கேட்பாரற்று கிடந்த அரசு பாடநூல்கள்: தொடக்கக் கல்வி இணை இயக்குநர் விசாரணை
பண்ருட்டி,ஜூன் 21: பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் அரசுப் பாடநூல்கள் கேட்பாரற்று கிடந்ததையடுத்து மாவட்ட தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) எம்.பழனிச்சாமி திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக அளிக்கும் பாடநூல்கள் பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பாதுகாப்பின்றி 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. இச்செய்தி செய்தித்தாள்களில் வெளியானதும் மாவட்ட தொடக்கக் கல்வி இணை இயக்குநர் எம்.பழனிசாமி பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவகத்துக்கு நேரில் சென்று உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் எம்.பழனிசாமி செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழ்நாடு பாடநூல் நிறுவன மண்டல அலுவலகத்தில் இருந்து நேரிடையாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பாடநூல்கள், அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை கூடவோ அல்லது குறையவோ செய்யும். தலைமையாசிரியர் கூட்டம் போட்டு கூடுதலாக புத்தகங்கள் சென்ற பள்ளிகளை கண்டறிந்து, அந்த புத்தகங்களைப் பெற்று, குறைவாக சென்ற பள்ளிகளுக்கு மாற்றி கொடுத்துள்ளோம்.அதிலும் பற்றாக்குறை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியத்தில் இது போல் மாற்றி கொடுத்துள்ளோம். தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தேவையான விற்பனை பாடநூல் பிரதிகளை விரைவாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குநர் எம்.பழனிசாமி தெரிவித்தார். விசாரணையில் போது மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கடலூர் ஆர்.விஜயா, விழுப்புரம் எம்.தனசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பாடப் புத்தக மேற்பார்வை பொறுப்பு
சென்னை, மார்ச் 23: சமச்சீர் கல்விக்கான இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் எழுத பாட வாரியாக இணை இயக்குநர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநரின் உத்தரவுப்படி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணை:
மார்ச் 1}ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சமச்சீர் கல்வித் திட்டத்தில் புதிய பாடநூல்கள் எழுதும் பணி குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
ஒரு வகுப்புக்கு ஒரு இணை இயக்குநர் என்று நியமனம் செய்வதற்குப் பதிலாக ஒவ்வொரு குறிப்பிட்ட பாடத்துக்கும் (அனைத்து வகுப்புகளுக்கும்) இணை இயக்குநர்களை நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பாட வாரியாக இணை இயக்குநர்கள் நியமனம்: அதன்படி தமிழ் பாடத்துக்கு ராம.பாண்டுரங்கன், எஸ்.ரஞ்சனிதேவி ஆகிய இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலப் பாடத்துக்கு வி.சி.ராமேஸ்வர முருகன், ப.செல்வகுமாரி; கணிதம் பாடத்துக்கு வீ.ராஜராஜேஸ்வரி, சி.உஷாராணி; அறிவியல் பாடத்துக்கு எஸ்.கார்மேகம், முத்து. பழனிச்சாமி; சமூக அறிவியல் பாடத்துக்கு ஆர்.பிச்சை, எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணை இயக்குநர் லதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் தயாரிப்பு பணியைத் தொடர்ந்து மேற்கொள்வார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி ஆசிரியர் குழுக்களை நியமனம் செய்து ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் பாடப் புத்தகம் எழுதும் பணியை உடனே மேற்கொள்ள அறிவுறுத்தலாம்.
பாடங்களை எழுதும் ஆசிரியர்களை தவிர ஆய்வாளர்கள் மற்றும் பாடக்குழு உறுப்பினர்கள் பட்டியலை இறுதி செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பாடப் புத்தகங்கள் எழுதும்போது ஆய்வாளர்கள் மற்றும் தலைவர், பாடங்களை கூர்ந்து ஆய்வு செய்து உரிய திருத்தங்களை அவ்வப்போது மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
பாடப் புத்தக மேற்பார்வை பொறுப்பு வகிக்கும் இணை இயக்குநர்கள் தங்களுக்குத் தேவையான நிதியை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரிடம் பெற்றுக் கொண்டு தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம்.
இத்துடன் பள்ளிக் கல்வி இயக்குநர் } அறிவியல் பாடத்தையும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் } தமிழ் மற்றும் கணிதம் பாடத்தையும், தொடக்கக் கல்வி இயக்குநர் } ஆங்கிலம், சமூக அறிவியல் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கான பாடப் புத்தகம் எழுதும் பணியை மேற்பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊதியக் குழு பலன்கள் குறித்த குறைகேட்பு முகாம்
புதுக்கோட்டை, செப். 19: 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் அனைத்துப் பலன்களும் மாநிலம் முழுதும் உள்ள தொடக்கக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் கிடைக்கச் செய்யும் நோக்கில், குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை ஆர்சி பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில், தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குநர் (நிர்வாகம்) எம். பழனிச்சாமி பங்கேற்று ஆசிரியர்களிடம் மனுக்களைப் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது: "தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பரிந்துரையின்படி, தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதலில் இந்த குறைகேட்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் பணியில் உள்ள நிலையில் 32 மனுக்கள் மட்டுமே வரப்பெற்றுள்ளன. இதிலிருந்து 95 சதம் பேருக்கு பயன்கள் கிடைத்துள்ளது தெளிவாகிறது' என்றார் பழனிச்சாமி. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வி. மீனாம்பாள் மற்றும் 13 ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
21 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மாநில வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 5,577 இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்து, முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பள்ளி கல்வி இணையதளத்தின் மூலம் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வின் மூலம் பணிபுரியும் இடத்தை தேர்வு செய்த 21 இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறைச் செயலர் எம்.குற்றாலிங்கம், தொடக்கக்கல்வி இயக்குநர் டி.தேவராஜ், இணை இயக்குநர் எம். பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5,577 இடைநிலை ஆசிரியர்களில் 3,894 பேர்கள் பெண்கள், 1,683 பேர்கள் ஆண்கள் ஆவார். இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 9.7.2009 முதல் 23 மாவட்ட தலைமையிடங்களில் கலந்தாய்வு நடைபெறும்.
10.7.2009 முதல் 14.7.2009 வரை திருச்சியில் மாநில அளவிலான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள் தேர்வு செய்யும் பணியிடத்திற்கு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். தேர்வு பெற்றுள்ள 5577 இடைநிலை ஆசிரியர்களுக்கும் 15.7.2009 அன்று சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||