இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர் தெரிவிக்கின்றனர்.
நேஷனல் சோலார் மிஷன் : கடந்த ஆண்டு, நவம்பரில், ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம், மூன்று கட்டமாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக, 2010 - 2013 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கில், தமிழகம் தனக்குரிய பங்கினை பெற, சூரியஒளி மின் உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பு வோருக்கு, தடையாக உள்ள அம்சங்களை நீக்க தமிழக அரசு முன் வர வேண்டும். ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் கொள்கையின்படி, தேசிய அனல் மின் உற்பத்தி கழக, வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.பி.டி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிமிடெட்) எனும் அமைப்புதான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு, விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல் படுகிறது.
இந்த அமைப்புதான், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, அவர்களிடம், 25 ஆண்டு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும்.தற்போது, மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பங்கு தெரிவிக்கப்படவில்லை.சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியாரிடம் பெற்றுக் கொள்ளும் என்.வி.வி.என்., அதை தன்னிடம் உள்ள, ஒதுக்கப்படாத அனல் மின்சார தொகுப்பிலிருந்து மின்சாரத்தை இணைத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு யூனிட்டுக்கு 5.50 ரூபாய் விலையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. 5.50 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் பெற்றுக் கொள்வது எளிதானது என்பதால், மாநில அரசுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கண்டிப்பாக ஆர்வம் காட்டும்.
3 சதவீத கட்டாயம் : ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.
கோபன்ஹேகன் சுற்றுச்சூழல் மாநாட்டில் தனி ஆவர்த்தனம் பாடிவிட்டு வந்துள்ள இந்தியா, சில கட்டுப் பாடுகளை, உறுதியாக எடுக்க வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதன்படி 2020ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும் மொத்த மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின் படி, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் இன்னும் கோரப்படவில்லை. எனினும் விண்ணப்ப தாரர்கள் தகுதி நிர்ணயித்து, என்.வி.வி.என்., பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, முதலாவதாக, சூரியஒளி மின் திட்டத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 33 கே.வி., திறன் கொண்ட மின்கிரிடுகள் மூலமாகத் தான் கொண்டு செல்ல வேண்டும். இரண்டாவதாக, விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது அதன் இயக்குனர்களின் மதிப்பு (நெட் வொர்த்), ஒரு மெகா வாட்டுக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் கொண்டிருக்க வேண்டும்.மூன்றாவதாக, "சோலார் போட்டோ வோல்டிக்' முறையில் மின் உற்பத்தி செய்ய இந்தியாவில் தயாரிக்கப்படும் பேனல் களையே உபயோகிக்க வேண்டும்.இவற்றில், முதல் மற்றும் மூன்றாவது விதிமுறைகள் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு முட்டுக்கட்டை களாக அமைந்துள்ளன.
தமிழக அரசு செய்யுமா?தமிழகத்தில், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான் சூரிய ஒளி மின் உற்பத் திக்கு ஏற்ற மாவட்டங்கள் என்று கருதப் படுகின்றன.ஒரு மெ.வா., சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க, குறைந்தது 4.5 ஏக்கர் தேவைப்படும். நகருக்கு வெளியே கிராமங்களில்தான் இந்த இடம் கிடைக்கும். அங்கு தான் இட மதிப்பு குறைவாக இருப்பதால், திட்டம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில், சில இடங்களைத் தவிர, கிராமப்பகுதியில் 33 கே.வி., திறன் கொண்ட மின் கிரிடுகளோ அல்லது அதற்கேற்ற துணை மின்நிலையங்களோ இல்லை. இவை அதிகமாக, 11 (22/11) அல்லது 22 கே.வி., (110/22) துணை மின் நிலையங்களில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் கிரிடுகளை, 110/33 கே.வி., அல்லது அதற்கு அதிக திறன் கொண்ட துணை மின் நிலையங்களாக மாற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கூறிய திறன் கொண்ட ஒரு துணை மின் நிலையம் கூட இல்லை. இவ்விஷயத்தை, போர்க்கால அடிப்படையில், செய்தால்தான் தேசிய திட்டத் தின் பயனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மற்ற மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், குறிப்பாக, குஜராத், கர்நாடகா மாநிலங் களை சேர்ந்த மின் உயர் அதிகாரிகள், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் அதிகப் பங்குகளை கொண்டு வர டில்லியில் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்துறை உயர் அதிகாரிகள் அதிக ஆர்வம் கொண்டிருந் தாலும், தமிழக அரசு சூரிய ஒளி மின் சக்தி குறித்து, கொள்கை ரீதியாக தெளிவான முடிவை இன்னும் எடுக்காததால், தமிழக அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.காற்றாலை திட்டத்தில், பல மட்டத்தில் அதிகாரிகள் உதவி செய்வதில்லை. காற்றாலையிலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் கிரிடுகளை உற்பத்தி யாளர்களே அமைக்க வேண்டும் என்றும், கட்டுமான வளர்ச்சிக் கட்டணம் என்ற தொகையை கட்டவேண்டும் என்றும் மின் வாரியம் வலியுறுத்தி வந்தது.
