தொழில் வளர்ச்சி என்பது நாட்டின் பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கை தரத்தையும் வெகுவாக உயர்த்துவதாக இருந்தாலும், அதனால், வெளியேற்றப்படும் மாசடைந்த கழிவுநீர், காற்று மற்றும் திடக்கழிவுகள், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை பாதிப்பதாக இருக்கக் கூடாது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், இந்தியா தொழில் வளர்ச்சியில் அடியெடுத்து வைத்த போது, மிகக்குறைவான தொழிற்சாலைகளே இருந்தன. அவைகளால் வெளியேற்றப்பட்ட, திரவ, திட, வாயுக்கழிவுகள், எந்த சுத்திகரிப்புகளும் இல்லாமல் வெளியேற்றப்பட்டாலும், ஆரம்ப காலங்களில் சுற்றுப்புற சூழலை, வெகுவாக பாதிக்கவில்லை. காரணம், மாசற்று இருந்த சூழலில், மாசடைந்த பொருட்களின் விகிதாச்சாரம் மிக குறைந்த அளவே இருந்தது.அசுர வேகத்தில் தொழில் வளர்ச்சிடையும் போது, சுற்றுச்சூழல் மாசடைவதில் இருந்து தப்பிக்காத நாடே கிடையாது.
மெல்ல சாகடிக்கும் கழிவுநீர்: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அதிக பாதிப்புக்கு உள்ளானது வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள். அதற்கு அடுத்த படியாக பின்னாலடை, ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை, சேலம் மாவட் டங்களில் உள்ள சாய, சலவை பட்டறைகள், ஈரோட்டைச் சுற்றியுள்ள தோல் பட்டறைகள். ஆரம்ப காலங்களில் விவசாய கிணறுகளின் நீராதாரத்தை வைத்து தொட்டிகளில் நீரை தேக்கி பல கெமிக்கல்களை கலந்து சலவை பட்டறை மற்றும் சாயப் பட்டறைகள் செயல்பட்டு வந்தன. இவைகளின் கழிவுநீர் நேரடியாக அருகில் உள்ள ஓடைகளில் வெளியேற்றப்பட்டாலும், அப்போது ஓடைகளிலும், நொய்யல், பவானி, காவிரி ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததாலும், நிலத்தடி நீர் அதிகமாக இருந்ததாலும், கழிவுநீர் கலப்பதால் ஏற்பட்ட பாதிப்புகளை யாரும் உணரவில்லை. தங்கள் தேசத்தில் உள்ள நிலம், நீர், காற்று பாதிக்கப்பட்டு, மக்களின் தரமான வாழ்க்கைக்கு கேடு வரக்கூடாது என்ற நோக்கில் நமது நாட்டிற்கு அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகளை கொடுப்பதில் ஐரோப்பிய நாடுகள் முனைப்பாக இருந்தன.
கடந்த 20 ஆண்டுகளில் 500 கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்தில் இருந்து இன்று 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டி, கொங்கு மண்டலம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இது, நமக்கு பெருமையாக இருந்தாலும், இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர், நொய்யல், பவானி, காவிரி ஆறுகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்க முடியாத அளவு கெட்டுப் போய் சீரழிந்துள்ளன. இன்று இது ஒரு மிகப்பெரிய பிரச்னையாக சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதால் ஏற்படும் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதை ஒரு கொலை குற்றமாக வெளிநாட்டவர்கள் பார்க்கும் அதே நேரத்தில், "மாசு இருந்தால் என்ன; நமக்கு வேண்டியது காசு தான்' என்று நாம் இருப்பது, எதிர்கால சந்ததிக்கு பெரிய சவாலாக உள்ளது.
நமது மக்கள், மாசுபடுவதை அன்றாடம் பார்த்து பார்த்து, உணர்ச்சியற்ற ஜடமாய் மாசோடு மாசாக, தங்கள் உடம்பை மாசுபடுத்தி இன்று கொடிய வியாதிகளான கேன்சர் முதல் கிட்னி பழுதாவது வரை பாதிக்கப்படுகின்றனர். நாளும் பலர் செத்துக்கொண்டிருப் பதை தலையெழுத்து என நினைத்து, சர்வசாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த கொடுமைக்கு காரணம், சாயசலவைக்கும், தோல் பதனிடுவதற்கும், உபயோகப்படும் சில மில்லி கிராம் வேதிய பொருட்கள், அவர்கள் குடிக்கும் குடிநீரிலும், குளிக்கும் நீரிலும், கலப்பதால் தான். நொய்யல், பவானி, காவிரி நதிகளின் இரு மருங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் இந்த கழிவுநீர் வேதிகள் கலப்பதால், அந்த மண் மலடாகி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் அழிந்துவிட்டது. மனிதர்களும், மாடுகளும் மலடாகி கொண்டிருப்பதற்கு சான்று, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாநகரங்களிலே துரிதமாக முளைத்துக் கொண்டிருக்கும் செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகளும், தோல் சிறப்பு மருத்துவமனைகளும்.
