இணையதள தேடலில் திரு பூ.ஆ.நரேஷ்
விழுப்புரம், தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டு விழா
அறிவிப்பு
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2039 கன்னி(புரட்டாசி) 5
21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை.
இடம் : குரு திருமண மண்டபம், கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம்.
காலை 10-00 மணி தொடக்க விழா.
தலைமை : மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
தலைவர், தமிழ்ச்சங்கம்.
முன்னிலை : திரு. பூ.ஆ. நரேஷ்
முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.
வரவேற்புரை : திரு. வ.பன்னீர்ச்செல்வன்
துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம்
வாழ்த்துரை : திரு. ஏ.சாமிக்கண்ணு
கல்வியாளர், விழுப்புரம்.
தொடக்கவுரை : முனைவர் ஆர்.பழனிசாமி இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.
வாணாட்பணி பட்டம் பெறுபவர் :
எழுத்தாளர் பரிக்கல் ந.சந்திரன்
சிறப்புரை : திரு. இ.மா.மாசானமுத்து இ.கா.ப.
காவல்துறைத் துணைத் தலைவர், விழுப்புரம் சிறகம்.
நன்றியுரை : திரு. சி.வீரராகவன்
பொருளாளர், தமிழ்ச்சங்கம்
மாலை 03-00 மணி இயலரங்கம்
பாட்டரங்கம்
தலைவர் : பாவலர் வையவன்
வரவேற்புரை : திரு வீ. சோழன்
இணைச்செயலர், தமிழ்ச்சங்கம்.
வாழ்த்துரை : திரு. மு.அனந்தகுமார்
உதவி திட்ட அலுவலர், காஞ்சிபுரம்.
தலைப்பு : என்னதான் சொன்னார்கள்?
எதைத்தான் கேட்டோம்?
திருவள்ளுவர் : திரு. இராம. சிவஞானம்.
திருமூலர் : திரு.தி.க.நாகராஜன்
வள்ளலார் : திரு. தமிழநம்பி
காந்தியடிகள் : திரு. இரா.ச.சொக்கநாதன்
பெரியார் : திருவாட்டி அர, அநுசுயாதேவி
இசையரங்கம்
அரசு இசைப்பள்ளி மாணவர்கள், விழுப்புரம்.
உரையரங்கம்
வாழ்த்துரை : திரு. சாமி.செந்தில்
ஏ.சா.அறக்கட்டளை, விழுப்புரம்
சிறப்புரை : திரு. கோ.விஜயகுமார்
காவல் ஆய்வாளர், விழுப்புரம்.
பொருள் : சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம்
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்
பொருள் : சித்திரச்சிலம்பு
நன்றியுரை : பாவலர் சீ.விக்கிரமன்
செயலர், தமிழ்ச்சங்கம்.
அருந்தமிழ்ச் சுவைபருக அனைவரும் வருக!
தேசிய பெண்கள் விழா
விழுப்புரம், ஜன. 25: விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் விழா கொண்டாடப் பட்டது.
வளவனூர் அரசு மேல்நிலை பள்ளியில் தேசிய பெண்கள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் இரா.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் அமிர்தகௌரி வரவேற்றார்.
பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் உமாதேவி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர் கிருஷ்ணராஜ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் டி.என்.ஜெ.சம்பத், பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி ஆகியோர் பெண்கள் தினத்தின் சிறப்பு குறித்து பேசினார்கள்.
மாவட்ட கலெக்டர் இரா.பழனிசாமி விழாவில் உரையாற்றும் போது, பெண்கள் இனி எதிர்காலத்தில் எந்த பணியிலும் இருக்கின்ற நிலைமை உருவாக்கப்படும். அதனால்தான் இதுபோன்ற விழாவினை வேறு இடங்களில் வைத்து நடத்துவதை விட பெண்கள் பள்ளியில் வைத்து நடத்துவது சிறப்புடையதாக இருக்கும் என்ற நோக்கத்தில் இங்கு இந்த விழா கொண்டாடப் படுகிறது.
