வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.
மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
ஒலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில், ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். இதில், சப்தம், ஓசை, இரைச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாகக் கருதப்படுகிறது.
ஆனால், பெரும்பாலானோர் சப்தம் நம்மை என்ன செய்துவிடும் என்றே கருதுகின்றனர், அதிலும் இளைஞர்களின் விருப்பம் இவ்விஷயத்தில் மோசமாக உள்ளது.
அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தால் மின்னணு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.
ஆனால், ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மையுடையது என்பதை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளை நம் செவி ஏற்றுக்கொண்ட பின்னர், அதை நாம் புரிந்து செயல்பட மூளை துணை புரிகிறது.
அதேநேரத்தில் செவியால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான அதிர்வுகளைத் தாங்க முடியாது. அதாவது, 20 ஆயிரம் அதிர்வுகளுக்கு மேல் செவியால் கேட்க முடியாது, 120 டெசிபல் வரையிலான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாகக் கேட்க முடியும். இதன் அளவு அதிகரித்தால் செவிகள் பாதிக்கப்படும்.
ஆனால், நமது கிராமங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம்.
இதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில், அவர்களது செவித்திறன் பாதிக்கப்படும்.
மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.
ஒலி மாசைக் கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின்போதும் வெளியாகும் ஒலியின் அளவு, அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதுக்கு உள்பட்டோர்) ஒலி மாசு காரணமாக, கேட்புத் திறனை இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பணியாற்றிய பலரும், காது இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத் தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.
மேலும், 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சல் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புல அயர்ச்சி ஏற்படுகிறது. நம் நாட்டில் சென்னை, கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள சாலையோர பழ வியாபாரிகள், ஓட்டுநர்களில் 40 சதவிகிதத்தினர் காது இரைச்சல் பற்றி முறையிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவிகிதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும், ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், 1000 பேருக்கு 35 பேர் எனும் விகிதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 10 சதவிகிதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவிகிதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்கவிடுவதில்லை. குறைவான ஒலியும் மூளையின் முக்கிய மையங்களைப் பாதித்து இயல்பான உறக்கத்தைக் குலைத்துவிடுகிறது.
நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிக ஒலியையோ, எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே, இரைச்சலைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆனால், இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து துக்க நிகழ்ச்சிகள் வரை தொடரும் பட்டாசு சப்தம் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது.
கனரக வாகனங்கள், பஸ்களில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போதாது என்று இரு சக்கர வாகனங்களிலும் தங்கள் பங்குக்கு பலவகை வினோத ஒலி எழுப்பும் மின்னணு ஒலிப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.
இதைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒலி மாசுக் கட்டுப்பாடு சட்டத்தைத் திருத்தி விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.
மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவித குறுக்கீடுகளோ, இடையூறுகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒலி மாசால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை நமக்கு அளித்துள்ள சிறந்த ஒலி மாசுத் தடுப்பு சாதனமாகத் திகழும் மரங்களை சாலையோரங்களில் பெருமளவில் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒலி மாசு என்னும் அரக்கனை அழிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||