டு 2 கோடியே 3 லட்சம் குழந்தைகள் பிறந்தன. அதே ஆண்டு 24,300 பேர் கருக்கலைப்பு செய்துக் கொண்டனர். இது 2004ல் 2 கோடியே 61 லட்சம் பிறப்புகளாகவும், 6 லட்சத்து 99 ஆயிரத்து 298 கருக்கலைப்புகளாகவும் பதிவாகின. இவற்றில் 83 சதவீத கருக்கலைப்புகள் அரசு மருத்துவனைகளில் நடந்தன. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே முழுமையான புள்ளிவிவரங்களுடன் பதியப்படுகின்றன. அதிலும் 2005லிருந்து இருக்கும் புள்ளிவிவரங்கள் முழுமையானதாக இல்லை.
உலக நாடுகள் பலவற்றில் கருக்கலைப்பு குறித்து புள்ளிவிவரங்கள் இல்லை. சில நாடுகளில் கருக்கலைப்பு செய்வது மத ரீதியிலான குற்றம். கடுமையான தண்டனை உண்டு. அதனால் கருக்கலைப்பு செய்யும் நாடுகளின் பட்டியலில் இவை இடம் பெறவில்லை.
இந்தியா போன்ற நாடுகளில் கருவை கலைக்க கிடைத்த அனுமதி வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. பெண் குழுந்தைகளை கருவிலேயே அழிப்பதுதான் அது. கரு உருவானதும் ஸ்கேன் செய்து ஆணா, பெணா என்று கண்டுபிடித்து அழித்தனர். எனவே ஸ்கேன் செய்யும்போது ஆணா, பெண்ணா என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்று புதிய சட்டம் 1994ம் கொண்டு வரப்பட்டது. மீறுபவர்களுக்கு முதல் தடவை என்றால் 3 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம். 2வது தடவை என்றால் 5 ஆணடு சிறை, ரூ.50,000 அபராதம்.
வலியே இல்லாமல் கலைக்க வழி
வலியே இல்லாமல் கருக்கலைப்பு செய்யும் சிகிச்சை வசதிகள் தமிழகத்தில் உள்ளன. 385 ஆரம்ப சுகாதார மையங்களில் இவ்வசதி உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இப்போதுள்ள கருக்கலைப்பு முறையில் அதிக வலியும், ரத்தப் போக்கும் ஏற்படுகிறது. இந்த குறைப்பாட்டை போக்க எம்.வி.ஏ. என்ற நவீன முறை அமல்படுத்தப்படுகிறது. எம்விஏ என்ற சிரிஞ்சு மூலம் கர்ப்பப் பையில் காற்றை செலுத்தி, 10 நிமிடத்தில் கருக்கலைப்பு செய்ய முடியும். சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வழக்கமான வேலைகளை செய்யலாம்.
அக்கரை பச்சை...
ரகசியமாக கருக்கலைப்பு செய்பவர்கள் பெரும்பாலும் உள்ளூரில் செய்வதில்லை. வெளியூரைதான் அதிகம் நாடுகின்றனர். தொலைதூர கிராமங்களையும் விரும்புகின்றனர். காரணம் விஷயம் வெளியில் வரக்கூடாது என்பதுதான். அதைதான் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவரிடம் சொல்வார்கள். அதற்கு ஏற்ப அவர்களும் சேவைக் கட்டணத்தை ஏற்றி விடுவார்கள். ஒரே நாளில் வேலையை முடித்து வீட்டுக்கு அனுப்பும் நிபுணர்களைதான் இவர்கள் விரும்புகின்றனர்.
சட்டம் அமலான பின்னால்...
1972ம் ஆண்டு மருத்துவ முறையிலான கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த கருக்கலைப்புகள் பற்றிய 5 ஆண்டு புள்ளிவிவரம்:
‘தொப்புள் கொடி’ மருத்துவர்கள்
உறவை உயர்த்திச் சொல்ல உதாரணமாக இருப்பது தொப்புள் கொடி. அது அம்மாவின் அன்புக்கு அடையாளம். கருப்பபையில் உருவாகும் குழந்தைக்கு தேவையான உணவான ரத்தம் தாயின் நஞ்சுக்கொடியில் (பிளசன்ட்டா) இருந்து தொப்புள் கொடி வழியாக செல்லும். இது கரு உருவாகும் போதே உருவானாலும் 7 முதல் 8 வாரத்தில் தனித்து தெரியும் அளவிற்கு வளர்ந்திருக்கும். ஆனால் 12 வாரத்திற்கு பிறகே முழு வடிவத்தை பெறும். இதில் தொப்புள் கொடியின் நீளம் 50 செமீ. பிரசவத்திற்கு பிறகு இது வெட்டி எடுக்கப்படும். ஓரிரு சென்டி மீட்டர் நீளம் குழந்தையின் உடலில் விட்டுவிட்டு மற்றதை வெட்டி எடுக்கின்றனர். இந்த தொப்புள்கொடியில் 100 மிலி ரத்தம் இருக்கும். இந்த ரத்தத்தின் மூலம்தான் குழந்தை வளர தேவையான ஊட்டச்சத்து, உணவுச்சத்து கொண்டு செல்லப்படுவதால் இது மற்ற ரத்தத்தை விட மிகவும் சிறப்பானது.