தற்போதைய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தனியார் பள்ளிகளையும், தனியார் மருத்துவ மனைகளையும் விட சிறப்பாக செயல்பட்டுவருவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.
தேசிய பெண்கள் தினத்தில் அனைவரும் பெண்கள் முன்னேற்றத் திற்காக பாடுபடவேண்டும் என்று பேசினார்.
இவ்விழாவில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
விளையாட்டு வீரர்களை கண்டறியும் பயிற்சி
விழுப்புரம், ஜூலை 7: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு விளையாட்டு ஆசிரியர்களுக்கு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் உள்ள உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய மாணவர்களை கண்டறிய 15 மீட்டர், 800 மீட்டர், லாங் ஜம்ப், ஷாட்புட், ஷட்டல் ரன் உள்ளிட்ட 5 வகையான பரிசோதனைகள் மாணவர்களிடம் நடத்தப்படுகினறன. இப் பரிசோதனைகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இத் தகுதி வாய்ந்த மாணவர்களை எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்து வகுப்பு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புக்கு முதன்மை கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.தாமஸ் முன்னிலை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் இருந்து விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு இயக்குநர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
4 ஆண்டுகளில் 10 புதிய பள்ளிகள் திறப்பு
விழுப்புரம், ஜூலை 9: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 10 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அப் பள்ளியின் திறப்பு விழா மற்றும் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பங்கேற்று அமைச்சர் க.பொன்முடி பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 10 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 59 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும், 29 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
10-ம் வகுப்பில் 7.4 சதவீதமும், 12-ம் வகுப்பில் 13.4 சதவீதமும் மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் கல்வித் தரம் உயர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மீனவர்களுக்கு, மீன்பிடி தடைகாலத்துக்காக ரூ.500 உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்களில் உள்ள 3,297 பேருக்கு ரூ.16,48,500 உதவித் தொகை வழங்கியுள்ளோம். மீனவர்களும் மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றார்.
அரவானிகளுக்கு நலவாரியம் ஆரம்பித்து இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. மேலும் உயர் கல்வித்துறையில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது 1,023 பேராசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். இந் நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ், செஞ்சி எம்எல்ஏ கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் மைதிலிராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு: காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் தடை: மாவட்ட ஆட்சியர்
சென்னை, பிப். 18: பிளஸ்-2 பொதுத் தேர்வில் காப்பி அடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. சென்னை வருவாய் மாவட்டத்தில் 48,757 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
இதற்காக தென்சென்னை கல்வி மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களும், மத்திய சென்னை கல்வி மாவட்டத்தில் 36 தேர்வு மையங்களும், சென்னை கிழக்கு கல்வி மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களும், வடக்கு கல்வி மாவட்டத்தில் 43 தேர்வு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
சென்னை மாவட்டத்தில் சிறப்பாக தேர்வு நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) து. முனிசாமி தலைமையில் மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
முறைகேடுகள் இன்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ. நரேஷ் தலைமையில் தலைமை ஆசிரியர்களைக் கொண்ட 20 பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட உள்ளன.
மேலும் தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் அஷ்ரப் நிஷா தலைமையில் 5 பறக்கும் படை குழுக்களும், மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலர் ஆறுமுகம் தலைமையில் 5 பறக்கும் படை குழுக்களும், கிழக்கு சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சூசன் எட்வர்ட் தலைமையில் 5 பறக்கும் படை குழுக்களும், வடக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராஜலிங்கம் தலைமையில் 5 பறக்கும் படை குழுக்களும் மற்றும் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும் பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளன.
தேர்வு அறைக்குள் துண்டுச் சீட்டு அல்லது புத்தகத்தை மறைத்து வைத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டு தேர்வு எழுதத் தடையும், துண்டுச் சீட்டை பார்த்து எழுதுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுதத் தடையும் விதிக்கலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தாய்த்தமிழ் மழலையர் பள்ளியின் 9-ம் ஆண்டு முப்பெரும் விழா
திண்டிவனம், மே 4: திண்டிவனம் உரோசனை தாய்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 9-ம் ஆண்டு முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
அறிவியல் கண்காட்சி, பரிசளிப்பு விழா மற்றும் கலை விழா என மூன்று நாள்கள் விழாக்கள் நடத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி (செவ்வாய்கிழமை) கண்காட்சி திறப்பு விழா ஆசிரியர் க.சாரதி தலைமையில் நடைபெற்றது.