இதுதொடர்பான வழக்கில் மின்சாரத் துறைக்கு சாதக மாக தீர்ப்பானது. இதன் பலனாக, தமிழக மின் வாரியத்துக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. அதே போல், சூரிய ஒளி மின் உற்பத்தி யாளர்கள், மின்கிரிடுகள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மின் துறை யிலுள்ள சில அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் மின் வாரியம் செலவு செய்ய வேண்டாம் என்று பார்க் கிறார்களே தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க காற்றாலையை விட மூன்று பங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி யுள்ளது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். நீண்டகால முதலீடு கொண்ட இத் தொழிலில், நிறைய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அதிகாரிகள் திட்டமிட வேண்டும். 365 நாட்களிலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சூரிய ஒளி மின் திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
அத்துடன், சூரிய ஒளி மின் திட்டங்கள் மட்டுமே, அனைத்துப் பகுதியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும் அமைக்க முடியாது. பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் சூரிய ஒளி மின் திட்டத்தில் மட்டுமே சாத்தியம். எனவே, எதிர்காலத்தில் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளுமே, சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப் புள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் மின் வினியோகத்தில், உள்ள இழப்பை தவிர்க்க முடியும். தமிழகத்தில் பற்றாக்குறை 10-12 சதவீதமும், மின் வினியோக இழப்பு 18-20 சதவீதமும் உள்ளது. காற்றாலைகளைப்போல் மின் கிரிடுகளை முதலீட்டாளர்களே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால், இந்த திட்டம் ஆரம்பித்ததன் நோக்கமே போய்விடும். அத்துடன், பிற திட்டங்களைப் போல் இத்திட்டமும், வெற்றியடையாமல் வெறும் காகிதத்திலேயே முடிந்துவிடும்.
சூரிய ஒளி மின்உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, துணை மின் நிலையங்களின் மின் திறனை, 33 கே.வி.,யாக திறன் உயர்த்த தமிழக அரசு உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகளைப் போல், என்.வி. வி.என் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று தமிழக அரசும் கோரிக்கை வைக்க வேண்டும்.ஏற்கனவே தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழகத்தில் 100 மெ.வா. சூரிய ஒளி மின் உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தார். கடந்த வாரம், தமிழக அரசின் சார்பாக மின்துறை செயலாளர், தேசிய சோலார் மிஷனில் தமிழகத்துக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கடிதம் எழுதி யுள்ளார். ஆகவே சூரிய ஒளி மின் உற்பத்தி அவசியம் என்று தமிழக அரசு கருதுகிறது. அது பாராட்டுக்குரியது. அதற்கான அடிப்படை கட்டுமான தேவையை பூர்த்தி செய்யும் பணியிலும், காற்றாலைக்கு சில அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை போல்இதற்கும் போடுவதை தவிர்க்கவும், தமிழக அரசு, முழுமூச்சில் முயற்சி செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், நேஷனல் சோலார் மிஷனை விடுத்து, குஜராத் போல், தமிழக அரசும், தங்களுக்கென்ற தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்முதல் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழக மின்வாரியமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைந்த கதையாய், இலவசமாக கிடைக்கும், சூரிய ஒளியை பயன்படுத் தாமல், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அவதிப்படக்கூடாது. தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய தமிழகத்தை ஒளிரச் செய்ய தமிழக அரசும், அதிகாரிகளும் உடனே களத்தில் இறங்க வேண்டும்.
கோடைகாலம்... வரப்போகிறது தேர்தல்...:நம் வாக்காளர்கள், கடைசி நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் ஆட்சியை மாற்றி விடுவார்கள் என்பது நாம் பழைய தேர்தல் களிலிருந்து படித்த பாடம். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் கோடை காலத் தில் தான் வரப்போகிறது. அப்படியானால், மின்வெட்டின் போது, மக்கள் ஓட்டுப் போடப்போகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.கோடை காலத்தில் 10 ரூபாய் அதிகம் கொடுத்து, டீசல் மின் உற்பத்தியாளர் களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று, பழைய பாணியில் அதிகாரிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது சமயத்தில் வீடு களுக்கு மட்டுமே மின்சாரம் வினியோகிக்க முடியும்.
தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடியாது.கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, தொழில் மாவட்டங்களான கரூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதி களில் தி.மு.க.,வுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு வர இருக்கும் தேர்தலுக்குள் பெரிய மின் திட்டத்தை கொண்டு வருவது கடினம். எந்த ஒரு மின்திட்டத்தையும் அமைக்க குறைந்தது 5-7 ஆண்டுகள் ஆகும். ஆனால் சூரிய ஒளி மின்திட்டத்தை மட்டுமே ஓர் ஆண்டுக்குள் அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பிற மாநிலங்களைப்போல் தமிழகமும், 13-16 ரூபாய் வரை அளித்து 10 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தால், ஒரு பஞ்சாயத்துக்கு 2 மெ.வா., வீதம் 600 மெ.வா., உற்பத்தி செய்யலாம். இல்லா விட்டால் தேர்தல் நேரத்தில் எழும் மின் வெட்டுப் பிரச்னையின் போது, வாக்காளர் களின் கோபத்தை சந்திக்க நேரிடும். அண்ணா சாலையில் சட்டசபை வளாகத்தை கட்டியதாலோ, அண்ணா பல்கலை., நூலகம் அமைத்ததையோ மக்கள் சாதனையாக ஏற்க மாட்டார்கள். அதை கடமையாகவே கருதுவார்கள். மின் பற்றாக் குறையை உணர்ந்து, உடனடியாக நிறுவக் கூடிய சூரிய ஒளி மின் திட்டத்துக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
எது சிக்கனம்...சிந்திக்குமா அரசு...: தமிழகத்தில் இன்னும் இரு ஆண்டு களில், அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் 3 ஆயிரம் மெ.வா., மின் உற்பத்தி செய்ய, மின் வாரிய அதிகாரிகளும் நிதித்துறை அதிகாரி களும் திட்டமிட்டு வருவதால், சூரிய ஒளி மின் திட்டத்துக்கு உள்கட்டமைப்புக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள்.இந்த மின் உற்பத்தியால், தமிழகத்தில் மின் தேவையை சமாளிக்க முடியும் என்று கருதும் அவர்கள், சூரிய ஒளி மின் திட்ட உள்கட்டமைப்புப் பணிகளை மின்சார வாரியம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களின் கணக்குப்படி, 4 ரூபாய்க்கு அனல் மின் நிலையம் மூலம் ஒரு யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 3 ஆயிரம் மெ.வா., மின்சாரத்துக்கு இதுவரை அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும். அதுமட்டுமல்ல, இந்த கணக்கில் வராத செலவினங்களும் உண்டு. இம்மின்சாரத்தை கொண்டு செல்லும் பாதையில் உள்ள கிரிடு மற்றும் துணை மின் நிலைய திறன் கூட்டுவதற்கான செலவை உற்பத்தியில் சேர்ப்பதில்லை. இவையெல்லாம் அரசின் பட்ஜெட் செலவினங்களில் மட்டுமே வருகின்றன.
மேலும், தற்போது கிடைக்கும், நிலக்கரி, தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுரங் கங்கள் அதிக விலை கொடுப்பவர்களுக்கு நிலக்கரியை விற்பதால், நமக்கு தொடர்ந்து நிலக்கரி கிடைப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதனால் தேவைக்கு அதிகமாக, நிலக்கரியை சேமித்து வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த செலவினங்கள் எல்லாம் அவர்கள் உற்பத்தி செலவில் கணக்கில் சேர்த்துப் பார்ப்பதில்லை.மேலும், தரமான நிலக்கரி இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. நிலைமை இவ்வாறு இருக்க, முதலீடு செய்ய வருபவர்களை பிற மாநிலங்கள் போல், ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தனியாரே முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய வழிவகுப் பதே எந்த புத்திசாலி அரசும் செய்யும் பணியாகும்.
தனி வழியில் செல்லுமா தமிழகம்...:சோலார் நேஷனல் மிஷன் திட்டத்தின் படி, தற்போது 2010-13ம் ஆண்டுக்குள் 1000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 500 மெ.வா., சோலார் போட்டோ வோல்டிக் வழியா கவும், 500 மெ.வா., சோலார் தெர்மல் வழியா கவும் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.உலக அளவில்,சூரிய ஒளி மின் உற்பத்தியில் சோலார் தெர்மல் வழி உற்பத்தி 1 சதவீதம் மட்டுமே. இதற்கு ஏன் 50 சதவீத பகுதியை ஒதுக்கீடு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதனால்தான் என்னவோ, குஜராத் அரசு அவர்களுக்கு என்று தனியாக திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். சூரிய ஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி செய்பவர்களுக்கு குஜராத் அரசு நேரடியாக ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுக்கு மின்சாரம் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.தமிழக அரசும் இதேபோல் ஒரு திட்டத்தை வகுத்தால்தான், இலவசமாக கிடைக்கும் சக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையில் (டெடா) இவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் பல சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி அறிந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை.
இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கி இன்னும் 2 மாதம் கூட ஆகவில்லை. இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்யமுடியுமா? இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் சோலார் பேனல்கள் எத்தனை ஆண்டு உழைக்கும். தேய்மானத் தால் எத்தனை சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் இந்திய சூழ்நிலையில் யாரும் அறிந்திருக்கவில்லை. இதைப்பற்றி அறியாமல், அரசு தருகிறது என்று இறங்கினால், கோடிக்கணக்கில் செய்யும் முதலீடு கேள்விக்குறி ஆகிவிடும். இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அனுபவம் உள்ளவர்கள், டெக்னீசியன் உள்ளிட்டோர் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர். வெறும் பத்திரிகை செய்தியை நம்பி இறங்குவோருக்கு இத்துறை பெரிய சவாலாக அமையும். புதிதாக துவங்க விரும்பும் நிறுவனங்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து துவங்குவதே அறிவுப்பூர்வமான செயல்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||