தொப்புள் கொடியில் இருக்கும் ரத்தத்தில் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. இந்த செல்கள், நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்துவதன் மூலம் புதிய செல்கள் உருவாகும். ரத்தக் குழாய்களில் அடைப்பு, ரத்த புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு இந்த சிகிச்சை முறை நல்ல பலனை தரும். அதேபோல் தொப்புள் கொடியின் உட்புற சுவரில் இருக்கும் மியூனோ கேரிமெல் செல்லும் ஸ்டெம் செல்லின் குணத்தை கொண்டது.
எனவே இவை மருத்துவ சிகிச்சைக்காக சேகரிக்கப்படுகிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் இவற்றை விற்க உலகளவில் தடை உள்ளது. ஆனாலும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தொப்புள் கொடிகள் சேகரிக்கப்படுகின்றன. உள்ளூர் ஆராய்ச்சிக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் போக எஞ்சியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தடை இருப்பதால் ஏற்றுமதி மிகவும் ரகசியமாக, வேறு பெயரில் நடக்கிறதாம்.
பிரசவம் நடைபெறும் வரை காத்திருந்து சேகரிப்பதை விட அடிக்கடி கிடைக்கும் கருக்கலைப்பு மூலம் கல்லா கட்ட ஆசைப்படும் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை திநகரில் இருந்து ஆயிரம் விளக்கு, அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, தாம்பரம் என விரிவடைந்து வருகிறது.
உலகளவில்...
தேசிய மருத்துவ முறை கருக்கலைப்பு புள்ளிவிவர சேகரிப்பு கூட்டமைப்பு ஒன்று உள்ளது. அது வெளியிட்டுள்ள தகவல்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 21 கோடி பேர் கர்ப்பமடைகின்றனர். இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 7.1 கோடி பேருக்கு அது தேவையற்ற கர்ப்பமாக இருக்கிறது. அதாவது காலம் கடந்த காலத்தில் கர்ப்பமடைவது, கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமடைவது என்று ஏதாவது ஒரு வகையில் தேவையற்றதாக இருக்கிறது. இதில் 3 முதல் 4 கோடி பேர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். பாதிக்கு மேற்பட்டவர்கள் அதாவது 2 கோடி பேர் வரை பாதுகாப்பாற்ற வகையில் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர். முறையான மருத்துவ வசதிகளை கையாளாமல், பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களில் 90 சதவீதம் பேர், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் ஆண்டுக்கு 80,000 பேர் உலகில் உயிரிழக்கின்றனர், 5 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இந்தியளவில்...
இந்தியாவில் 1.1 கோடி பேர் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர். இவற்றில் 10 முதல் 50 சதவீதம், பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படும் கருக்கலைப்புகள். இதனால் ஆண்டுக்கு 20,000 பெண்கள் உயிரிழக்கின்றனர். ஒரு லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.
Ôகருக்கலைப்பு சட்டப்பூர்வமானது தான் என்பது 82 சதவீத பெண்களுக்கு தெரிவதில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. அதனால்தான் பலர் ரகசியமாக கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர்; அவதிப்படுகின்றனர்.
இப்படி விவரம் தெரியாத பெண்கள் பட்டியலில் ராஜஸ்தான் 84 சதவீதத்துடன் முதல் இடத்திலும், மகாராஷ்டிரா 37 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.
தமிழ்நாட்டில்...
தமிழ்நாட்டில் கருக்கலைப்பு சட்டப்படியானது என்ற தெளிவு 50 சதவீதத்தை எட்டிப்பிடிக்கிறது. அரசு மருத்துவமனைகளை கருக்கலைப்புக்காக நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் சில அரசு மருத்துவமனைகளில் கேட்கப்படும் கேள்விகள் பெண்களை தவறான மருத்துவமனைகளை, முறைகளை நாட வைத்து விடுகிறது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||