வேதவல்லியம்மாள் அறக்கட்டளையின் தலைவர் ந.குபேரன் கண்காட்சியினை திறந்து வைத்து பேசினார். அதனை தொடர்ந்து 29-ம் தேதி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டி விழாவிற்கு ஆசிரியர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் ஒலக்கூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் என்.குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் அறிவியல் கண்காட்சிகளை பார்வையிட்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 30-ம் (வியாழக்கிழமை) இறுதி நிகழ்ச்சியாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக கல்வியாளர் அ.ஜலாலுதீன் கலந்து கொண்டு பேசினார்.
வழக்கறிஞர் மு.பூபால், மருத்துவர் மணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த ஆலோசனை
விழுப்புரம், ஆக. 3: விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பெ.குப்புசாமி திங்கள்கிழமை பதவியேற்றார்.
இவர் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி விழுக்காடு மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி விழுக்காடு உயர்ந்தது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த பூ.ஆ.நரேஷ் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.குப்புசாமி பதவியேற்றார்.
ஆலோசனை
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்ற குப்புசாமி முதற்கட்டமாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மற்றும் திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள் ஆகியோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளிகளின் தற்போதைய தேர்ச்சி விழுக்காடு குறித்து கேட்டறிந்த அவர், இத் தேர்ச்சி விழுக்காட்டை மேலும் உயர்த்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு உடனடியாக சென்று சேர்வது குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்துவது, அரசு நலத் திட்டங்கள் மாணவர்களை உடனே சென்றடைவது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதன்மை கல்வி அலுவலர் பெ.குப்புசாமி.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
விழுப்புரம், மே. 2: விழுப்புரம் மாவட்ட அளவில் நடைபெற்ற பிளஸ் 1 தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் வெளியிட்ட அறிக்கை:
மார்ச் 2009-ல் விழுப்புரம் மாவட்ட அளவில் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் 193 மேல் நிலைப் பள்ளிகளிலிருந்து 15,252 மாணவர்களும், 14,903 மாணவிகளும் ஆக மொத்தம் 30,155 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் 14,251 மாணவர்களும், 14,322 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 92.28 சதவீதம்.
மூன்று பாடங்களில் தோல்வி அடைந்த, தேர்ச்சி பெறாத மாணவர்களின் பட்டியல் பள்ளித் தகவல் பலகையில் மே 4-ம் தேதி வெளியிடப்படும். இவர்களுக்கான சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாதம், முதல் வாரத்தில் அந்தந்த பள்ளியிலேயே நடைபெறும். இம் மாணவர்கள் இத் தேர்வில் பங்கேற்று பயிற்சி பெறலாம் என்றார்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்
விழுப்புரம், ஜூலை 7: ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்குவதில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக மரக்காணம் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பல ஒன்றியங்களில் பழைய சம்பள விகிதப்படியே ஆசிரியர்கள் சம்பளம் பெற்றுள்ளனர்.
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை தமிழக அரசு அமலாக்குவதாக அறிவித்தது. இதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி முதலியவை இரு மடங்காக உயர்ந்தன. அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் வரை சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது.
இந்த விகிதப்படியான சம்பள உயர்வில் 1-1-2006-க்குப் பிறகு பணியில் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பழைய அகவிலைப்படி கணக்கிடும்போது தற்போது பெறும் சம்பளத்தைவிட புதிய சம்பள விகிதம் குறைந்து விட்டதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அவர்களுக்கு தகுதி ஊதியம் வழங்க புதிய உத்தரவு பிறப்பித்து.
