புதிதாக பொறியியல் கல்லூரிகள்
''தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக்கூடும்,'' என, ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தென்மண்டல தலைவருமான மன்னர் ஜவகர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் மற்றும் எம்.பி.ஏ., படிப்பு துவங்க, 94 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 90 பேர் தமிழகத்திலும், நான்கு பேர் புதுச்சேரியிலும் கல்லூரியை துவங்க விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க, 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் எம்.பி.ஏ., படிப்பிற்கு 25 பேரும், ஒருங்கிணைந்த வளாகத்திற்கு 13 பேரும், ஆர்கிடெக்சர் படிப்பு மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு தலா ஒருவரும் விண்ணப்பித்துள்ளனர். புதுச்சேரியில் மூன்று பேர் பொறியியல் கல்லூரி துவங்கவும், ஒருவர் எம்.பி.ஏ., கல்லூரி துவங்கவும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, ஏப்ரல் 5ம் தேதி முதல் நடக்கவுள்ளது. அதன்பிறகு, மூன்று பேர் கொண்ட குழு, இக்கல்லூரிகளுக்கு நேரில் சென்று வசதிகளை ஆய்வு செய்யும். அப்பணி ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு தகுதியுள்ள கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க விண்ணப்பித்துள்ள 50 பேருக்கும் அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, பழைய கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படுவதால் மொத்த இடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே உள்ள கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு கல்லூரிக்கு அதிகபட்சமாக 540 இடங்கள் வரை மட்டுமே மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படும். இதற்கு கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் என்.பி.ஏ., தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். என்.பி.ஏ., தரச்சான்று பெறாவிட்டால், அதிகபட்சமாக 420 இடங்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||