சென்னை: மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 'ரெகுலர்' பள்ளிகளில் கல்வி அளிப்பது தொடர்பாக, அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மூளை வளர்ச்சி குறைபாடு, பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தற்போது, 'ரெகுலர்' பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி அளிக் கப்பட்டு வருகிறது. சாதாரண மாணவர்களுடன் ஒன்றாக சேர்ந்து படிப்பதன் மூலம், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுடைய அடைவுத் திறன் அதிகரித்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தொடர்ந்து, 'ரெகுலர்' பள்ளிகளில் அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதற்காக, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கும் திட்டம், மாநிலம் முழுவதும் நடந்தது. முதல் கட்டமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு, தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் மூலம், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை அணுகும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக, தலைமை ஆசிரியர் களுக்கும், மூன்றாவது கட்டமாக, டாக்டர்கள் குழு ஒத்துழைப்புடன், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு, மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி, மாவட்ட தலைநகரங்களில் நடந்தன. சென்னையில் பயிற்சி முகாம் நரேஷ் தலைமையில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி நடந்தது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் உட்பட பல அதிகாரிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தைச் சேர்ந்த வசந்தா, 'ஸ்பாஸ்டிக்' அமைப்பைச் சேர்ந்த ஜீவா ஆகியோர், அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர். தமிழகத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்கள் இருப்பர் என்றும், அவர்களில் படிக்கும் வயதில் உள்ள அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களை முறையான பள்ளிகளில் சேர்த்து, கல்வி தருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||