இருப்பினும் பல்வேறு ஒன்றியங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கான சம்பளம் ஜூலை 7-ம் தேதிவரை வழங்கப்படவில்லை.
இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, புதிய ஊதிய விகிதத்தை எப்படி அமல்படுத்துவது என்பதில் அதிகாரிகளுக்குத் தெளிவில்லை. போதிய விவரம் தெரியவில்லை. பழைய ஊதியமே போதும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தால் சம்பளம் வழங்குகின்றனர் என்கின்றனர்.
இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் கூறியதாவது:
புதிய சம்பள விகித்தில் சில ஆசிரியர்கள் கூடுதல் டிகிரி வாங்கியிருந்தால் அவர்களுக்கு ஒரு ஊதியஉயர்வு கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் சிலர் விடுமுறையை சரண்டர் செய்வர். இதற்கும் பணமாக வழங்க வேண்டும். புதிய சம்பள விகிதத்தில் இவைகளை அமல்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளன. விரைவில் இது சரி செய்யப்படும் என்றார்.
இது தொடர்பாக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் சிலரிடம் கேட்டபோது, மரக்காணம் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் ஸ்ரீதருக்கு முறைப்படி புகார் மனு அனுப்பியுள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து முறையிட உள்ளோம் என்றனர்.
அரசுப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
செஞ்சி, மே 29: செஞ்சி வட்டம் கொங்கரப்பட்டு அரசுப் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப் பள்ளியில் தேர்வு எழுதிய 70 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவன் ரா.புருஷோத்தமன் 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பெற்றார். கணிதத்தில் வைத்தீஸ்வரி, கிருத்திகா, வி.நீலகண்டன், ரா.புருஷோத்தமன் ஆகிய 4 மாணவ, மாணவியர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கொங்கரப்பட்டு அறம் அறக்கட்டளை நிர்வாகி மனோகரன் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசாக, தலா ரூபாய் ஆயிரத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் ஜோசப் அந்தோணிராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சி.சக்கரபாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
'சூரிய கிரகணம் - ஓரு மகிழ்ச்சியான அனுபவம்'
ஜூலை 22: அபூர்வ நிகழ்வான சூரிய கிரகணத்தை, பொதுமக்கள் புதன்கிழமை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இதற்காக அதிகாலையில் எழுந்து பல மணி நேரம் காத்திருந்து கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தது ""ஒரு மகிழ்ச்சியான அனுபவம்'' என பொதுமக்களில் பலர் கருத்து தெரிவித்தனர்.
விழுப்புரத்தில் முழு சூரிய கிரகணத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புதன்கிழமை கண்டு களித்தனர்.
சூரிய கிரகணத்தை காண்பதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவை இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தன.
முதன்மை கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ், அறிவியல் இயக்க துணைத் தலைவர் மனோகர், மாவட்டத் தலைவர் மோகன், சமூக நல அமைப்பைச் சேர்ந்த பாபுசெல்வதுரை, பாவேந்தர் பேரவை உலகதுரை ஆகியோர் இந்த சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.
பிளஸ் 2 தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 72.41 சதவீதம் தேர்ச்சி
விழுப்புரம், மே 14: விழுப்புரம் மாட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 72.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 13 சதவீதம் அதிகம் என்று முதன்மை கல்வி அலுவலர் பூ.ஆ.நரேஷ் தெரிவித்தார்.
இவர் வியாழக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 72.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டில் 59.40 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகம்.
கள்ளக்குறிச்சி பகுதிக்கு முதல் மூன்று இடம்
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.யுவராஜ் 1175 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
இதேபோல் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.சரண்யா 1175 மதிப்பெண்கள் பெற்று இவரும் முதலிடம் பிடித்தார்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹினா கெüசர் 1173 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், இதே பள்ளி மாணவர் ஆர்.ராஜேஷ் 1172 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் கண்டாச்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.ரேவதி 1119 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.
வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மணிவண்ணன் 1098 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், பெரியதச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.முருகன், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.ராஜ்குமார் ஆகிய இருவரும் 1093 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தை பெற்றனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||