பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வில் வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் பாதிப்படைந்த மாணவர்களின் விடைத்தாள்கள், பாதிப்பு இல்லாத வகையில், திருத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
காஞ்சீபுரத்தில் மட்டும்தான் 20 மாணவர்கள் வினாத்தாள்களை மாற்றி கடைசிவரை எழுதி உள்ளனர். மொத்தத்தில் தமிழ்நாட்டில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மீண்டும் தேர்வு நடத்துவது சரியாக இருக்காது. ஆனால் 30 மாணவர்களின் விடைத்தாள்களை தனியாக வைத்து மதிப்பீடு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
எந்த வகையிலும் அந்த மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். கேள்வித்தாள் மாற்றிக்கொடுத்த ஆசிரியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.
இதற்கிடையே, பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் குற்றாலிங்கம் அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியை அழைத்து கேள்வித்தாள் மாற்றம் நடந்தது குறித்து கேட்டறிந்தார். மேலும் கேள்வித்தாள் மாற்றத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளையும், மெட்ரிகுலேஷன் தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் சரிபார்த்து இரண்டிலும் பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன் தமிழ் ஆசிரியர்களை அழைத்து இந்த பிரச்சினைக்கு தேர்வுத்துறை தீர்வு காண உள்ளது.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை...
இந்த நிலையில், வினாத்தாள் மாற்றி வழங்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை பெறப்பட்ட பிறகு தவறுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,முதல்கட்டமாக மெட்ரிக் பள்ளிக்குரிய வினாத்தாள்கள், மாநிலப் பள்ளிக்குரிய வினாத்தாள்கள் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதில் எத்தனை வினாக்கள் பொதுவாக உள்ளது என்பது பற்றி ஆய்வு செய்யப்படும். அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
வினாத்தாள்களை மாற்றி வழங்கியது தொடர்பாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதர பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வருவதால், அத்துறை சார்ந்த அதிகாரிகள்தான் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் சுமார் 30 மாணவர்கள் வினாத்தாள் மாற்றி தேர்வு எழுதியுள்ளனர். இதற்குப் பொறுப்பான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான அறிக்கை பெறப்பட்ட பிறகு தவறுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வினாத்தாள் மாற்றி தேர்வு எழுதிய மாணவர்கள் பயப்படத் தேவையில்லை. ஆய்வுக்குப் பிறகு அவர்களுக்குஉரிய மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||