அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்து வந்த, "நானாஜி' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நானாஜி தேஷ்முக் இன்று நம்மிடையே இல்லை.
அரசியலிலும், சமூக வாழ்க்கையிலும் அவரால் ஈர்க்கப்பட்ட பலரும் நானாஜியை கொள்கைப் பிடிப்புள்ள சிறந்த தலைவராகவே கருதி வந்தனர். அவர் மீது அன்பும் பாசமும் வைத்திருந்த விசுவாசிகளும், நண்பர்களும் அவரைச் சிறந்த அரசியல் ராஜதந்திரியாகவே கருதினர்.
இளம்வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்த அவர், விரைவிலேயே அதன் முழுநேரத் தொண்டரானார். பல்வேறு துறைகளிலும் உயர்நிலையில் தனக்கென நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருந்தவர் நானாஜி. பூதான இயக்கத் தலைவர் வினோபா பாவேயுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். எதிரிகளின் கூடாரத்திலும் நண்பர்களைப் பெற்றிருந்தது அவரது சிறப்பு அம்சமாகும்.
1948-ல் ஜவாஹர்லால் நேரு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தடைவிதித்தபோது நானாஜி தேஷ்முக் தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். எங்கிருந்து தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். பண்டித நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரபி அகமது கித்வாய் வீட்டிலிருந்துதான்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தனது முக்கிய எதிரியாக நேரு கருதி வந்தது அனைவருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ். கொடி பறப்பதை அனுமதிக்க முடியாது; அதை வளரவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும் கித்வாய், நானாஜி தங்குவதற்குத் தனது வீட்டில் இடம் கொடுத்து தலைமறைவு இயக்கத்துக்கு உதவி வந்தார். இதிலிருந்தே நானாஜியால் கித்வாய் எப்படி ஈர்க்கப்பட்டார் என்பது தெரியவரும்.
ராம்நாத் கோயங்காவுடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தபோதுதான் நானாஜியிடம் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ராம்நாத்ஜி, நானாஜி இருவரும் சிறந்த நண்பர்கள் மட்டுமல்ல; ஒரே சிந்தனை உடையவர்களாகவும், தேசத்தின் வளர்ச்சியில் பற்றுக் கொண்டவர்களாகவும் இருந்தனர். சொந்த நலனில் அக்கறை கொள்ளாமல், தாய்த் திருநாட்டின் வளர்ச்சியிலேயே அவர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர். தேசத்தின் நலனே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ராம்நாத் கோயங்கா "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையை வெறும் செய்தித்தாள் என்ற கண்ணோட்டத்தில் தொடங்கவில்லை. தேசத்தின் நலனில் அக்கறையுள்ள தேசிய சக்திகளை ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவே எண்ணி அதை நடத்தி வந்தார்.
வாழ்க்கையில் பயம் என்றால் என்னவென்றே அறியாதவர் ராம்நாத்ஜி. அதேபோலத்தான் நானாஜியும். துணிச்சல் மிகுந்த இந்த இருவரும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரமுகர்களுக்கு உதாரண புருஷர்களாக விளங்கினர். 1974}ல் பிகார் இயக்கத்துக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையேற்றபோது அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர்கள் ராம்நாத்ஜியும், நானாஜியும்தான்! இதன் மூலம் நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது.
இந்திரா காந்திக்கு எதிராக ஓர் இயக்கத்தை ஏற்படுத்த விரும்பிய ராம்நாத்ஜியும், நானாஜியும் அதற்குத் தலைமையேற்குமாறு ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவரும் சம்மதித்தார். இதற்கு ஒரு தனிக் கதை இருப்பது 1980}களின் பிற்பகுதியில்தான் எனக்குத் தெரியவந்தது.
மும்பை எக்ஸ்பிரஸ் டவர்ஸில் நடந்த ஒரு விருந்தில், ஜெயப்பிரகாஷ் நாராயணனை இந்த இயக்கத்துக்குக் கொண்டுவந்தது எப்படி என்று ராம்நாத்ஜி, நானாஜி இருவரிடமும் நான் கேட்டேன். நானாஜி மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அந்தக் கதையை என்னிடம் விவரித்தார்.
ராம்நாத்ஜி, நானாஜி, 1942 தலைமறைவு இயக்கத்தின் ஹீரோ அச்சுத பட்வர்த்தன், ஹிந்தி கவிஞர் ராம்தாரி சிங் திங்கர் ஆகியோர் 1973}ம் ஆண்டு ஒரு நாள் பெங்களூரில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலக விருந்தினர் மாளிகையில் ஒன்றுகூடிப் பேசினர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டத்தில், ஜனநாயக நடைமுறைகளைச் சீர்குலைக்கும் வகையில் எதேச்சாதிகாரப் போக்கில் செயல்படும் இந்திரா காந்திக்கு எதிரான இயக்கத்துக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்தினர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், ராம்தாரி சிங் திங்கர், நேரு குடும்பத்தினருடன் குறிப்பாக இந்திரா காந்தியுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தவர் என்பதுதான். ஆனால், அதை அவர் பொருள்படுத்தாமல் தேசத்தின் நலனே முக்கியம் என்று செயல்பட்டு வந்தார்.
தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, இயக்கத்துக்குத் தலைமையேற்க ஜெயப்பிரகாஷ் நாராயணன் தயக்கம் காட்டினார். சர்க்கரை நோயாலும், புராஸ்டேட் வீக்கத்தாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். இதையறிந்த ராம்நாத்ஜி, அவருக்குத் தேவையான சிகிச்சையை அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். (அதன்படி பின்னர் அவருக்கு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.) இருந்தபோதிலும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எந்த முடிவுக்கும் வராமல் இருந்தார். இதையடுத்து அனைவரும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து, பிரார்த்தித்துவிட்டு மீண்டும் சென்னை வந்து தொடர்ந்து பேசுவது என முடிவு செய்தனர்.
திருப்பதியில் ராம்தாரி சிங் திங்கர், "என்னுயிர் போனாலும் பரவாயில்லை; ஆனால், தேசத்தின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பாடுபட்டு வரும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மேலும் சில காலத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பூரண நலத்துடன் வாழவேண்டும்' என்று ஏழுமலையானை வேண்டிக்கொண்டார். பின்னர் அனைவரும் சென்னையில் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் உள்ள ராம்நாத்ஜியின் வீட்டுக்கு வந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் ராம்நாத்ஜியின் மடியில் சரிந்து விழுந்து இறந்தார் ராம்தாரி சிங் திங்கர். அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன், அச்சுத பட்வர்த்தன், நானாஜி ஆகியோர் அருகிலேயே இருந்தனர். ராம்தாரி சிங் திங்கரின் பிரார்த்தனை பலித்துவிட்டதை உணர்ந்த நிலையில், இந்திரா காந்திக்கு எதிரான இயக்கத்துக்குத் தலைமையேற்க இசைந்தார் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.
இதுபற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதுமாறு பலமுறை நான் நானாஜியை வேண்டி கேட்டுக் கொண்டேன். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். பின் எப்படி இதுபற்றி மக்களுக்குத் தெரியவரும் என்று கேட்டபோது, "நான் எல்லா தகவல்களையும் எனது டைரியில் எழுதியுள்ளேன். நான் இறந்த பிறகு அனைத்தும் தெரியவரும்' என்றார். இன்று அவர் நம்மிடையே உயிருடன் இல்லை. அதனால் இதைக் குறிப்பிடுகிறேன்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கினார். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதுதான் நானாஜி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தலைமறைவு இயக்கத்துக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் அவரும் ஒருவராக இருந்தார். இந்த இயக்கமே பின்னர் ஜனதாவாக உருவெடுத்தது.
எதிரிகளை ஒடுக்கிவிட்டோம் என்ற இறுமாப்பில் இருந்த இந்திரா காந்தி, வெற்றி நம் பக்கம்தான் என்ற எண்ணத்தில், 1977}ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குத் தயாரானார். அதுவரை தலைமறைவாக வளர்ந்து வந்த இயக்கம், ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியாக உருவெடுத்தது. இதற்கு முக்கிய காரணம் நானாஜிதான். தேர்தலில் போட்டியிட்டு அவர் வென்றார். மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி அரியணை ஏறியபோதிலும் அமைச்சர் பதவியை ஏற்க நானாஜி மறுத்துவிட்டார்.
பின்னர் ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டு 1980}ல் பாரதிய ஜனதா கட்சி உருவானபோது, தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக நானாஜி அறிவித்தார். அப்போது அவருக்கு 65 வயது. அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற அவருக்குப் புதிய பணி காத்திருந்தது. ஆன்மிகம் மற்றும் தார்மிகச் சிந்தனைகளை மக்களிடம் போதித்து, ஏழை மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் நானாஜி.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகவும் பிற்பட்ட மாவட்டமான கோண்டாவில் தனது சமூக சேவைகளைத் தொடங்கினார். பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் வறுமையும் வறட்சியும் நிறைந்த பீட் மாவட்டத்தில் தனது சேவைகளைத் தொடர்ந்தார். பின்னர் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள 500}க்கும் மேலான கிராமங்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது, நானாஜியின் சித்திரகூட் திட்டப் பணிகளைப் பார்வையிட்டுப் பாராட்டினார். அந்த மாவட்டத்தில் உள்ள 80 கிராமங்கள் எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் முன்னேறி வருவதைக் கண்டு ஆச்சரியம் தெரிவித்தார். தாம் இறுதிக்காலத்தில் வாழ்ந்துவந்த இடத்தையே நானாஜி கர்மபூமியாக நினைத்திருந்தார்.
நானாஜி ஒருமுறை என்னிடம் பேசும்போது, "நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட்ட நாள்களைவிட சாப்பிடாமல் இருந்த நாள்களே அதிகம்' என்று குறிப்பிட்டார். வறுமை அவரை நக்ஸலைட்டாக மாற்றிவிடவில்லை. இளம் வயதில் நானாஜி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அறிமுகமானது, நல்லவர்களுடனான அவரது சேர்க்கை, பின்னாளில் தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்காக, முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சிறந்த தேசியவாதி என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்துவிட்டது. இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும்
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||