இறந்த நிலத்தையும், ஆறுகளையும் மீட்போம்: கழிவுநீர் வேதிகளால் மாசடைந்து சீரழிந்து போன நிலத்தையும், நிலத்தடிநீரையும் மீண்டும் பழைய நிலைக்கு மீட்பதற்கு இன்னும் 10 ஆண்டுகள் மழை நீரை நிலத்தில் இறக்கினால் மட்டுமே முடியும். ஜப்பானில் இருந்து வந்த நிபுணர் குழுவின் அறிக்கைபடி, இறந்துவிட்ட நொய்யல் நதிக்கு மறுவாழ்வு கொடுக்க நிச்சயம் முடியும். ஆனால், ஆலை அதிபர்களும், அரசும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வோடு மேலும் மாசடைவதை முழுவதுமாக, (நகராட்சி, மாநகராட்சி கழிவுகள் உட்பட) நிறுத்த வேண்டும்.
தொடர்ந்து மழைநீரை அரை கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டி தேக்கி வைக்க வேண்டும். மாசற்ற சூழலை ஏற்படுத்த தீர்வு உள்ளது. எப்படி அடைவது என்று தெரியாமல் இல்லை. தீர்வை அடைவதில் உறுதியாக யாரும் இல்லை என்பது தான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தை பெற அவர்களின் கெடுபிடியால், "குழந்தைத் தொழிலாளர்கள் இங்கு இல்லை' என்று, தங்களின் வாசலில் எழுதி மார்தட்டும் ஏற்றுமதி நிறுவனங்கள், "சாயக்கழிவுநீர் இங்கு முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது' என, ஏன் எழுதிபோடக்கூடாது. லாபத்தை பெருக்க, உற்பத்தியையும், தரத்தையும் உயர்த்த, உலகின் எந்த மூலையில் இருந்தும் நவீன தொழில் யுக்திகளையும், இயந்திரங்களையும் வரவழைக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், சாயக்கழிவுநீரை முறையாக சுத்திகரித்து மேலாண்மை செய்ய முடியாதா?
லாப இலக்கை அடைவதற்காக சிறுசாயப் பட்டறைகளுக்கு வேலையை கொடுக்கும் இவர்களுக்கும் மாசற்ற சூழலை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது. பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித்தரும் இந்த ஜவுளித் தொழிலால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அரசு இந்த தொழிலை காப்பாற்ற தவறிவிட்டது. சமுதாய அழிவை பார்த்துக் கொண்டு கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கான படித்தவர்கள், மருத்துவர்கள், சமுதாய ஆவலர்கள், பொதுநல சங்கங்கள், மனித உரிமை கழகங்கள் இருந்தும், மக்களை, தெளிவான விழிப்புணர்வு சென்று அடையாதது இப்பகுதி மக்கள் மாசால் மரத்து விட்டனரா என ஆச்சரியப்பட வைக்கிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாழ்பட்டு வாழ வழி தெரியாமல் தவிக்கும் பச்சை துண்டு விவசாயி என்ன செய்து விட முடியும் என, 10 ஆண்டுகளாக அவர்களை, சுப்ரீம் கோர்ட் வரை அலையவிட்டனர்.
இன்று சுப்ரீம் கோர்ட், விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. ஆலை அதிபர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இருந்தாலும், இறுதிக்கட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளை இயக்குவதன் மூலமும், அங்கீகரிக்கப்படாத சிறு, குறு சாயப்பட்டறைகளை முற்றிலும் அகற்றுவதன் மூலமும் இவர்கள் லாபம் அதிகரிக்கும். நிரந்தரமான தீர்வும் கிடைக்கும்.
பிரச்னைகளை தற்காலிகமாக சமாளிக்க மாற்றுவழிகளை தேடாமல், முழு சுத்திகரிப்பை ஆலை அதிபர்கள் செயல்படுத்துவது, அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய முன்வருவது, மீறி கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளை பொதுமக்கள் கண்காணிப்பது என அனைத்து தரப்பினரும் சமுதாய பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். மண் வளம் காத்து, நீர் வளம் காத்து மாசற்ற காற்றை விட்டு சென்றாலே போதும், எதிர்கால சந்ததிகள் வாழ்ந்து காட்டுவர். நாம் வைத்து விட்டு போகும் பணத்தாலோ, சொத்தாலோ வளமான தரமான வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்காது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||